வள்ளுவர் குறள் – பகுத்தறிவுப் புலவர் வெற்றியழகனின் அறிவுத்தேன் குடம்…

4 Min Read

அண்மைக் காலங்களில் திருக்குறளுக்குப் பல முற்போக்காளர்களின் உரை வந்து கொண்டுள்ளன.

முன்பு நமது பண்டிதர்களாலும், அவர்கள் வயப்பட்ட அரசுகளாலும் – ‘அதிகாரப் பூர்வமான உரை கொண்ட திருக்குறள்’  – பரிமேலழகர் என்ற பார்ப்பனப் புலவரால் எழுதப்பட்ட உரையே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது  – மற்றும் பல உண்டு என்றாலும்!

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்கள் ஆழ்ந்த தமிழ் நுண்ணறிவாளர். அவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்!

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில் கடவுள் வாழ்த்து எனத் தொடங்கும் முதல் அதிகாரமும் மற்றும் சில அதிகாரங்களும் வள்ளுவர் எழுதியவை அல்ல; இடைச் செருகல்கள்  என்றே அறிஞர்  வ.உ.சி. அவர்கள் அழுத்தந் திருத்தமாகக் கூறுயுள்ளார்.

அதேபோல்,  திருக்குறளுக்கு மற்றும் பல பகுத்தறிவாளர்களும் உரையெழுதிப்  ‘புதுமை’ படைத்துள்ளனர்.

இராவண காவியப் பெரும் புலவர் குழந்தை அவர்களது உரை, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய உரை, முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘குறளோவியம்’ என்ற தலைப்பிலான உரை!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் குறளுக்கு உரை எழுதத் தொடங்கினார். சிலவற்றோடு அது தொடர முடியாத நிலையில், புரட்சிக் கவிஞரின் உரையின் ஒரு பகுதி வெளி வந்தது.  கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய புதிய உரை ஒன்றும் அண்மையில் வெளி வந்தது.

வாழ்வியல் சிந்தனைகள்

இன்னும் பலரும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப குறளுக்கு உரை – விளக்கம் எழுதுகின்றனர்!

முன் காலத்தில், புத்தக அலமாரியில் பூட்டப்பட்டுக் கிடந்த திருக்குறளை, மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்தி, எளிய விலையில் மலிவுப் பதிப்பாக வெளியிட்டுப் பரப்பிய பெருமை தந்தை பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்குமே உண்டு!

அதனால் திருக்குறளைத் தங்கள் வசமாக்கி  ஹிந்து மத நூல் போல் காட்ட, கோல்வால்கர் தொடங்கி, இன்றைய கால கட்ட,  புத்தி கெட்ட ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்கள்  (அன்றைய ஆர்.என்.ரவி முதற்கொண்டு இன்றைய பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வரை) காவிச் சாயத்தைவள்ளுவர் படத்திலும், மக்கள் மனதிற்கும் அடித்துப் பார்க்க, மூக்கை நுழைத்து உடைபடுகிறார்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சுயசிந்தனையாளர், அவ்வப்போது தனது பேச்சிலும், எழுத்துகளிலும் வள்ளுவர் குறளில் கூறியதை அறிவியல் ரீதியாகப் படம் பிடித்துக்காட்டத் தவறவில்லை.

அண்மையில் நமது பகுத்தறிவுப் புலவர் ஏறு மானமிகு வெற்றியழகன் அவர்கள்  ‘திருக்குறள் – பகுத்தறிவு உரை’  என்ற கையடக்கத் திருக்குறள் நூலை எளிய உரை விளக்கம் மூலம் வெளியிட்டுள்ளார்!

‘நுண்மாண் நுழைபுலம்’ உடைய அவரின் பகுத்தறிவு உரை – மிகுந்த தகவல்களோடு, தனித்த முறையில் குறைந்த விலைக்கு வெளிவந்துள்ளது!

அதில் சில முக்கிய கருத்துகள் இதோ:

  1. ‘எப்படித் தொல் காப்பியத்தில் இடைச் செருகல் செய்தனரோ, அதனைப் போன்று திருக்குறளிலும் இடைச் செருகல் செய்திருக்கின்றனர்.

(வ.உ.சி. சுட்டிக் காட்டியதை– சுட்டுகிறார்)

  1. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமானால் 1330 குறள்களிலும் ஏதாவது ஓரிடத்திலாவது ‘கடவுள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்!

‘கடவுள்’ என்ற சொல்லையே பயன்படுத்தாத திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடுவாரா?

  1. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று கொள்ளாமல், அறப்பால், பொருட்பால், காமப்பால் என்று இவர் அமைத்துள்ளார்.
  2. திருக்குறள் ஓர் இலக்கண நூலே! இலக்கண வழுவின்றிச் சரியாக நெய்யப்பட்ட நூல் திருக்குறள் ஒன்றே!
  3. ‘திருக்குறளில் சமற்கிருதச் சொல்’ என்ற சிறு தலைப்பிட்டு உள்ள அரிய – அறிய வேண்டிய செய்தி!

திருக்குறளில் சமற்கிருதச் சொல்

‘‘திருக்குறளில் சமற்கிருதச் சொல் 125 இருக்கிறது என்று வையாபுரிப் பிள்ளை கூறினார். அதற்குப் பிறகு கி.வ. செகந்நாதன் 94 சொல் என்றார்; இலாசரசு என்ற செருமானிய அறிஞர் அறுபத்து அய்ந்துதான் இருக்கிறது என்றார்; ச. தண்டபாணி தேசிகர் அய்ம்பது சொல் இருக்கின்றன என்றார்; தேவநேயப் பாவாணர் பதினேழுதான் இருக்கின்றன என்றார்; பெருஞ்சித்திரனார் பன்னிரண்டு இருக்கின்றன என்றார்; அருளியார் ஆறுதான் இருக்கின்றன என்றார்; இளங்குமரன் இரண்டுதான் இருககின்றன என்றார்; கால்டுவெல் ஒன்றுகூட இல்லை என்றார்;  நானும் ஒரு சொல்கூட வேற்றுமொழிச் சொல் இல்லை என்கிறேன்’’ என்றுதெளிவுபடுத்தியுள்ளார்!

  1. ஆரியர் தமிழக வருகைக்கு முன் எழுந்தது திருக்குறள் என்றும் இவரது கருதுகோள் உரை கண்டுள்ளார் புலவர் – இதில் நமக்கு மாறுபட்ட கருத்துஉண்டு.

தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்ற முறையில் தந்தை பெரியார் அவர்கள் வள்ளுவர் ‘கற்பு’ என்னும் பெண்களுக்குரிய ஒருதலைக் கட்டுப்பாடு ‘பெண் வழிச் சேறல்’ அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவை ஆணாதிக்கத்தின்  அப்பட்டமான வெளிச்சக் கருத்துகள் என்பதிலும் நமக்கு நூலாசிரியரிடம் மாறுபட்ட கருத்து உண்டு.

பகுத்தறிவு என்பது அறிவுச் சுதந்திரமே! எனவே அருமையான, புதுமையான அரிதான   பகுத்தறிவு ஒளிவீசும் திருக்குறள்களின் உரை கொண்ட உரையாசிரியர் புலவர் வெற்றியழகனின்   இந்நூல் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூலாகும்!

படித்தேன் – படி – தேன்!

தித்திக்கும்தேன் – எத்திக்கும் பரவட்டும்!

மெய்ப் பொருள் காண்பது– அவரவர் உரிமை தானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *