கேள்வி 1: ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் பட்டுக் கம்பளம் விரித்ததால்தான் காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டது என்றும், தமிழ்நாட்டில் உள்ளே நுழையவிடாமல் தடுப்பணை அமைத்ததால்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்ற வரலாற்று உண்மையை அறியாமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, நீதிபதி வி.லெட்சுமி நாராயணன் “தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் நிலையில், அமைதிப் பூங்கா என சொல்லப்படும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அரசு அனுமதி மறுக்கலாமா” எனக் கூறியுள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 1: ஆடுகளையும், ஓநாய்களையும் ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்ப்பது எவ்வளவு ஆபத்து? என்பதை உணர்த்தும் ஒரு தீர்ப்பு.
மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமும் மற்ற இயக்கங்களும் ஒன்றா? நோயும், மருத்துவமும் சமமாகுமா?

கேள்வி 2: ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் கருதி, தன்னலம் கருதாது, ஓயாது உழைத்து வரும் கருப்புச்சட்டைத் தொண்டர்கள் ‘நீட்’ தேர்வை தடை செய்யக்கோரி கேட்ட பிரச்சார அனுமதியை மறுத்து ஆளும் அரசு அவசர அவசரமாக நூற்றுக்கணக்கான காவல் துறையினரை பெரியார் திடலில் கொண்டு வந்து குவித்தார்களே…! இப்போது ரூபாய் 135 கோடி மதிப்புள்ள ‘மெத்’ போதைப் பொருளை பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து கடத்த மூளையாகவும் பின்புலமாகவும் இருந்து வந்த நாகை தவெக வழக்குரைஞர் பூபாலனை புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசு காலம் தாழ்ந்து நிதானமாக கைது செய்துள்ளார்களே!
– குடந்தை. க.குருசாமி
பதில் 2: நாடே கேட்கும் கேள்வி இது. ‘வெற்றி’ லேபிள் என்ன லைசென்சா என்று நாடு கேட்கிறது – எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காதது நமது காட்சி என்ற ஆட்சி!
கேள்வி 3: கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளை உணராமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சரியா?
– வேம்பு, மதுரை
பதில் 3: உங்களுக்கு இருக்கின்ற மக்கள் நலக் கவலையும், அக்கறையும் மூடப்பக்தர்களுக்கும், பக்தியை வைத்துப் பிழைப்பவர்களுக்கும் இல்லையே… என்ன செய்வது?
கேள்வி 4: இப்பொழுது நடைபெறும் த.வெ.க. ஆட்சிக்கும் – முன்பு நடைபெற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு…?
– கண்ணதாசன், செங்கல்பட்டு
பதில் 4: முன்பு நடந்தது ஆளுமையுள்ள ஆட்சி! இப்போது – (இதுவரை) ஒப்பனையுள்ள காட்சி!

கேள்வி 5: நவநீதம் பிள்ளைதான், நோபல் பரிசு பெறும் முதல் தமிழரா?
– த.வீரன், தென்காசி
பதில் 5: முன்பு தமிழர் என்ற பெயரில் பார்ப்பனர்கள் சிலர் வாங்கியுள்ளார்கள். ஒரு பெண் – தமிழ் வம்சாவளி. அதனால் முதல் தமிழர் என்பது சரியானது.
கேள்வி : தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக விலைவாசி விண்ணைத் தொடுமளவு உயர்ந்து வருகிறதே, இதுகுறித்து முதலமைச்சரும், அமைச்சர்களும் கண்டுகொள்வதில்லையே, ஏன்?
– க.யுவகாளி, காஞ்சி
பதில் 6: 4ஆம் கேள்விக்கான பதிலே இதற்கும் சரியான விடையாகும்.
கேள்வி 7: கடந்த ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசில் தூர் வாரப்பட்டு, வடிகால் வசதி செய்ததால்தான் தற்போது கடும் மழை பெய்தாலும் மழை நீர் தேங்காமல் விரைவில் வடிந்து வருகிறது. அதை த.வெ.க. ஆட்சியின் சாதனை என்கிறார்களே?
– கல்பனா, ஆம்பூர்
பதில் 7: விதைத்து – உழவாரம் செய்தவர் அதன் கனிகளை உண்ணுவது எளிதானதல்ல.பால் கறந்து, மோராக்கி, வெண்ணெய்யாக்கி அதனைக் கடைந்து, நெய்யாகத் தருபவர்கள் வம்சம் அந்த நெய்யினையே குடிக்க உரிமை இல்லை என்ற ஸநாதன தர்மம் மாதிரி இது ஒரு வகை!
கேள்வி 8: பல நூற்றாண்டுகளாக மன்னர்கள், பக்தர்கள், பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகள் மூலம் கோயில்களுக்குச் சொத்துகளாக சேர்ந்து வருகின்றன. இவை ‘இறைவனுக்கே’ என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் அனுபவிப்பது பற்றி…?
– குமரன், மாமல்லபுரம்
பதில் 8: இல்லாத இறைவன் சாக்கில் கொழுக்கும் பொல்லாத புரோகிதர் ஏற்பாடு – கோயில்களே அரசு வருமானத்தைப் பெருக்கிட ஒரு ‘குறுக்கு வழி’ என்பது அதன் வரலாறு -‘அர்த்த சாஸ்திரம்’. அரசுக்குரியதை ‘அவாள்’ கொழுக்கச் செய்துகொண்ட ஒரு ‘பறிமுதல்’ – ஆக்கிரமிப்பு.இப்போது புரிகிறதா பானகல் அரசரின் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் ஏன் வந்தது என்று!
கேள்வி 9: டில்லியில் ராம்லீலா என்று இராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளை எரிப்பது போன்று – இந்த ஆண்டு 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி’ பொம்மையையும் எரிக்கப் போகின்றார்களாமே – ஏன்?
– பா.சுகுமார், சென்னை
பதில் 9: இராமனைக் காட்டி ஆட்சியைப் பிடித்த ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க.வின் ஒப்பனை கலைந்து அதன் ‘அரசியல் முகம்’ அனைவருக்கும் தெரிய வருகிறது இதன் மூலமாக! இல்லையா?
கேள்வி 10: ஸநாதனத்திற்கு எதிர்ப்பு என்றாலே – பல படித்த முக்கியப் பிரமுகர்களும் கூட துள்ளிக் குதித்து ஸநாதனத்திற்கு வக்காலத்து வாங்குவது – ஸநாதனம் பற்றி அறியாததாலா? அல்லது அதீத மதப் பற்றினாலா?
– எம்.முருகன், மங்களாபுரம்
பதில் 10: இரண்டையும் தாண்டி தங்களது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதனால்!
