நவில்தொறும் நூல் ஒன்று இதோ! – (2)

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மேலும், வழிபாட்டு முறைகளிலும் சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்து ஆரியப் பண்பாடு வேறுபட்டது என்பதைத் தொல்லியல் தரவுகள்வழி பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆரிய வழிபாடு தீயுடன் தொடர்புடையது; திராவிடச் சடங்குகள் நீருடன் தொடர்புடையது. குறிப்பாக, மொகஞ்சதாரோவில் காணப்படும் பெருங்குளியலிடம் (Great Bath) நேரடியாக நீர் சடங்குடன் தொடர்புடையதாக அமைந்திருந்தது என்று அய்ராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார்.

சிந்துவெளியில் காணப்படும் செங்கற்களும் நகரங்களும் முக்கியமானவை. செங்கல்லும் நகர அமைப்புகளும் வேதப் பண்பாட்டிற்கு அந்நிய மானவை. வேள்விகளுக்கு மட்டுமே செங்கல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. செங்கல் செய்யும் தொழில்நுட்பமும் முக்கியமானது. பெரும் எண்ணிக்கையிலான செங்கற்கள் சிந்துவெளியில் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிந்துவெளியில் வணிகமும் அதையொட்டிய பெரும் நகரமைப்புகளும் காணப்படுகின்றன. வேதப் பண்பாட்டில் வணிகம் என்பது முக்கிய மில்லை. அங்கு மேய்ச்சல் சார்ந்த விலங்குகள் முக்கியமானவையாக இருந்துள்ளன. அவை நாடோடி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந் துள்ளன. இத்தகைய செயல்பாடுகளும் ஆரியர் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பே பெரும் நாகரிகத்தை இந்நிலம் கொண்டி ருந்ததைச் சுட்டுகின்றன. ஆனால் அதன்பிறகு நிகழ்ந்த பல்வேறு செயல்பாடுகளால் புராணங்களும் இதிகாசங்களுமே இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு எனப் பரப்பப்பட்டன.

வாழ்வியல் சிந்தனைகள்

இந்த நிலையை மாற்றியவர் சர் ஜான் மார்ஷல். அந்த வரலாற்றுத் திருப்புமுனை 1924 செப்டம்பர் 20 அன்று நடந்தது. இலண்டனில் இருந்து வெளியான ‘தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ என்கிற பத்திரிகையின் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர் களுக்கு இந்திய வரலாறு 5000 ஆண்டுகள் பழைமையானது என்றும், வேதத்திற்கு முற்பட்டது என்றும், அங்கு பேசப்பட்ட மொழி திராவிட மொழியாக இருக்கக்கூடும் என்றும் அறிவித்தார் ஜான் மார்ஷல்.

மார்ஷலின் அறிவிப்பு அவ்வளவு எளிதில் நிகழ வில்லை. அந்த வரலாற்றை முழுவதுமாக அறிந்து கொள்ள ஒரு நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

சார்லஸ் மேசன்

இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 1827இல் சிப்பாயாக இருந்த ஜேம்ஸ் லூயிஸ் என்பவர் இராணுவத்தைவிட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார்; அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனது பெயரை சார்லஸ் மேசன் என்று மாற்றிக் கொண்டார். புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதே அவருக்குப் பிடித்திருந்தது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்தார். தான் பார்க்கும் இடங்களை எல்லாம் குறிப்புகளாக எழுதி வைத்தார்; படங்களாகத் தீட்டி வைத்தார்.

வாழ்வியல் சிந்தனைகள்

இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பிறகு 1829இல் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் கண்டவை அவரை வியப்பில் ஆழ்த்தின. இதுவரை அறியப்படாத பண்டைய நகரங்களின் இடிபாடுகளைக் கண்டார். இந்த இடிபாடுகள் எவ்வளவு தொன்மையானவை என்பது குறித்தும், அது பெரும் நாகரிகத்தைச் சேர்ந்தது குறித் தும் அன்று எதுவும் அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் கண்டதைக் குறிப்புகளாக எழுதியும் படங்களாக வரைந்தும் வெளியிட்டார்.

ஹரப்பா நகரின் சிதைவுகள் பற்றி எழுத்துகளின்வழி முதல் குறிப்பை அளித்தவர் சார்லஸ் மேசன். 1842ஆம் ஆண்டில் பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் சுற்றித்திரிந்து தனது பயண அனுபவங்களை ஒரு நூல் வடிவில் வெளியிட்டார் (Narratives of Various Journeys in Balochistan, Afghanistan and the Panjab). இதுவே சிந்துவெளி குறித்து பகிரப்பட்ட முதல் பதிவாகும். ஆனால் இதற்குப் பின்னரும் சிந்துவெளி நாகரிகம் நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. அது ஜான் மார்ஷல் என்னும் பெரும் ஆளுமையின் வருகையை எதிர்நோக்கி இருந்தது.

சிந்துவெளிப் பகுதியில் பல சேதங்கள் நிகழ்ந் திருந்தன. 1857இல் லாகூர்-முல்தான் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றபோது, அதற்கான செங்கற்கள் சிந்துவெளிப் பகுதியில் இருந்த சிதைவுகளிலிருந்து எடுத்துவரப்பட்டன. அதாவது பண்டைய காலத்தில் கட்டமைக்கப்பட்ட வலிமையான சுவர்களிலிருந்து இந்தச் செங்கற்கள் பிரித்து எடுக்கப்பட்டு ரயில்பாதை அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இச்செயல்பாட்டின் மூலம் ஒருபுறம் சிந்துவெளியின் பகுதி குறித்த கவனம் பரவலானது என்றாலும், அதன்மூலம் சிதைந்தவை ஏராளம். கிட்டத்தட்ட 160 கி.மீ. தூரத்திற்கு சிந்துவெளிப் பகுதியிலிருந்து தரமான செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் எவ்வளவு சிதைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இப்படித்தான், சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளியில் பயன்படுத்தப்பட்ட சுட்ட செங்கற்கள் பிரிட்டிஷாரின் கவனத்தை ஈர்த்தன. இது சிந்துவெளி குறித்து அறிந்துகொள்வதற்குத் தொடக்கமாக அமைந்தது.

ஜேம்ஸ் பிரின்ஸ்செப் & ஏகன் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஷ்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு அசோகரின் கல்வெட்டுகளாகும். இதனை ஜேம்ஸ் பிரின்ஸ்செப் (James Prinsep) என்கிற ஓர் ஆங்கில நாணயவியலாளர் கண்டுபிடித்தார். இத்தோடு அவர் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்து முறையைப் புரிந்துகொண்டு வாசித்து விளக்கமளித்தார். இது இந்தியாவின் பண்டைய காலம் குறித்த ஆய்வுகளில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது. வரலாறு என்னவென்று தெரியாமல் இருட்டில் மூழ்கடிக்கப்பட்டிருந்த சமூகம்தான் இந்தியச் சமூகம். இதன் பிறகே புத்தர், அசோகர் உள்ளிட்டவர்கள் குறித்த சமண, பவுத்தக் கல்வெட்டுகளைக் கண்டறிவதற்கும் புதிய வழிகள் பிறந்தன.

வாழ்வியல் சிந்தனைகள்

அதேபோல் தென்னிந்தியாவில் — தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பகுதிகளில் — கல்வெட்டாய்வுகளை முன்னெடுத் தவர் ஏகன் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஷ் (Eugen Julius Theodor Hultzsch) என்ற ஜெர்மானியர். இவர்தான் மாமல்லபுரச் சிற்பங்களும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் பல்லவர்களால் உருவாக்கப்பட்டன என்பதையும் ராஜராஜனால் தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டப் பட்டது என்பதையும் உலகிற்கு முதன் முதலில் அறிவித்தவர். இவர்தான் தென்னிந்தியாவில் கல்வெட்டுகளைப் படியெடுத்தல், படித்தல், பதிப்பித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டவர். இத்தகைய தொடர் செயல்பாடுகளின் வழியே இந்திய வரலாறு குறித்து அறிய முடிந்தது.

1858இல் கிழக்கிந்தியக் கம்பெனி யின் ஆட்சி யிலிருந்து இந்தியா நேரடியாகப் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் வந்தது. அதன்பிறகு இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது.

நன்றி: ‘‘ஜான் மார்ஷலை
ஏன் கொண்டாட வேண்டும்?’’
ஆர். பாலகிருஷ்ணன் –  சுந்தர் கணேசன்
வெளியீடு: ரோஜா முத்தய்யா ஆராய்ச்சி நூலகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *