கேரள அரசுத் தேர்வாணையத்தைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்த முன்னாள் ஆளுநர்! பினராயி விஜயன் கண்டனம்

2 Min Read
- Advertisement -

திருவனந்தபுரம், அக். 26- கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கடந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் அரசு தேர்வாணையத்தில் பல்வேறு நியமன முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு மாறுதலாகி சென்ற கேரள முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், கேரள அரசு தேர்வாணையத்தை கலைக்க வேண்டும் என்று கூறி குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மாறுதலாகி செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். முன்னாள் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 316ஆம் பிரிவின்படி அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு 6 ஆண்டுகள் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்துக்கு முன்னதாக உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அரசியலமைப்புச் சட்டத்தின் 317ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீதான புகார் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரையை அளிக்க வேண்டும். அதன் பின்னரே குடியரசுத் தலைவர் இதுதொடர்பாக முடிவெடுக்க முடியும்.ஆனால் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற விசாரணை எதுவும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது அவர்களை பதவியில் இருந்து நீக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் கிடையாது.

பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக ஆளுநர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்கெனவே அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் சட்டவிரோத தலையீடுகளின் தொடர்ச்சியாகவே உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே ஆளுநர் செயல்பட வேண்டும்.இந்த விவகாரத்தில் அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. எனவே ஆளுநரின் இந்த நடவடிக்கையை மாநில அரசு ஆதரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியலமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கைகளை அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆதரிக்கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசிடம் தெரிவிக்காமல் கேரள அரசு தேர்வாணையத்தை கலைக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்த முன்னாள் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் அனில்குமார் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *