அண்மையில் நடந்து முடித்த சில மாநில சட்ட மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதாகவும், அதுவும் வாக்குச்சீட்டு மூலம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி என்றும் மோடி பதிவிட்டிருந்தார்.
ஒரு நாட்டில் பிரதமர் இந்த அளவிற்கு மோசமாக அரசியல் செய்வார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
பா.ஜ.க. அல்லாத மாநிலங்களின் சட்டமேலவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின் 171-ஆம் பிரிவின் கீழ், சட்டமேலவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்ட பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் மறைமுகத் தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும், சில உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, பீகார், கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே இரு அவைகளைக் கொண்ட சட்டமன்ற அமைப்பு நடைமுறையில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் வாக்களிக்கும் இந்த மறைமுகத் தேர்தலின் முடிவுகள், ஏற்ெகனவே ஆட்சியில் இருக்கும் அல்லது மக்கள் பிரதிநிதிகள் சபையில் அதிக பலம் கொண்ட ஆளுங்கட்சியின் கை ஓங்கியே இருக்கும் வகையில்தான் அமையும்.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, மறைமுகத் தேர்தலில் கிடைத்த வெற்றியை ஏதோ வாக்குச்சீட்டு முறையில் ஒட்டுமொத்த மக்களும் வாக்களித்துப் பெற்ற நேரடி வெற்றியைப் போல பிரதமர் மோடி சித்தரிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர், தேர்தலின் தன்மையை மறைத்து, அரசியல் செய்து மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவதாகவும், சமூக வலை தளங்களிலும் அரசியல் தளங்களிலும் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
பிரதமர் தொகுதியான வாரணாசியிலும், அதே போல ஆர்.எஸ்.எஸ். தலைநகரான நாக்பூரிலும் பிஜேபி. தோற்றிருக்கிறதே, அதற்கு என்ன பதில்?
பிரதமர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், வாக்குச் சீட்டு முறையில் இனி வரும் தேர்தல்களை எதிர் கொள்ளத் தயாராக உள்ளாரா?
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட காகித வாக்குச்சீட்டு முறை தானே நடைமுறையில் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஜெர்மனி நாட்டின் உச்சநீதிமன்றம் ஈ.வி.எம். (EVM) பயன்பாடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், பொது மக்களால் பரிசோதிக்கக் கூடிய வெளிப்படையான தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும் தீர்ப்பளித்து, அதனை முற்றாகத் தடை செய்ததையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது.
2010ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜே. அெலக்ஸ் ஹால்டர்ேமன் தலைமையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வுக் குழுவினர் இந்திய ஈ.வி.எம்.களில் பாதுகாப்புச் சோதனைகளை நடத்தினர். இயந்திரங்களுக்குச் சில நிமிடங்கள் நேரடி அணுகல் கிடைத்தால் இதன் டிஸ்பிளே யூனிட்டை மாற்றியோ அல்லது புளூ டூத் போன்ற சாதனங்கள் மூலமாகவோ வாக்குகளைத் திசை திருப்ப முடியும் என்று ஆய்வறிக்கையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், நடந்து முடிந்த மாநில சட்டமன்ற மேலவைத் தேர்தலில் கடைப்பிடித்த வாக்குச் சீட்டு முறையை வரும் தேர்தல்களில் எல்லாம் செயல்படுத்த முன் வரட்டும் பிரதமர் நரேந்திர மோடி! இதுவே பெரும்பாலான மக்களின் கருத்தாகும்.
