சூத்திரப் பட்டமும், சிறுநீர்க் குடுவையும் (1)

6 Min Read
- Advertisement -

தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி “சுயமரியாதை இயக்கத்தை”த் துவக்கினார். அது தொடங்கிய நாள் பற்றி சரியான பதிவு இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்ததும் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதாக அவரே குறிப்பிடுகிறார். தந்தை பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை:   “சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925இல் என்னால் தொடங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் தொடங்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக் கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும்” என்று தந்தை பெரியார் தொடங்குகிறார்.

மேற்கொண்டு தந்தை பெரியார் அடுத்துத் தன்னைப் பற்றி தொடருகிறார், “எனக்கு சிறு வயது முதற் கொண்டே ஜாதியோ, மதமோ கிடையாது. ஆனால் நிர்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கை யோ, பயமோ கொண்டிருந்ததுமில்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ எனக்கு அவசியமென்று தோன்றாத எந்த காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன். எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து, யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டு பிடிக்க முடியவே இல்லை” என்று தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கிய தந்தை பெரியார் அடுத்து என்ன கூறுகிறார் பார்ப்போம்!

“எனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டேன். அப்பள்ளிக்கூடம் ஈரோடு டவுனுக்குச் சற்று விலகிய தூரத்தில் இருந்தது (இப்போது அது நடு ஊராய் விட்டது). அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார்களின் வீடுகள் உண்டு. எண்ணெய் செக்கு சதா ஆடிக் கொண்டு இருக்கும். மூங்கில் பாய், முறம், கூடை பின்னுகிறவர்கள் தெருவோரங்களில் குடிசைக் கட்டிக் கொண்டு தங்கள் வேலை செய்வார்கள். சில முஸ்லிம்கள் வீடும் குடிசை ரூபமாக அங்கே உண்டு. ஆகவே அப்பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதக்காரர்கள் (கிருஸ்துவர்கள்), சாய்புகள் ஆகியவர்கள்” என்று தந்தை பெரியார் தான்பள்ளிக்கூடம் அமைந்திருந்த சூழ்நிலையையும், அங்கு சூழ்ந்திருந்த மக்களையும் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும்…!

தந்தை பெரியார் தன்னிலை விளக்கத்தைத் தொடருகிறார், “அந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்தைச் சூழ்ந்திருந்த இந்த ஜாதிக்காரர்கள் வீட்டில் மற்ற ஜாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்த மாட்டார்களல்லவா? ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்கூடம் போகும்போது எனக்கு ஞாபகமாக சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் “அங்குள்ள ஜாதியார்களிடம், “பொழங்கக்கூடாது”. அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்து விடாதே! வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி” யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோல இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்கு தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளரை கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். பிறகு அதன்மீது தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளே எடுத்துக் கொண்டு போகும். உள்ளேயும் ஊற்றிக் கழுவும். இதற்குள் எனக்கு தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதித் தண்ணீர் மூக்கிலும், உடல் மேலும் விழும். பகுதித் தண்ணீர்தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய், இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை” என்ற நாயக்கர் குடும்பத்து ராமசாமி என்ற சிறுவன் அடுத்து என்ன செய்தார் என்று பார்ப்போமா?

“நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவனே ஒழிய ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டு, விட்டுப் போகிறேன் என்று அதிருப்திப் படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்? ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர் வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். முன்னமே குறிப்பிட்டது போல அவரின் கண்களை அதிகம் உறுத்தியது “ஜாதி” தான் என்பதும் அந்த ஜாதிக்கு அடிப்படையான மதமும்தான் என்பது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் தெரியும்.

“இந்த எண்ணத்தின் மீதே சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்கு உள்ள குறைகள் நீங்கி விடும், தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்து விடும். உற்சாகத்திற்கு வேண்டுமானால் போராட்டங்களும், குறைகளும், அதிருப்திகளும், கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக் காக ஓய்வெடுத்துக் கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும் போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவது போல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும், பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும், மனிதனல்லாத மற்ற ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்துதான் தீரும். சரீரமில்லாத ஆத்மாவுக்கும், கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும் கூட “மோட்சமும்”, “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலையில்லாமலும், அனுபவமில்லாமலும் மோட்சம், முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீர வேண்டியதே உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்” என்று தந்தை பெரியார் பொதுக் காரியத்திற்கு வந்தக் காரணத்தை விளக்குகிறார்.

“இதைத் தான் “நிஷ்காமிய கர்மம்” என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்திற்கு பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப் படுவது முன்னுக்குப் பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில் நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர்பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாக செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே “ஒரு பலன் ஏற்பட வேண்டும்” என்பதற்காக வேண்டி செய்வது என்பது அர்த்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தேர்ந்தெடுக்க நமக்கு சரியாகவோ, தப்பாகவோ உரிமை இருக்கிறது என்பதாகவே, இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலையை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யவில்லை, உற்சாகத்தையே ஊட்டி வருகிறது” என்று தந்தை பெரியார் கூறுகிறார். தந்தை பெரியார் பொது வாழ்க்கைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து அதைத் தீவிரமாக செயல் படுத்துவதில் எவ்வளவு ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார் என்பது இதன் மூலம் விளங்கும்.

(வரலாறு தொடரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *