சென்னை, அக்.25- ஒன்றிய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
தமிழ்நாட்டில், ஆசிரியர் தேர்வு வாரியம், ‘டெட்’ தேர்வுகளை நடத்துகிறது. கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ‘டெட்’ தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 4, 5ஆம் தேதிகளில், சிறப்பு டெட் தேர்வு நடந்தது. மொத்தம் 2 லட்சத்து, 17 ஆயிரத்து 519 பேர் எழுதினர். அவர்களில், 1 லட்சத்து 8,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; 1.09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனுக்காக, வரும் டிசம்பர் மாதம் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பால், பணிபுரியும் ஆசிரியர்கள், டெட் தேர்ச்சி பெற, பள்ளிக் கல்வித் துறை முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
அடுத்தடுத்து சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு எனும் பி.எட்., எம்.எட்., படிப்பை முடித்து, ‘டெட்’ தேர்வுக்காக காத்திருப்போர் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
