சென்னை, அக். 30- மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் ஆகியோா் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற வெற்றிப் பயணம் திட்டம் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விடுபட்டனா். இதனால், பெண்களுக்கான இலவசப் பயணத்தில் பெண் மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொண்டாலும் அவர்களுடன் வரும் துணையாளர் ஒருவரையும் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசப் பேருந்து பயணத்தை அனுமதித்து தமிழ்நாடு அரசு அக். 27-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சலுகைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் மாநகர, நகர சாதாரண, விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், எல்எஸ்எஸ், டீலக்ஸ், பேருந்துகளிலும் (குளிா்சாதனப் பேருந்து நீங்கலாக) மற்றும் புகார் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம். தனியாக செல்ல இயலாத மாற்றுத் திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் செல்வதற்கும் அனுமதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணச் சீட்டை பேருந்து நடத்துநர் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
