அமராவதி, அக்.24 ஆந்திராவில் சாலை ஓரம் தேநீர் குடித்த பக்தர்கள் நான்கு பேர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விவரம் வருமாறு:
ஆந்திர மாநிலம் விளியாநகரம் மாவட்டம் தேங்கடா கிராமத்தைச் சேர்ந்த சில பக்தர்கள் ஒரு பேருந்தில் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பவானி பக்தர்கள் என்பதால், பவானி மாலை அணிந்திருந்தனர். கடந்த 22.10.2026 அன்று அதிகாலை, ரவிகிமம்புடு மய்யம் என்ற இடத்தில் தேநீர் அருந்துவதற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. பக்தர்கள் பேருந்தை விட்டு இறங்கி, சாலையோரம் தேநீர் அருந்தினர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, அவர்கள் மீது மோதியது. அதில், 3 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். இன்னொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 3 பக்தர்கள் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
