ஒரு பாலஸ்தீனக் கர்ப்பிணிப் பெண்ணின் போர்க்குரல்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

– இ.பா.சிந்தன், பெல்ஜியம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு புதன்கிழமையும் பிரசல்ஸ் என்கிற ஒரு நகரில் நடக்கும் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்வதற்காக, இரயிலில் பயணித்துச் சென்றேன். போராட்டம் நடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே போராட்ட இடத்திற்குச் சென்றுவிட்டேன்.

அங்கு பெரியளவுக்குக் கூட்டம் இல்லை. அது ஒரு கடைவீதி என்பதால், ஆங்காங்கே மக்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஒன்றிரண்டு பேர்தான் பாலஸ்தீனக் கொடியை வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இவ்வளவுதானா கூட்டம் என்று நினைத்துக்கொண்டு, அந்தக் கொடியை வைத்துக் கொண்டிருந்தவருக்கு அருகில் போய் நின்றேன். மணி சரியாக ஏழு ஆனபோது, ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் அப்படியே நகர்ந்து போராட்ட இடத்திற்கு வந்து குவிந்தனர்.

“ஓகோ, அப்படின்னா இவ்வளவு நேரமா இங்கதான் சுத்திட்டு இருந்தீங்களா” என்று மனதில் நினைத்துக் கொண்டே இருக்கையில், அங்கு வந்தவர்கள் எல்லாமும் ஒரு பெரிய வட்ட வடிவில் நின்றுகொண்டார்கள். அந்த வட்டத்தில் நானும் இணைந்து நின்றேன்.

பாலஸ்தீனத்தில் பட்டம் விடும் குழந்தைகளை எல்லாம் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய இஸ்ரேலிய அரசைக் கண்டித்து, அந்த வட்டத்திற்கு நடுவில் பல பட்டங்கள் வைக்கப்பட்டன. பாலஸ்தீனக் கொடியைப் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பட்டத்தை ஒருவர் பறக்கவிட்டுக்கொண்டும் இருந்தார்.

அப்போது மைக்கும் ஒலிபெருக்கியும் ஒருங்கே கொண்ட, கையில் வைத்துப் பேசும் ஒரு மெகாபோனை ஏந்திக்கொண்டு ஒருவர் வந்தார்.

அதை முகத்திற்கு நேராக ஏந்திக்கொண்டு, “பாய்காட் இஸ்ரேல்”, “பாய்காட் அமெரிக்கா” என்று அவர் ஒவ்வொரு வரியாக முழக்கம் எழுப்ப, வட்டத்தில் சுற்றியிருந்த அனைவரும் அவர் சொல்வதை அப்படியே ஒருமுறை உரக்கச் சொன்னோம்.

சிறிது நேரம் கழித்து, அந்த மெகா போனை வட்டத்தில் அவருக்கு அடுத்ததாக இருந்தவரிடம் கொடுத்தார். அவரும் அவருக்குத் தெரிந்த முழக்கங்களை எழுப்பினார். பின்னர், அவருக்கு அடுத்தவரிடம் மெகாபோன் கைமாறியது. இப்படியே வட்டத்தை வட்டமிட்டு வந்தது அந்த மெகாபோன். ஆக, ஒரு தலைவர் பேசி, எல்லோரும் கேட்டுக்கொண்டு நிற்காமல், போராட்டத்தில் பங்கெடுத்த எல்லோரும் தலைவர்களாக மாறிப் பேசியது பார்க்கவே அழகாக இருந்தது. ஒருசிலர் தங்கள் கைகளில் மெகாபோன் வந்ததும், எதுவும் பேசாமல் அடுத்து நின்றவருக்கு கைமாற்றிவிட்டதையும் பார்க்கமுடிந்தது. சில வாரங்கள் பழகியதும் பேசுவார்கள் என்று நானே நினைத்துக்கொண்டேன்.

அப்போது அந்த வட்டத்தில், வயிற்றில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மெகாபோன் சென்றது. ஒரு கையில் பத்து வயதிருக்கும் சிறுவனைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். மகனைப் பிடித்துக்கொண்டிருந்த கையை விடுவித்துக்கொண்டு,  மெதுவாக அந்தக் கையில் மெகாபோனை வாங்கினார். அவருக்கு அடுத்ததாக நின்றவரே முன்வந்து மெகாபோனை வாங்கியிருந்தால், அந்தப்பெண் இந்தளவுக்கு சிரமப்பட்டிருக்க வேண்டாமே என்று நினைத்தேன். ஆனால், யாரும் அவருக்கு உதவ முன்வராததைப் பார்த்து, நான் ஓரடி முன்னே வைத்து நகர்ந்தேன்.

அப்போது… மெகாபோனை அடுத்தவரிடம் கொடுக்காமல், தன்னுடைய முகத்திற்கு நேராக உயர்த்திப் பிடித்தார் அந்தப் பெண்.

“பாய்காட் இஸ்ரேல்” என்று முழக்கமிட்டார்.

அந்தக் குரல், இதற்கு முன்னர் எழுப்பிய அனைத்துக் குரலையும் விடவும் பலம் மிக்கதாக இருந்தது. ஒட்டுமொத்த கடைவீதியும் அதிர்ந்தது.

அதன்பிறகாவது அந்த மெகாபோனை மற்றவர் களிடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தார். பாலஸ்தீன வரலாற்றையே ஒரு கதைபோல முழக்கமிட்டார். பாலஸ்தீனர்களின் பிரச்சினை என்ன, எங்கிருந்து எல்லாம் தொடங்கியது, பாலஸ்தீனர்களின் உண்மையான கோரிக்கைகள் என்னென்ன என அனைத்தையும் முழக்கங்கள் வழியாகவே அடுக்கிக் கொண்டே போனார். அவர் ஒவ்வொரு வரியையும் சொல்லச்சொல்ல, ஒட்டுமொத்த கூட்டமும், அதை அப்படியே திருப்பிச் சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணுடன் நாங்களும் பயணித்தோம். ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி என மூன்று மொழிகளிலும் மிகச் சரளமாக முழக்கங்கள் எழுப்பினார்.

ஒரு கட்டத்தில்,

“பாலஸ்தீனத்தில் இது வேண்டுமா, அது வேண்டுமா என்று கேட்கிறார்கள்.”

“எங்களுக்கு 2026 பாலஸ்தீனம் வேண்டாம்”

“எங்களுக்கு 2023 பாலஸ்தீனம் வேண்டாம்”

“எங்ளுக்கு 1967 பாலஸ்தீனம் வேண்டாம்”

“எங்ளுக்குத் தேவை 1948க்கு முந்தைய பாலஸ்தீனம்தான்”

“அதில் ஒரு துண்டையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றாரே பார்க்கலாம்!

அவ்வளவு அழகான அரசியல் தெளிவுடனான முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தார்.

இறுதியாக, 1948இல் இஸ்ரேலால் அடித்துப் பறிக்கப்பட்ட பாலஸ்தீன கிராமங்களின் பெயர்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக்கொண்டே போனார். கையில் ஒரு துண்டுச்சீட்டு இல்லை. யாரையும் பார்த்துப் பேசவும் இல்லை. டெலிபிராம்ப்டர் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டிப்போடும் திறனுடன் முழங்கினார்.

போராட்டம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தேன். உலகில் நடக்கும் எந்தப் போரையும் தொடங்கியதோ, நடத்தியதோ, அதனால் இலாபம் பார்த்ததோ, பலனடைந்ததோ பெண்களாக இருப்பதில்லை. ஆனால், எல்லாப் போரிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். அவர்களுடைய விருப்பமில்லாமல்தான் இங்கே போர்களும், இனச் சண்டைகளும், ஜாதிச் சண்டைகளும், ஆயுத அடிதடிகளும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

எவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்பட்டாலும், பாலஸ்தீனப் போராட்டம் இத்தனை ஆண்டுகளாக நீர்த்துப்போகாமல் தொடர்வதற்கு பாலஸ்தீனப் பெண்களை மிக முக்கியமான காரணமாகப் பார்க்கிறேன். அவ்வளவு உறுதியான எதிர்ப்புக்குரல் அவர்களுடையது.

அப்படியான ஒரு குரலாகத்தான் அந்தப் பெண்ணின் குரலைப் பார்த்தேன். அவர் யார், அவருடைய பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், அவரது கதை என்ன போன்ற எந்த விவரங்களையும் நான் கேட்கவில்லை. அவை தேவைப்படவும் இல்லை. ஆனால், அவருடைய குரல் இப்போதும் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது… இருக்கிறது… இருக்கும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *