சில தலைவர்களைப் பற்றி எவ்வளவு எழுதப் பட்டிருந்தாலும், அது போதாது என்ற உணர்வையே அளிக்கும். சமகாலத்திலும் அத்தகைய மதிப்புடன் திகழ்பவர், தந்தை பெரியார். 1949-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் 70-ஆம் வயதில், புதுவையில் இருந்து செயல்பட்ட ‘ஞாயிறு நூற்பதிப்பக’ உரிமையாளர் ச.சிவப்பிரகாசம் அவர்களின் சீரிய முயற்சியில் வெளியான தொகுப்பு, ‘பெரியார் இராமசாமி: அறிஞர் பலரின் கருத்துரைத் தொகுப்பு நூல்’. 200 பக்க அளவில் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் கட்டுரைகளையும் சுமந்து வெளியாகி இருக்கிறது இந்நூல். தமிழ் மின் நூலகத்தில் படிக்கக் கிடைக்கிறது.
பெரியார் குறித்து, “அவருக்கும் எனக்கும் உள்ள அக நகும் நட்பு, யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது” என்கிறார். அன்றைக்கு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி. கருத்து வேற்றுமைக்கு மதிப்பளித்தவர் பெரியார் என்பதைச் சுட்டிக்காட்டி, …”தனக்கென வாழா பிறர்க்குரியாளன்” இது பெரியாருக்குத் தான் பொருந்தும் என்றும் பாராட்டி இருக்கிறார், திரு.வி.க.
“அவரைப்பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமென்டில் பேசப்படுகிறது என்றால். பெரியாரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது” என்று வியந்துள்ளார், பெரியவர் வ.உ.சி. அவர்கள். ‘தமிழ்நாட்டின் ரூசோ என்றும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகும் உரிமை கொண்டவர்’ என்றும், ‘சுதந்தரத் திராவிடத் தனியரசுக்குப் பெரியார் இராமசாமியவர்கள், பெரும் போராட்டம் நடத்திவருகிறார்’ என்றும் பக்கங்களைப் புரட்டப் புரட்ட பெரியார் பற்றி அன்றைய முக்கிய தலைவர்கள் கொண்டிருந்த வியப்பூட்டும் கருத்துகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன.
‘திராவிடத் தந்தை’ பெரியார் ஈ.வெ. இராமசாமி என்ற பெயருடன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு காட்சியளிக்கும் பெரியாரின் புகைப்படமும், அவரது 70 ஆண்டுக் கால வாழ்க்கைக் குறிப்பும், ஒன்பது முறை அவர் சிறை சென்றது பற்றிய குறிப்புகளும், ‘நான் யார்?’ என்ற தலைப்பில் ‘விடுதலை’ இதழில், பெரியாரால் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து சிறு பகுதியும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, பேரறிஞர் அண்ணா பெரியார் குறித்து எழுதி இருக்கும் கட்டுரையில், “சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பெர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும் புரட்சிக்காரர்களும் எதற்காக உலகிலே போற்றப்படுகிறார்களோ, அவர்கள் வழி நிற்க எண்ணுகிறதோ, அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானால், அது பெரியார்தான்!” என்ற பகுதி பெரியாரின் சித்திரத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.
பெரியாரைத் தூற்றும் சிறுமதி கொண்டவர்கள், காலந்தோறும் இருந்துள்ளார்கள். ஆனால், பெரிய மனிதர்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பெரியாரை மிக உயரிய இடத்தில் வைத்துப் போற்றியுள்ளதைத்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
நன்றி: ‘முரசொலி பாசறை’ 27.10.2026
