‘விடுதலை’ ஏடு பற்றி அறிஞர் அண்ணா

3 Min Read

சென்ற வாரம், சென்னை சர்க்கார், திராவிட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணி புரியும் “விடுதலை” தினசரிக்கு ரூபா இரண்டாயிரம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

ஓர் இனம், தங்கள் குறைபாடுகளையும், தாங்கள் படும் வேதனைகளையும் கூறி, அவை ஏற்பட்ட விதத்தையும், அவை ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதையும் விளக்கி, அக்குறைபாடுகள் ஒழிய வேண்டும் – நீக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பெற்று, அதன் பொருட்டு உழைத்து வரும் முறையைத் தவறென்றும் – சட்ட விரோதமென்றும் கருதி, அடக்குமுறைகளை அள்ளி வீசுவது ஜனநாயக ஆட்சிமுறைக்கு முற்றிலும் புறம்பானது.

மக்கள் சர்க்கார் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் – மக்களுக்காக உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராயுள்ள சர்க்கார் – மக்களின் மனப் பண்புகளை நன்கறிந்த சர்க்கார், ஓர் இன மக்களின் சமுதாய முன்னேற்றமன்றிப் பிறிதொன்றையும் குறிக்கோளாகப் கொள்ளாது பணிபுரிந்து வரும் ‘விடுதலை’க்கு ஜாமீன் கேட்பதை விவேகமுடைய செயலென்றோ, விரும்பத்தக்க முறையென்றோ எவரும் கூறமாட்டார்கள்.

விழிப்பும் – விளக்கமும்

திராவிடனே! உன் சமுதாயம் சேறும், பாசியும் நிறைந்த குட்டை போல் ஆகிவிட்டது. சேறும், பாசியும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்! அந்த நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டு விட்டது. எனவே, அதை உபயோகித்து உன் உடலை நோய்க்கு ஆளாகும்படி செய்து வதைந்து போகாதே, சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உபயோகப் படுத்திக் கொள்” என்று ‘விடுதலை’ கூறுகின்றது.

இப்படிக் கூறுவது தவறு – ‘எனவே இரண்டாயிரம் ரூபாய் ஜாமீன் கட்டு’ என்று சர்க்கார், மக்களின் உரிமைகளைப் பாது காக்கும் சர்க்கார் கூறுகின்றது. இது நியாயமா?

‘‘ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால் இன்று! நீ ஆண்டி யாகக் கிடக்கிறாய் – வீரனாய் – விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய், பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடிருந்த நீ இன்று செங்கை ஏந்திச், சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆன தன் அடிப் படையை உணரவில்லையே!” என்று கூறி விளக்கமும் – விழிப்பும் உண்டாக்கி வரு கின்றது ‘விடுதலை’

‘அறிவுத்துறையிலோ புத்துணர்ச்சி
வாழ்க்கைத் துறையிலோ வளம்!’

இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமென்று மக்கள் சார்பில் அரசி யலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது; ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?

“கீழ்த்தர ஜாதியாய் – நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய்  – உழைத்தாலும் உழைப் பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் – பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டு விட்டாய் – கல்வியில் 100-க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்று விட்டாய் – அரசியலிலோ, பிற துறைகளிலோ கேவலம் கீழ்த் தரச் சிப்பந்தியாய்ச் சீர்குலைக்கப் பட்டு விட்டாய்” என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத் துறையில் புத்துணர்ச்சியையும், வாழ்க்கைத் துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது.

ஜாதிச் சனியனையும், மதப் பூசல்களையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், கல்வியின்மையையும் நாட்டிலிருந்து விரட்டி யடிப்பதையே  நாட்டமாகக் கொண் டுள்ளதாகச் சொல்லப்படும் சர்க்கார், இத் துறைகளில் சர்க்காரின் கொள்கைகளுக்குச் சாதகமான முறையில் பணியாற்றி வருவதைத் தவறான காரியம் என்று எண்ணி “எடு இரண் டாயிரம் ரூபா ஜாமீன்” என்று கேட்கிறது. இது முறையா?”

– தலையங்கம் ‘திராவிட நாடு’ இதழில் 27.6.1948

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *