முச்சந்து மன்றத்து முக்கிய சவுக்கடிகள்! (1)

6 Min Read
- Advertisement -

மக்கள் பரப்பில் சரி பகுதிக்கு மேல் உள்ள நமது மகளிரின் மாண்புகளும், மதிப்புகளும் சிதைக்கப்பட்டு வரும்போது ‘வாயற்ற ஜீவன்களாகவே’ – வளர்க்கப்பட்டும் பழக்கப்பட்டும் வரும் அவர்களது அடிமை விலங்குகளை ஆணாதிக்கம், மதக் கட்டளைகள், சடங்கு, சம்பிரதாயம் என்ற அந்த இரும்புத் தளைகளுக்கு அணிமணிகள், அலங்கார ஆடைகள் மூலம் அதனை நிரந்தரப் படுத்தி அவர்களை வாழ்நாள் முழுவதிலும் ‘சம்பளமில்லாத வேலைக்காரி களாகவும், ஏன் விலக முடியாத அடிமைகளாகவும், படுக்கை அறை பாலினப் பண்டங்களாகவும், பிள்ளை பெறும்   – அதுவும் ‘ஆண் பிள்ளை மட்டுமே பெற்றால் சரி; பெண் குழந்தையை  பெற்றால் தனி வகை தண்டனை’ என்ற ஆண் ஆதிக்க சமூகத்தின்மீது தந்தை பெரியார் தொடுத்த போரும், விடுத்த கணைகளும் இலக்கு நோக்கியே சென்று, பல மாறுதல்களை ‘மூளை விலங்கொடிப்புகளாகச் செய்யும் பணித் தொண்டர்கள், தோழர்களாகிய எ்ஙகளைப் போன்றவர்களுக்கு பாலை வனத்து ஓயாசிஸ் (Oasis) போல  இக்கால எழுத்துலகத்தில்,  துணிவுடன் தங்கள் கருத்தினை உரக்கக் கூவும் இலக்கியங்களான – சிறுகதை இலக்கியங்களை பெரும் புரட்சியாக நடத்தி வரும் ‘மூச்சந்து மன்றத்தின்’ சக தோழர் காளியைக் கண்டேன். பேசியபோது பெருமிதம் பொங்கிற்று. அவர் மூன்று புத்தகங்களை அளித்தார்.

அதில் ஒன்றின் தலைப்பு,

‘அவள்

இவள்

உவள்’

என்பது.

அதில் உள்ள ஓர் அணிந்துரையே    அவர்களுக்குச் சரியான அறிமுகம் என்பதால் நமது வாழ்வியல் வாசக  நேயர்களுக்கு அதை கருத்து விருந்தாக முன் வைக்கின்றோம்! படியுங்கள்!!

‘‘தழல் வீரத்தில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ?’’

அவள் இவள் உவள். யார் இவர்கள்? இவர்கள் தனித்தன்மை வாய்த்தவர்களா? வினோதமான வர்களா? யானையின் காற்தடங்களைப் போல அழுத்தமாகச் சுவடு பதித்துச் செல்லும் இவர்கள் நம் எல்லோருக்கும் பொதுவானவர்கள். ஆவேசமாகத் துடிக்கும் ஆசைகளோடும் கனவுகளோடும் மூச்சுத்திணற ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் கருகிக் கொண்டிருக்கும் மனுசிகள். நதி மீது சருகைப்போல நீரோட்டத்திற்கு இசைவதே வாழ்வென்றாகிப் போனவர்கள். ஓயாது பெய்யும் மழையை நிறுத்தமுடியாது – அது இயற்கை. ‘அவள் இவள் உவள்’ வாழ்வின் திசைக்கோல் அவள்களிடமில்லாதிருப்பது இயற்கைக்கு முரணானது.

இந்த முரண்கள்தான் கதையாசிரியர்கள் மீரா, முனைவர் கோமதி, காளி, Dr. நாகஜோதி நால்வரும் தேர்ந்தெடுத்துள்ள கதைகளின் மய்யப்புள்ளியாயிருக்கிறது. ரயில் போல வேகமாகத் தடதடத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆண் மய்ய உலகின் கண்களுக்குப் புலப்படாத கணங்களை நெருக்கமான காட்சிகளாக சிருஷ்டித்து ‘நீ வாழும் லட்சணத்தைப் பார்’ என முகத்தில் அறையும் கதைகள் ஒவ்வொன்றும்! இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்கப் பெண்களின் அவலமும் தத்தளிப்பும் மட்டுமல்ல, யதார்த்தத்தின் வெளிச்சத்தில் சமூகத்தின் போலி விழுமியங்களும் மீறமுடியாதபடி அது பெண்களைச் சிறைவைத்திருக்கும் நீதிக்குப் புறம்பான கட்டுக்கோப்புகளும் அற எழுச்சியையும் மீறலையும் கோருகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்

இந்த நூலின் கதைவெளி, பெண்களின் வாழ்வையும் அவர்கள் புழங்கும் எல்லை களையும் அருகாக அழைத்துக் கொண்டுவருகிறது. கோவிந்த சாமியின் வாழ்வில் கமலம் யாருமில்லை. யாரென்ற அடை யாளத்தையே மெல்ல மெல்ல அழித்து ஒரு பெண்ணை இயந் திரமாக மாற்றுவதே திருமணத்தில் நடக்கிறது. அகிலாவுக்குத் தனக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லக்கூடத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதைவிட அவளுக்குப் பிடித்தமானதைத் தெரிவு செய்வதற்கு அவளுக்கு அனுமதியில்லை என்பதே உண்மை. சிறு வயதிலிருந்தே அவளுக்கு என்ன பிடிக்கும் என்றோ, என்ன தேவை என்றோ கேளாமல், பெற்றோர் வாங்கிக் கொடுத்ததையே ஏற்றுப் பழகிப்போனவளுக்கு “உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?” என்று கணவன் கேட்கும்போது பதில் சொல்லத் தெரியவில்லை. அவளது பெற்றோர் அவள் மீது திணித்ததை அப்படியே கணவனும் தொடர்கிறான். அவனுக்குப் பிடித்ததையே, “உனக்குப் பிடிக்கும்தானே” எனத் திணிக்கிறான்.

அகிலாவின் மற்றொரு பிரதியாக துளசி கதாபாத்திரத்தைக் கொள்ள முடிகிறது. தன்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும் தயாரில்லாதவர்களின் உலகத்தை விட்டுத் தள்ளித் தனக்கென ஒரு கூட்டைச் சிருஷ்டிக்கிறாள். சுவாரசியம் என்ன என்றால், அவளைப் புரிந்துகொள்ளாதவர்களின் உலகில், அதே வாழ்வின் அடுக்குகளுக்குள் தான் அவள் சிருஷ்டித்த தனியுலகும் உள்ளது. புகார்களைக் குறித்து அலட்டிக்கொள்ளாமல், தான் சிருஷ்டித்த உலகில் இஷ்டப்படி குறைந்தது, சில பொழுதுகளை கழிக்க அவளுக்கு முடிகிறது. தனக்குப் பிடித்தாற்போலச் சாய்ந்து, கால்நீட்டிப் படித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது. தனக்குப் பிடித்த புத்தகங்களை அநாயாசமாகப் படிக்க முடிகிறது.

ஆண் மய்ய சிந்தனையும் அதிகாரப் போக்கும் வழிநடத்தும் குடும்ப அமைப்புகளில் திருமணம் ஒன்றே பெண்ணுக்கு இருக்கக் கூடிய ஒரேயொரு பிணைப்பு. அப்பிணைப்பு அறுந்துபோகும்போது பெண்ணினது வாழ்வில் ஏற்படும் நிச்சயமின்மையும், நிர்க்கதி நிலையும் அப்படியே அவளை முடக்கிவிடுகிறது. தனது வாழ்வு வீட்டுச் சுவர்களுக்குள் சுருங்கிவிட்டதை உணரத்தக்க தன்னுணர்வோடு லைலா இருந்தபோதும், அவளை எதுவோ தடுத்துக் கொண்டிருக்கிறது. தனது எல்லைக்குள் யாரையும் அனுமதிக்க முடியாத இறுக்கத்தால் அவள் மனம் பூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பூட்டுகள் அவளே உருவாக்கிக் கொண்டதல்ல. சமூக அமைப்பின் போலி அலங்காரங்கள் உருவாக்கியவை. அவளுக்கும் அது புரிகிறது. ஆனாலும் அவளால் மீறமுடியவில்லை. ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மீது விழுந்துள்ள கட்டுகளின் நீட்சியால் அங்கங்கு நெஞ்சு முட்டுகிறது. இந்தத் தொகுப்பில் மீண்டும் மீண்டும் என்ற கதை அப்படியானது. கதையில் அவளுக்குப் பெயரில்லை. சாப்பாட்டை எடுத்து வை, சட்டையை அயன் பண்ணு என உத்தரவுகள் போடும் கணவனுக்கு அவள் பெயரைச் சொல்லிப் பேசவோ, அழைக்கவோ அவசியமே இல்லை! திருமணத்தின் பின் மேல்படிப்பு படிக்கவைக்கிறோம் எனச்சொல்லித் திருமணம் செய்தவனிடம், கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் கடைசி நாள் நெருங்கிவிட்டது எனச் சொல்லும் மனைவியை, “ஒரு ஆம்லெட்டுப் போட்டு எடுத்துட்டு வாயேன்” என்கிறான். இப்படியான அயோக்கியத்தனங்கள் ஆண் உலகில் வெகு சாதாரணம் என்பதற்கு அப்பால் வேறொன்றுமில்லை. ஆண்களின் மூளையில் சிந்திக்கும் பெண்ணுக்கு மிகச் சிறந்த உதாரணம் அவள் தாய். “ஏன்டி லூசா நீ, பச்சப்புள்ளைய வச்சுக்கிட்டு படிக்க போறேன்னு சொல்ற. அறிவிருக்கா?” எனக் கேட்பதாகட்டும், ‘‘பிள்ளைக்கு நான்கு வயது வரைப் பாலூட்டணும்’’ என அறிவுரை கூறுவதாகட்டும், அவை எல்லாம் அந்தப் பெண்ணின் வாயிலிருந்து வந்தாலும் அவரது மூளை, பெண்ணை அடக்கியாளும் ஆண் மய்ய சிந்தனைகளாலே தொழிற்படுகிறது. தான் என்னவெல்லாம் செய்து எப்படியெல்லாம் வாழ்ந்தோமோ, வாழ்கிறோமோ அப்படியேதான் தன் மகளும் வாழ்ந்தாகணும் என்ற தாயின் போக்கில் அவள் இல்லை. “இதோ இந்த வானம் மாதிரி எல்லையில்லாத கனவு காணணும். அப்படியே றெக்க மொளச்சு நீ சுதந்திரமா பறக்கணும்” என, தன் சின்ன மகளிடம் சொல்வது இருளில் சிறகடித்து வரும் மின்மினிப்பூச்சியாக நம்பிக்கை தருகிறது. கூடவே அண்மையில் வாசிக்கக் கிடைத்த அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான நயீரா வஹுத்தின் ஒரு வரியும் நினைவலையில் மிதந்து வருகிறது. “தன் குழந்தையைக் காக்கும் தாயை விடப் பெரிய போர்வீரன் யாருமில்லை.” தன் குழந்தையை ஆபத்துகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் காப்பது மட்டுமல்ல, அவளின் சிறகுகள் ஒடிந்துவிடாமல் காப்பதும் என்றே புரிந்து கொள்கிறேன்.

“உனக்கு நான் முக்கியமா. உன் வேலை முக்கியமான்னு யோசிச்சு சொல்” என்று சொல்கிற காதலனிடம், “எனக்கு என் வேலைதான் முக்கியம், போடா” என்று வாழ்ந்து காட்டும் ப்ரீத்திகள் இந்த உலகுக்கு அதிகம் அதிகம் தேவை. திட்டு வாங்கிக்கொண்டே, ஏச்சுப்பேச்சுகளைச் சகித்துக் கொண்டே வீட்டு வேலை செய்து பிள்ளைப் பெத்துப் போடும் இயந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களிலிருந்து, “ஆசையா வர்ரேன்னு நெனச்சவரைக்கும் எனக்கும் பிடிச்சது மச்சான், ஆனா உன் மனசுல என்னய ஆளனும்ன்ற நெனப்புத்தான் இருக்கோன்னு நெனைக்கும்போது மனசு ஒத்துக்கல” என்று சொல்லிப் படுக்கையில் விலகியிருக்கும் மாராயிகள் வேண்டும். “எனக்கும் மூளை, மனசு எல்லாம் இருக்கென்று மதிச்சா, என்னைத் தேடி வா” என்று சொல்லிவிட்டு அவனைத் தனியாக விட்டுப்போகும் மாராயியின் ரவுத்திரம் வேண்டும். “இப்படிக் கத்துறத நிறுத்து. உன்னோட ஷு தானே? வேணும்னா நீயே பாலிஷ் போட்டுக்க. இனிமேல் நான் செய்ய மாட்டேன் சங்கர்” என்று நெத்திப்பொட்டில் அடித்துச் சொல்லும் யாழினிகள் வேண்டும்.

(தொடரும்)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *