ஜப்பான் பயணம் – என் பார்வையில்…-மதுரை சே.முனியசாமி

11 Min Read
- Advertisement -

09.10.2026ஆம் தேதி காலையில் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறி, சென்னைக்கு மதியம் இரண்டரை மணிக்கு போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து நேரே பெரியார் திடலுக்குச் சென்றேன். அங்கே திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் “சாப்பிட்டு விட்டீர்களா?” என்றார். “இல்லை!” என்றேன். உடனே ஒரு தோழரிடம் சொல்லி சாப்பாட்டை வாங்கி வரச்சொன்னார். அதனைச் சாப்பிட்டுவிட்டு. அங்கு கொஞ்ச நேரம் தங்கியிருந்து விட்டு இரவு ஏழரை மணிக்கு சென்னை விமான நிலையம் கிளம்பினோம்.

சென்னை விமான நிலையத்தில் ஒன்பது மணி அளவில் பொதுச்செயலாளர் அன்புராஜ், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் தோழர்களும்  ஜப்பானில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு 5-ஆம்  மாநாட்டுக்கு வழி அனுப்ப வந்திருந்தார்கள். அன்புராஜ் அவர்கள் எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தி ஜப்பான் மகா நாட்டுக்கு செல்வதற்கு வாழ்த்துக் கூறினார்.

ஜப்பான் சென்றவுடன் அடுத்த நாள் காலை 11 மணி அளவில் நாங்கள் ஜப்பானில் உள்ள சிறிய ஒரு பூங்காவிற்குச் சென்றோம். எங்களை வழி நடத்தியவர் வி.சி.வில்வம். அவருடன் ஜப்பானில் வாழும் தோழர் சந்தீப் உடன் வந்தார். அவர் மதுரையைச் சேர்ந்தவர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எங்களோடு அமெரிக்கா மருத்துவர் சோம.இளங் கோவன், அவருடைய இணையர் சரோஜா அவர்களும் பூங்காவிற்கு வந்தனர். நாங்கள் அய்ந்து பேர் மட்டும் 150 அடி உயர இராட்டினத்தில்  கீழே இருந்து மேலே போய் அங்கிருந்து பார்த்தோம். டோக்கியோ நகரம் முழுவதும் தெரிந்தது. அந்த இராட்டினத்தில்  ஏறுவதற்கு முதியவர்களுக்கு 450 யென், இளைஞர்களுக்கு 800 யென் என்று  வசூல் செய்கிறார்கள் அந்தத் தொகை அனைத்தையும் சோம.இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.

பிறகு பேருந்தில் ஏறி பாலாஜி உணவகத்திற்குச் சென்றோம்.  சாப்பிட்டுவிட்டு மதியம் ரெண்டு மணி அளவில் மாநாடு நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.

மாநாட்டு அரங்கத்தில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்  கனிமொழி எம்.பி., தமிழ்நாடு அரசின் திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர்
டி.ஆர்.பி.ராஜா, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பொருளாதார வல்லுநர் டாக்டர் விஜயபாஸ்கர், திராவிடர் இயக்க ஆய்வாளர் விக்னேஷ் ராஜாமணி, மனித உரிமை செயற்பாட்டாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஜப்பான்  நாட்டைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். பேராளர்கள் ஏழு நாடுகளில் இருந்து மாநாட்டிற்கு வந்திருந்தார்கள்.

பெரியாரின் வாழ்க்கையையும் அவரது தொண்டினையும் ஜப்பான் மொழியில் வெளியிட்ட திராவிட இயக்க உணர்வாளர்கள் செந்தில் குமார், கமலக்கண்ணன் ஆகியோரும், ஜப்பான்  தோழர்களான பலரும் இந்த மாநாட்டுப் பணிகளைப் பல மாதங்களாகத் திட்டமிட்டு செய்திருந்தார்கள்.ஜப்பான் நாடு பழைமையான பண்பாட்டைக் கொண்டது. தாய் மொழிக்கு முன்னுரிமை தருவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. திராவிடம் என்பது மொழி, இன, சமூக நீதிக் கொள்கைகளை வகுத்து,அதனைப் பரப்பி பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் சிந்திக்க செய்கின்ற இயக்கம். ஜப்பான் மண்ணில் பெரியாரையும் திராவிடத்தையும் முன்னிறுத்தி நடைபெறும் மாநாடு இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாபெரும் திராவிட நிகழ்விற்கு வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பில்,  40-க்கும் மேற்பட்ட  திராவிட இயக்க உணர்வாளர்கள் உதவியுடன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

மறுநாள் காலை 9:30 மணிக்கு கிளம்பி மாநாடு நடத்தும் இடத்திற்குச் சென்றோம். எங்களைப் பேருந்தில் அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே போய் மாநாட்டின் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எந்தத் தோழர்கள் பேசினாலும், அவர்கள் பெரியா ருடைய சிந்தனையைத்தான் – அந்த வழியில்தான் எல்லாரும் பேசினார்கள். கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து ஒரு தோழர் வந்திருந்தார். அவர் தூய்மைப் பணியாளருக்காக வேண்டிப் போராடக்கூடிய தோழர். அவர் இந்தப் பாதாளச் சாக்கடை வேலை பார்த்துச் சாகும் தொழிலாளர்கள் பற்றி மிக விரிவாக எடுத்து பேசினார். அதற்கு அடுத்து ஜப்பானைச் சேர்ந்த ஒரு போராளி அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் எப்படிப் போராடிக் கொண்டு வருகிறார்கள் என்பதை விவரமாக எடுத்துச் சொன்னார். மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தது. அந்த மாநாட்டில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு பாடகர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தமிழிலேயே பாடல் பாடினார்கள்.

நிறைவாக இவ்வளவு நாளாக நீங்கள் இந்திய உணவு சாப்பிட்டிருப்பீர்கள். இப்பொழுது ஜப்பானிய உணவு சாப்பிடுங்கள் என்று அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள். நாங்கள் எல்லோருமே சரி என்று அமர்ந்தோம். உடனே அந்தக் கருத்தரங்கக் கூடத்திலேயே உணவு வழங்கினார்கள். அந்த இடத்தில் உணவு அருந்தினோம். பின்பு அறைக்கு வந்தோம்.

மாநாடு முடிந்த மறுநாள் சுற்றுலா சென்றோம். நடந்து போய்த்தான் பல இடங்களைப் பார்க்க வேண்டும். ஜப்பானிலே முக்கியமானதாக சுற்றுலாத் தொழில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் மிகவும் ஒழுக்கத்துடன் மிக அன்புடன் அழைக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் சாலைகளில் எந்த ஒரு குழியோ ஒரு பள்ளமோ எந்த  இடத்திலும் கிடையாது. ஓர் இடத்தில் கூடக் குப்பையைப் பார்க்க முடியாது. சிங்கப்பூர்தான்  தூய்மையான நகரம் என்று சொல்வார்கள். அந்தச் சிங்கப்பூரை நான் பார்த்து இருக்கிறேன். அதைவிடப் பல மடங்கு தூய்மையாக ஜப்பான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  வேலைக்கு போகும்பொழுது பார்த்தீர்களானால் ஓட்டமும்  நடையுமாகத்தான் போகிறார்கள். ஒழிய சாதாரணமாக நடந்து போவதில்லை. அவர்கள் ஏதாவது உணவு சாப்பிட்டாலும் அந்த உணவுக் குப்பையை தன் பைகளில் வைத்துக்கொண்டு எங்கு குப்பை போடும் இடம் இருக்கிறதோ அங்கே போய்ப்  போடுகிறார்கள். அந்த அளவுக்கு ஜப்பான் நகரம் தூய்மையாக இருக்கிறது.

டோக்கியோ நகரத்தில் ஒரு ஷிண்டோ ஆலயம் இருக்கிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சில பொருள்கள் எல்லாம் வைக்கிறார்கள். ஜப்பான் கலாச்சாரப் பொருள்கள் விற்கிறார்கள். எல்லாரும் வாங்கினார்கள். அதை முடித்துக் கொண்டு அங்கு ஒரு 1450 மீட்டர் உயரத்தில் ஒரு டவர் இருக்கிறது. அந்த டவருக்கு நாங்கள் நடந்தே சென்றோம். எங்கு பார்த்தாலும் நடைப் பயணம் தான் எங்களுக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இந்த சிரமம் எல்லாம் அங்கு வாழும் மக்களைப் பார்த்தவுடன் எங்களுக்குப் பறந்து போய்விட்டது. சொர்க்கம் என்று சொல்வார்கள் சொர்க்கம் என்பது கட்டுக்கதை. ஆனால் டோக்கியோவில்தான் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டோம். அந்த அளவுக்கு அந்த நகரம் ஒளிமயமாகத் திகழ்கிறது. நாங்கள் அய்ந்து நாள் தங்கி இருந்தோம். ஒரு நாள் கூட கரண்ட் கட் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

மறுநாள் காலை ஒரு 130 கிலோ மீட்டர் தூரத்தில் ஓர் எரிமலை இருப்பதாகவும், அதை நாம் பார்க்கப் போகிறோம் என்றும் வி.சி.வில்வம் சொன்னார். அதற்கு அடுத்து கிராமங்களைப் பார்த்துவிட்டு அருகில் புல்லட் ரயில் ஓடக்கூடிய இடம் இருக்கிறது. அங்கே இருந்து புல்லட் ரயிலில் பயணிக்கிறோம். அந்த ட்ரெயின்ல போயிட்டு அப்புறம் நாம் உணவு அருந்தக்கூடிய உணவகத்திற்குப் போக வேண்டும். அதற்குப் பிறகு நாம் தங்கு விடுதிக்குப் போகவேண்டும் என்று திட்டத்தைச் சொன்னார். குறைந்தது ஒரு அய்ந்து ஆறு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அங்கு வந்திருந்த ஒரு பத்துப் பதினைந்து பேர்கள் மிகவும் முதியவர்கள்.

நகரத்தை விட்டுத் தாண்டி ஒரு 60 கிலோ மீட்டர் சென்ற பின், காஷ்மீரில் எவ்வளவு தூரம் காடுகள் மரங்கள் இருக்கிறதோ அந்த மாதிரி அங்கு மரங்கள் இருக்கின்றன. அதற்கு இடையில்தான் நாங்கள் பயணம் செய்தோம். அந்தப் பயணம் செய்யும் பொழுது இந்தக் காடுகளிலே எந்த ஒரு மிருகமும் கிடையாது, எந்த ஒரு பறவைகளும் கிடையாது. ஏன் என்று  அங்கு வந்த எங்களை வழி நடத்திய தோழர்களிடம் கேட்டபொழுது, இங்கு இந்த எரிமலை இருக்கும் காரணத்தினால் எந்த விலங்குகளும் இங்கு வாழ்வதற்கு முடியாது; பறவைகளும் வாழ்வதற்கு முடியாது. எரிமலையின் தாக்கத்தால் எந்த விலங்கும் வாழ்வதற்கு வழி இல்லை என்று அவர் சொன்னார். பார்த்துவிட்டு பயணம் போய்க் கொண்டே இருந்தது. சுத்தி பாத்து விட்டு அப்படியே அந்த எரிமலை இருக்கும் பக்கத்தில் வந்தோம். ஆனால், கேபிள் காரில் சென்று பார்ப்பதற்கு நேரமில்லை.

அங்கிருந்து கிளம்பி அங்கு உள்ள கிராமங்களை பார்த்துக்கொண்டே போனோம். சுற்றி மலை இருக்கிறது. அந்த மலைக்கு நடுவில் வீடு கட்டி இருக்கிறார்கள்.  அங்கிருந்து அந்த வீட்டுக்கு எதிரில் ஓடை இருக்கிறது. அந்த ஓடைக்கு எங்கிருந்து தண்ணி வருகிறது என்று பார்த்தால் மேலே உள்ள மலையில் உள்ள தண்ணி வீட்டுக்குள்ள ஒரு அய்ந்து அடி ஆறு அடி பத்து அடிகளை இறங்கி அந்த ஓடையில இறங்குகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருக்கிறது. அந்த அளவுக்கு அங்கே இயற்கை அமைந்திருக்கிறது. அதையெல்லாம் போய் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி புல்லட் ரயில் இறக்கம் செய்ததற்கு வந்து சேர்ந்தோம்.

புல்லட் ரயில்களைப் பார்க்க வியப்பாக இருந்தது. விமானத்தில் என்ன இருக்கை வசதி இருக்கிறதோ அதே மாதிரியான இருக்கை வசதி வைத்துள்ளார்கள். பிறகு, புல்லட் ரயிலில் இருந்து ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். அந்த ஸ்டேஷனில் இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து போய் தரைக்குக் கீழ் (அண்டர் கிரவுண்டில்) ஓடக்கூடிய ரயிலில் ஏறி டோக்கியோ வந்து சேர்ந்தோம். டோக்கியோ நகர் வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்து நாங்கள் உணவருந்தும் உணவகத்திற்குச் சென்றோம். நடந்தே போனோம். அதற்கும் ஒரு கிலோமீட்டர் வரும். உணவு அருந்திவிட்டு நாங்கள் தங்கும் விடுதிக்கு அங்கிருந்து நடந்தே வந்தோம். நடை, நடை நடை தான்.

மறுநாள் 15ஆம் தேதி சுற்றுப்பயணம் போகவில்லை. ஏதேனும் பொருள் வாங்க வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள். விலைவாசி மிகக்கூட இருக்கும் மால்கள் இருந்தன. நாங்கள் பொருள்கள் வாங்குவதற்காகப் போயிருந்தோம். போய்ப் பல இடங்களில் அலைந்து பார்த்துவிட்டு திரும்பி வந்தோம். மாலை 5 மணி ஆகிவிட்டது. நாங்கள் கிளம்பி போனது 3 மணி அளவில் முடித்து விட்டு 5:00 மணிக்கு சரியாக இந்த இடத்துக்கு வந்துவிட வேண்டும் என்று வி.சி.வில்வம் சொல்லியிருந்தார்.

மருத்துவர் கவுதமன், ராமசாமி, அவரது துணைவியார் இராஜேஸ்வரி  மற்றும் கழகத் தோழர்கள் நாலு அய்ந்து பேர் சில பொருட்களை வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்து ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். அப்புறம் மற்ற தோழர்கள் எல்லாம் வந்தார்கள். விசி.வில்வம் சொன்னது போல சரியாக 5 மணிக்கு பேருந்து வந்துவிட்டது. நாங்கள் சரியாக வந்து விட்டோம். ஆனால் சில தோழர்கள் வருவதற்கு மிகத் தாமதமாகிவிட்டது. அவர்கள் ஆறுமணிக்கு மேல் வந்தார்கள். அதற்கு வி.சி.வில்வம்  சற்று சத்தம் போட்டார். நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எட்டு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். அதுபோல நம்மை உபசரித்த, வழி நடத்திய எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் போது நீங்கள் இப்படி தாமதமாக வருகிறீர்கள். அடுத்த தடவை நீங்கள் வர வேண்டாம் என்று கடுமையாகச் சத்தம் போட்டார். சரி என்று சொல்லிவிட்டு அப்புறம் ஏழு மணிக்கு உணவு அருந்துவதற்கு பாலாஜி உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த செந்தில்குமார், கமலக்கண்ணன் மற்றும் முக்கியமான தோழர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அவர்களோடு இணைந்து ஒரு குழுப் படம் எடுத்துக் கொண்டோம் எங்களை இவ்வளவு தூரம் வழி நடத்தியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

அந்தப் பாலாஜி உணவகத்தின் உரிமையாளர் எங்களை நன்றாகக் கவனித்தார். மன மகிழ்ச்சியோடு  எப்போதும் வரவேற்றார். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டு உணவை நீங்கள்  வழங்கினீர்கள். உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஒரு குரூப் போட்டோ எடுத்தோம். பின்னாடி வந்திருந்த தோழர்களுக்கு எல்லாம் இனிப்பு பாக்கெட் பரிசாக அளித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த ஸ்வீட் பாக்ஸை வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, “நாங்கள் அமெரிக்கா செல்கிறோம்” என்று சொல்லிவிட்டு சோம.இளங்கோவன் அவர்களும், அம்மா சரோஜா அவர்களும் விடைபெற்றுப் பயணமானார்கள்.

இந்தப் பயணத்தில் சோம.இளங்கோவன் அவர்கள் தோழர்களிடமும், குறிப்பாக என்னிடமும் மிக மிக அன்பாக இருந்தார்கள். நான் வைத்திருந்த   பையைத் தூக்கிக்கொண்டு என்னால் நடக்க முடியவில்லை.அய்யா உங்கள் பையைக் கொடுங்கள், நான் அதைச் சுமந்து வருகிறேன் என்று சொல்லி என் பையை வாங்கி அவர் தோளிலே சுமந்து கொண்டு வந்தார். எனக்கு அழுகை வந்துவிட்டது.எனக்கு இப்படியும் நாட்டில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. அவர்  பல தகுதியும் படைத்தவர். என்னைவிட வயதில் மூத்தவர்.எனக்கு வயது 78.அவருக்கு வயது  79. அம்மா சரோஜா அவர்களுக்கு வயது 76. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் அந்த அளவிற்கு உடலை மிக நன்றாக வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் அந்த இரண்டாவது நாள் மாநாட்டிலே அம்மா சரோஜா அவர்கள் பேசிய பேச்சு உலகத் தலைவர்கள் அனைவரையும் தனது பேச்சிலே கொண்டு வந்து விட்டார். ஆங்கிலத்தில் பேசினார். ஒரு பிசிர் இல்லாத அளவிற்கு, ஒரு தயக்கம் இல்லாத அளவிற்கு உலகத் தலைவர்களைப் பற்றி எல்லாம் பேசிவிட்டு அடுத்து இந்திய தலைவர்களைப் பற்றி பேசினார். இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பேசியதில் கடைசியாக தந்தை பெரியாரைச் சொல்லித்தான் முடித்தார். அந்த அளவிற்கு சிறந்த ஆங்கில புலமை பெற்றவராக இருக்கிறார். எனக்கு மிக மிக வியப்பாக இருந்தது. அம்மா அவர்களின் பேச்சை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினார்கள். அதை அவரிடம் சொன்னேன். ‘அம்மா நல்லா பேசுவாங்க’ என்று அய்யா சோம.இளங்கோவன் சொன்னார். “ரொம்ப நல்லா பேசுறீங்க” என்று அம்மா சரோஜா அவர்களைப் பாராட்டியபோது  அவர்கள் புன்னகைத்தார்கள்.

அதுபோக நான் கொண்டு போயிருந்த ‘விறகு வண்டி முதல் விமானம்’ வரை புத்தகத்தை அங்கிருந்து தோழர்களிடம் கொடுத்தேன். எல்லோரும் மிக மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்கள். எல்லோரும் பணம் கொடுத்தார்கள் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் டாக்டர் கவுதமன் என்னிடம் கட்டாயப்படுத்திப் பணத்தைக் கொடுத்தார். மாநாட்டுக்கு வந்தவர்களில் ஓசூரைச் சேர்ந்த ஒரு தோழியர் எங்களுக்கு உங்களுடைய புத்தகம் வேண்டும் என்று கேட்டார். 12 புத்தகம் தான் கொண்டு வந்தேன். எல்லோருக்கும் கொடுத்து விட்டேன். தேவை என்றால் போன் பண்ணுங்கள் அல்லது உங்களது போன் நம்பரைக் கொடுங்கள். நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன்.

பின் வழியனுப்புவிழா போல நடந்தது. ஜப்பானைச் சேர்ந்த கமலக்கண்ணன் பேசினார். பின்னர் வி.சி.வில்வம் பேசினார். பிறகு ஒரு நாலு பகுத்தறிவு சிந்தனை உள்ள பாடல்களைப் பாடினார்கள். அடுத்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் பாடினார். மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இரவு 11 மணிக்கு டோக்கியோ நகரத்தை விட்டுக் கிளம்பினோம். 16ஆம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். சென்னையில் ஆசிரியர் அவர்கள் மாநாட்டில் சென்று வந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். எனக்கும் பொன்னாடை போர்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இரவு 16ஆம் தேதி இரவு பாண்டியன் விரைவு வண்டியில் ஏறி 17ஆம் தேதி காலை மதுரை வந்து சேர்ந்தேன். வாழ்வில் மறக்கவே முடியாத இனியமையான பயணமாக ஜப்பான் பயணம் அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *