உறவுகளை உண்மையாக்கும் ‘உணர்வுப் பிணைப்பு’ (2)-ந.தேன்மொழி, குடியாத்தம்

5 Min Read
- Advertisement -

உணர்வுப் பிணைப்பு இல்லாத இணையர்கள் அருகருகே இருந்தாலும், உடலளவில் நெருக்கம் இருந்தாலும் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் (emotional intimacy) இருக்காது. உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இயந்திரத்தனமாக நடந்து கொள்வார்கள். உணர்வுப் பிணைப்பு இல்லாவிடினும் உடலுறவு இருக்கும். ஆனால் மனநெருக்கம் குறைவாகவே இருக்கும். எதையும் பகிராத இறுக்கமான மனநிலையிலும் இருப்பார்கள். ‘நான் இந்த உறவில் முழுமையான மகிழ்ச்சியை அடையவில்லை’ என்பதைக்கூட வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருப்பார்கள்.

பொதுவாகவே பெண்கள் உணர்வுப் பிணைப்பை, யார் அருகில் இருக்கிறார்களோ அவர்களிடம் உருவாக்கிக் கொள்கிறார்களா என்று பார்த்தால், அருகில் இருப்பவர்களை விட ‘யார் தங்களைப் புரிந்துகொள்கிறார்களோ’ அவர்களிடம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் உணர்வுகளைக் கேட்டவுடன் அதற்குத் தீர்ப்பு எழுதாமல் அதைப்பற்றிச் சிந்திக்கக் கூடியவரிடமும், நம்பிக்கையைக் காப்பாற்றக் கூடியவரிடமும், மகிழ்வான நேரங்களில் இல்லாவிடினும் துயரமான நாள்களில் உடனிருப்பவருடனும் அதிக உணர்வுப் பிணைப்பில் இருப்பார்கள். அந்த ஒருவர் கணவராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம், குடும்ப உறவாக இருக்கலாம் அல்லது இவர்கள் யாருமே இல்லாத வேறு நபராகவும் இருக்கலாம்.

அதேபோல இங்கே இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். உணர்வுப் பிணைப்பு ஏற்பட்டு விட்டாலே அது காதலாக மாறிவிடும் என்பது உண்மையன்று. அது பாலியல் ஈர்ப்பினால் ஏற்பட்டது என்றும் சொல்ல முடியாது. இந்த இரண்டையும் கடந்தது என்றும், இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டது என்றும் சொல்லலாம்.

காதல், பாலியல் ஈர்ப்பு சமயத்தில் தொடர்புடையதாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. நாள்கள் செல்லச் செல்ல உணர்வுப் பிணைப்பு ஆனவர்களோடு நெருக்கமாகும் வாய்ப்பும் அதிகம். அது பெண்ணின் துணையாக இல்லாமல் வேறு ஒருவருடன் உணர்வுப் பிணைப்பானால் அது நாளடைவில் காதலாகவும், பாலியல் ஈர்ப்பாகவும் மாறும் வாய்ப்புகளும் உண்டு எனலாம்.  வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளும் போது, தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை நம்பிக்கையோடு பகிரும்போது அது நெருக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். அதேபோலக் குடும்பத்தினருக்குத் தெரியாமல் தொடர்ச்சியான உரையாடல், தனியாகச் செலவிடும் நேரம் இவை நெருக்கத்தை உருவாக்கலாம்!. “நீ இப்படிப் பேசுவது, பழகுவது, பகிர்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று ஒருவர் சொல்வதை ரசிக்க ஆரம்பிக்கும்போது அங்கே நெருக்கம் வருகிறது. என்ன நடந்தாலும் அதை முதலில் அவரிடம் தான் சொல்ல வேண்டும் என்ற தவிப்பு கலந்த இயல்பான எண்ணம் எழும். இவர் மட்டுமே நம் எண்ணங்களுக்கு முழுமையான வடிகால் என்று நம்புவது, மனதைத் திறந்து பேசும் சுதந்திரத்தை அவரிடம் அனுபவிப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமானது. மற்றவர்களிடம் சொல்லாத தனிப்பட்ட உணர்வுகளைக் குறிப்பிட்ட ஒருவரிடம் மட்டுமே பகிரத் தொடங்குவது ஆகியவை அவருடன் இயல்பாக உணர்வுப் பிணைப்பு உருவாகக் காரணமாகிறது.

இந்த உணர்வுப் பிணைப்பு எந்த அளவு முக்கியமானதோ, எந்த அளவு வெளிப்படைத் தன்மையைக் கொடுக்கிறதோ அதன் மறுபக்கம் வேறு சில விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எப்போதும் ஓர் அதிகப்படியான உணர்வின் எல்லைகளுக்குள் இருக்கும்போது அது ஆரோக்கியமான எல்லைகளை இடிக்கத் தொடங்குகிறது. அதாவது, ஒருவர் மீது அளவுக்கதிகமான சார்பு நிலையாக மாறும்போது பிரச்சினைகள் தொடங்குகின்றன. அவரிடம் மட்டுமே எல்லாம் பகிர்வேன், அவருடன் பகிர முடியாதபோது பதற்றப்படுவது, அவருடைய கவனம் உடனடியாக இல்லையெனில் கோபம், பொறாமை வருவது இதெல்லாம் சிக்கலின் அறிகுறிகளாக இருக்கும். தன் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஒருவருக்காகவே இருப்பது, நாள்கள் செல்லச் செல்ல மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு யாருடன் உணர்வுப் பிணைப்பு ஆக இருக்கின்றோமோ அவருக்கே மன உளைச்சலை ஏற்படுத்துவதும் நடக்கும். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், “நீயும் நானும் தனித்தனி மனிதர்கள், ஆனால் நான் வெகு ஆழமாக உன்னுடன் இணைந்திருக்கிறேன்” என்பது போன்றது.

இதையும்தாண்டி நீயும் வெகு ஆழமாக என்னுடன் மட்டுமே இணைந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது உணர்வுப் பிணைப்பு என்பதையே தவறாக மாற்றும். ஒருவருடனான உணர்வுப் பிணைப்பு என்பது நல்லது. அது உறவை ஆழமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும். அது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் திறந்த மனதுடன் பேசுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கேட்பதையும் பழக வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட எல்லைகளை, நேரங்களை, நண்பர்களை, விருப்பங்களை மதிக்கவேண்டும். அதைவிட முக்கியம், நம்முடைய உணர்வுகளை உணர்வுப் பிணைப்பில் இருப்பவர் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமென்று நாம் கருதுகிறோமோ அதே அளவு நம்பிக்கை, பாதுகாப்பை அவருக்குத் தரவேண்டும்.

ஆண் என்பதால் நான் உனக்குக் கட்டுப்பட்டே இருப்பேன் என்பதும், அவள் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்பதும் தவறே. அதுதான் ஆரோக்கியமான உணர்வுப் பிணைப்பாக இருக்கும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உணர்வுப் பிணைப்பு என்பது வெறுமனே ஒருவருடன் ஏற்படும் மனநெருக்கம் மட்டும் இல்லை. அவள் தன்னுடைய உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பையும், தன்னை ஒரு முழுமையான மனிதராக உணரத் தொடங்குவதையும் குறிக்கும் ஒரு முக்கியமான உளவியல் அனுபவம். பல தலைமுறைகளாகப் பெண்களிடம் ‘பொறுத்துக்கொள்’, ‘அதிகம் பேசாதே’, ‘குடும்பத்திற்காக விட்டுக்கொடு’ என்று சொல்லப்பட்ட சமூகத்தில் அவர்களின் உணர்வுகளுக்கு இடமில்லாமல் ஆகிவிட்டது. ஒரு பெண் தன் உணர்வுகளை அடையாளம் காணத் தொடங்கும்போது அவளுக்கு அவளைப்பற்றிய புரிதலும் மாறுகிறது. தனக்குப் பிடிப்பது என்ன, பிடிக்காதது என்ன, எதனால் காயப்படுகிறாள், எதனால் மகிழ்கிறாள் என்பதை அவள் உணரத் தொடங்குகிறாள்.

வாழ்க்கையில் உண்மையில் எதை விரும்புகிறாள் என்பதை அவள் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கு கிறாள். அதனால் உணர்வுப் பிணைப்பு என்பது பெண்களைப் பொறுத்தவரை மற்றொருவருடன் உருவாகும் தொடர்பாக மட்டுமல்லாமல் தன் இதுவரை பூட்டி வைத்த மனக்கதவைத் திறக்கும் சாவியாகவும் மாறுகிறது. பெண்களின் வாழ்க்கையில் இந்தச் சமூகம் காலம் காலமாக ஏற்படுத்தி வைத்திருந்த கோட்பாடுகளான ‘கோபம் கூடாது’, ‘குடும்பத்தின் தேவை மட்டுமே முதன்மை’, ‘தன் விருப்பங்களைப் பின்தள்ள வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகளை உடைக்கக் கூடியதாக, தகர்க்கக் கூடியதாக இந்த உணர்வுப் பிணைப்பு இருக்கிறது. மறைத்து வைத்த உணர்வுகளை எல்லாம் சுலபமாகக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தும் கருவியாக இந்த உணர்வு இணைப்பு இருக்கிறது. இதனால் பெண்ணின் உணர்வுலகம் தனிநபர் சார்ந்து, குடும்பம் சார்ந்து என்றிருந்தது போய் நட்பு, சகோதரத்துவம், ஒருவருக்கொருவரான ஆதரவு, கலை, எழுத்து, பேச்சு, சமூகப் பங்களிப்பு போன்ற பல உணர்வுப்பூர்வமான இணைப்புகள் உருவாகலாம். இது பெண்ணின் உலகத்தை விரிவுபடுத்தும், பெண்ணின் பரிமாணத்தை விரிவடையச் செய்யும். இத்தனை காலமாய் அடங்கியிருந்த பெண்ணின் குரல் உணர்வுப் பிணைப்பு ஆவதால் அவள் குரல் ஒலிக்கக்கூடிய குரலாகவும் மாறும்.

தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு உண்டு என்று உணரத் தொடங்கும்போது தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளிலும் அதிக விழிப்புணர்வுடன் இருப்பாள். உணர்வுப் பிணைப்பு ஆவது எனக்கு என்ன வேண்டும் என்ற சுயசிந்தனையை அவளுக்குத் தருகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் பெண்ணை எப்போதும் யாரோ ஒருவருடன் உணர்வுப் பிணைப்பில் இணைத்துக் கொண்டிருப்பது அன்று. மாறாக தன் உணர்வுகளை அறிந்த பெண் தன் வாழ்க்கையின் உரிமையாளராக மாறவேண்டும் என்பதேயாகும். இதுதான் பெண்ணின் ஆரோக்கியமான உணர்வுப் பிணைப்பு ஆகும். பெண்களைப் பொறுத்தவரை உணர்வுப் பிணைப்பு என்பது பெண்ணின் உணர்வுகளுக்கு இடம் கொடுப்பது, அவளுடைய அனுபவங்களை மதிப்பது, அவளுடைய குரலை அங்கீகரிப்பது, அவள் விரும்பிய வாழ்க்கையைப் பற்றி அவள் சிந்திப்பது. அவளுடைய உணர்வுகளை யாரோ ஒருவர் அனுபவிப்பது என்பது போய், அவளுடைய உணர்வுகள் அவளுக்கே என்னும் மிகச்சிறந்த மனிதச் சூழல் உருவாக இதே உணர்வுப்பூர்வமான இணைப்பு தேவைப்படுகிறது. எனவே உணர்வுப்பூர்வமாக நெருங்கி இருங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *