சென்னை, அக். 26– சென்னை வானிலை ஆய்வு மய்யத்தில் அமைந்துள்ள வானிலை ரேடார் (Radar) கருவியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரேடார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மழை மேகக் கண்காணிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மழை மேகங்கள் எந்த திசையில் நகர்கின்றன, எந்தப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கணிக்க இந்த ரேடார் கருவி மிகவும் முக்கியமானதாகும். தற்போது இதில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், ரேடார் அடிப்படையிலான கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணிகளில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ரேடார் கருவி முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, வழக்கம்போல மழை மேகக் கண்காணிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டது.
