ஹூக்ளி ஆற்றில் துர்கா சிலைகளைக் கரைக்கும்போது, ஸநாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சிலைகளைத் தொட அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் பாபுகாட்டில் துர்கா தேவி சிலைக் கரைப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது: ஹூக்ளி ஆற்றில் துர்கா சிலைகளைக் கரைக்கும்போது, ‘‘ஸநாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சிலைகளைத் தொட அனுமதிக்கப்படுவார்கள். மத மரபுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஹூக்ளி ஆற்றுக்குள் சிலைகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுபவர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். சிலைக் கரைப்பு நிகழ்ச்சியின் ‘புனித’த் தன்மையைப் பாதுகாக்க, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், வேதங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இது ஒரு திருவிழா என்றாலும், முதன்மையாக இது ஒரு மத நிகழ்ச்சியாகும்.’’ இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
இந்நிலையில், மகாசப்தமி நாளான கடந்த 17-ஆம் தேதி மாலை, கொல்கத்தாவின் சோர்பாகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
இந்து மதத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றுபோதும்.
ஹூக்ளி ஆற்றில் துர்கா பூஜையின்போது, ஆற்றில் சிலையைக் கரைப்பது என்பது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது என்று சமாதானம் சொல்லலாம்.
விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் பொம்மைகளை நீர் நிலைகளில் உடைத்துக் கரைப்பதும், துர்கா பூஜையின் போது துர்கா சிலைகளை அடித்து நொறுக்கி நீரில் கரைப்பதும் அந்தக் கடவுள்களை மதிப்பதாகுமா அல்லது அவமானபடுத்துவதாகுமா?
தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தபோதும், இராமன் படத்தை எரித்தபோதும் கூக்குரல் போட்ட பக்த சிகாமணிகளே, தாங்கள் வணங்குவதாகக் கூறும் கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கி நீர் நிலைகளில் கரைப்பது – அசல் முரண்பாடல்லவா!
கொல்கத்தாவில் நடந்துள்ள சம்பவம் மிகவும் கேவலமானது; அதுவும் ஒரு முதலமைச்சரே அதைச் செய்திருப்பதுவெட்கக் கேடானதும், சட்ட விரோதமும் ஆகும்.
ஸநாதனத்தைப் பின்பற்றுவோர்தான் துர்கா சிலைகளைத் தொட அனுமதிக்கப்படுவார்களாம்.
ஸநாதனம் என்றால் என்ன என்பதை பிஜேபியைச் சேர்ந்த அந்த முதலமைச்சர் விளக்குவாரா?
இவ்வளவுக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்களே இந்துக்கள்தாம். அப்படி இருக்கும்போது, அதில்கூட ஸநாதனத்தைப் பின்பற்றுபவர்கள் – பின்பற்றாத வர்கள் என்ற பிரிவினை ஏன்? எங்கிருந்து குதித்தது?
ஸநாதனம் என்றால் வருணாசிரமம் என்றார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி.
வருணாசிரம தர்மம் என்றால் ஜாதி தர்மம் என்று பொருள். ஒரு மதத்துக்குள்ளேயே பிறப்பி்ன அடிப்படையில் பேதம் கற்பிக்கப்படுவது – அந்த மதத்திற்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?
இந்த இலட்சணத்தில் ‘இந்துக்களே ஒன்று சேருங்கள்’ என்று சங்கராச்சாரிகளும், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி கும்பலும் குரல் கொடுப்பது தான் வேடிக்கை!
சங்பரிவாரில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் – தாழ்த்தப்பட்டவர்கள் மறு சிந்தனைக்கு உட்பட வேண்டாமா?
தீண்டாமை என்பது குற்றம் – அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் 17ஆவது பிரிவு.
கொல்கத்தாவில் ஒரு முதலமைச்சரே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளாரே! நியாயப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?
‘‘ஸநாதனத்தை பின்பற்றுவோர் மட்டும் தான் துர்கா சிலையைத் தொடலாம்’’ என்கிறாரே ஒரு முதலமைச்சர். அவர் கூறும் ஸநாதனத்திற்கு என்ன அளவுகோல்?
ஒருவர் ஸநாதனத்தைப் பின்பற்றுபவரா, இல்லையா என்பதை எந்த அளவுகோல் வைத்து கண்டுபிடிப்பார்?
அப்படியே பார்க்கப் போனாலும் இவர்களை நம்பும் – கூறும் இந்து மதத்தில் நாத்திகர்களுக்கும் இடம் உண்டே! இல்லையென்று மறுக்க முடியுமா?
தசரதன் அமைச்சரவையில்கூட ‘ஜாபாலி’ என்ற நாத்திகர் இடம் பெற்றதாக இராமாயணம் கூறுகிறதே!
ஒரு முறை ‘கல்கி’ இதழ்கூட தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அதன் அட்டைப் படத்தில் தந்தை பெரியார் படத்தைப் போட்டு ‘தென்னாட்டு ஜாபாலி’ என்று எழுதி இருந்ததே!
‘‘ஹூக்ளி ஆற்றுக்குள் சிலைகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுபவர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும் என்று காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்று ஒரு முதலமைச்சர் கொஞ்சமும் இங்கிதமின்றிக் கூறுவது எல்லாம் ஏற்கத் தக்கதுதானா?
காவல்துறையினருக்கு யார் என்ன ஜாதி? ஸநாதனத்தை பின்பற்றுபவர்களா, இல்லையா என்று கண்டுபிடிப்பதுதான் வேலையா?
ஒருக்கால் காவல்துறை அதிகாரியே ஸநாதனத்தைப் பின்பற்றாத வருணாசிரமப் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் என்ன செய்வது?
ஸநாதனத்தைப்பின்பற்றுபவர்களா, இல்லையா என்று கண்டுபிடித்துதான் காவல்துறைக்கு ஆள் எடுப்பார்களா?
ஆர்.எஸ்.எஸ். (பிஜேபி) ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத் திட்டம் ஏதும் நடக்காது; மாறாக ஸநாதனத்தைக் காப்பது, பார்ப்பனிய உயர் ஜாதித் தன்மையைத் தூக்கிப் பிடிப்பது, சிறுபான்மை மக்களை இம்சைப்படுத்துவது, அவர்களின் வழிபாட்டுத்தலங்களை உடைப்பது, அவர்களின் குடி உரிமையைப் பறிப்பது இன்னோரன்ன. அழிவு வேலைகளைத்தான் தங்கள் ஆட்சியின் கடமை என்று இரத்தத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாள்தோறும் அழிவுப் பணிகளையும், இழிவுப் பணிகளையும் செய்வதைத் தான் தங்கள் கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பக்திப் போதை ஏறி, அவர்கள் விரிக்கும் வலையில் வீழும் பார்ப்பனரல்லாதார் சிந்திக்க வேண்டும்!
