அய்ரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்து வன்முறையும் பெருகிப் பரவியுள்ளது. அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. பிரான்சு, பெல்ஜியம், போர்ச்சுக்கல், இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த போராட்டங்கள்தான் வன்முறையாக மாறியுள்ளன.
மாணவர்கள் போராட்டம்
குறிப்பாகப் பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் கல்வி முறையும், பாடத் திட்டங்களும், கல்விச் சாலைகளின் கட்டமைப்புகளும் தரமற்றவையாக இருப்பதாகக் குரலெழுப்பி கடந்த மாதத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாமையால் முறையான வகையில் கல்வி தமக்குப் போதிக்கப்படுவதில்லை எனவும் மாணவர்கள் குமுறினர். போராட்டத்தில் வன்முறை மிகுந்து மாணவர்கள் – காவல் துறையினர் மோதலாகவும் உருவெடுத்தது. சில நாள்களுக்குப் பின்பு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்குச் சில நாள்களில் பிரான்சு நாட்டின் பொருளா தாரப் பின்னடைவையும், விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு மிகுந்துள்ள அவல நிலைக்கு எதிராகவும், பள்ளி – கல்லூரி – மருத்துவமனைகளில் நிலவுகின்ற மோசமான சூழ்நிலைகளுக்கு மாற்றம் கோரியும் அமைப்புகள் பலவும், பொதுமக்களும், இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலும் போராட்டம் மேலும் சூடானது.
பிரான்சு நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்துப் போராடினர். பாரிஸ், மார்சேய், லியோன், போர்டோ, ரென்னெஸ், ஸ்ட்ராஸ் பூர்க், கிரானோபிள், ரைஸ், லிமோஜஸ் மற்றும் பிற நகரங்களிலும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
தீக்கிரையான அரங்கம் – உடைக்கப்பட்ட உணவகம்
இதில் மத்திய பிரான்சில் உள்ள லிமோஜஸ் நகரத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர அரங்கத்திற்குத் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அக்கட்டடம் முற்றிலும் சேதமானது.
வன்முறையின்போது பாரிஸின் பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியில் காவல் துறையின் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. இதனையும் மீறி அங்கு போராட்டத்தின்போது ஓர் உணவகம் உடைக்கப்பட்டது. “போராட்டக்காரர்கள் கொள்ளையர்களாக மாறினர். “எனது கடையில் நுழைந்தவர்கள் சிகரெட்டுகளை அள்ளிக் கொண்டு போக பிளாஸ்டிக் பைகளுடன் கடைக்குள் நுழைந்தனர்” என்கிறார் அக்கடையின் உரிமையாளர்.
இப்படி நடந்த கலவரத்தில் ஏராளமான வணிக நிறுவனங்களில் நடக்கக்கூடிய வியாபாரம் முற்றிலும் முடங்கியது. எடுத்துக்காட்டான மேற்கண்ட நடப்புகளைப் போன்று பல நிகழ்வுகள் நாடு முழுதும் அரங்கேறின. 2,500 பேர் கைது செய்யப்பட்டதாகவும், காவல் துறையினர் 150 பேர் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த சனிக்கிழமையன்று (17.10.2026) தொடங்கிய இப்போராட்டத்தில் மக்கள் அமைதியாகப் பேரணி சென்றனர். ஆனால், பேரணியில் இடையில் புகுந்த முகமூடி அணிந்த குழுக்கள் பலவும் தீ வைப்பதில் கவனம் செலுத்தினர். இந்தத் தீ வைப்பினால் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துகள் பாழடிக்கப்பட்டன.
உரிமை ஆகுமா?
“பிரான்சின் தலைநகரம் இதற்கு முன் பார்த்திராத அளவிலான வன்முறையை அனுபவித்துள்ளது என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என பாரிஸ் துணை மேயர் லமியா எல் ஆரேஜ் கூறுகின்றார்.
“போராட்டம் நடத்துவது ஓர் அடிப்படை உரிமை. ஆனால், வேண்டுமென்றே வன்முறை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துவது உரிமை ஆகாது” என பிரான்சு அதிபர் எமானுவேல் மேக்ரான் உள்பட அந்நாட்டுத் தலைவர்கள் பலரும் இக்கருத்தினைப் போன்றே பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வன்முறைகளும், காவல் துறையினருக்கு எதிராகத் திரும்பியுள்ள தாக்குதல்களும் பிரான்சு அதிபர் எமானுவேல் மேக்ரானுக்கு அவரது அரசியல் பொது வாழ்வில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன. ஆறு மாதங்கள் கழித்து அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் மூலம் எமானுவேல் ஆட்சி உரிமையை இழந்து விட வேண்டுமென்ற எதிர்பார்ப்பே மக்களிடையே பெருகியுள்ளது.
டிரம்ப் கூறுவது என்ன?
இத்தகைய மோசமான வன்முறைகள் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுவது என்ன? பிரான்சு கொண்டுள்ள சுதந்திரமான குடியேற்றக் கொள்கையே இதற்குக் காரணமென்றுச் சுட்டிக் காட்டுகின்றார். பிரான்சின் எல்லைகள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் புக முடியாதவாறு மூடப்பட வேண்டும் என வழிகாட்டுகின்றார். பிற நாடுகளில் இருந்து வந்து பிரான்சில் குடியேறியவர்களின் கை ஓங்கி அவர்கள் நடத்துகின்ற வன்முறையே இவை என்றும் குற்றஞ் சாட்டுகின்றார். மேலும் அடுத்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் தனது தலைமையிலான குடியரசுக் கட்சியே வெற்றி பெற வேண்டுமெனவும், இல்லையெனில் அமெரிக்காவும் பிரான்சு நாட்டைப் போன்று பற்றியெரியும் நிலையே ஏற்படுமென்று அதே டிரம்ப் அறுதியிட்டுக் கூறுகின்றார். இதற்குக் காரணமாகத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் குடியேற்றங்களை அதிகரித்து வருகின்றனரென்று அவர் விடாப்பிடியாகக் குற்றஞ்சாட்டுவது எதன் பொருட்டு என்றுதான் புரியாத புதிராக இருக்கின்றது.
இந்நிலையில் பிரான்சு நாட்டில் அமைதி திரும்பி இயல்பு நிலைக்கு எப்போது மீளும் என்கின்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையும், மக்களிடையும் ஏற்பட்டுள்ளது.
கலவரப் பிடியில் சிக்குண்ட சில நாடுகள்
லிஸ்பன் – போர்ச்சுக்கல்: விலைவாசி மிகவும் உயர்ந்து மக்களின் வாழ்க்கைச் செலவுக்கென்று வரம்பு மீறி செலவழிக்கின்ற நிலை உள்ளது என்று போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் பெருநகரில் போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான கூடாரங்களை அமைத்தனர்.(17.10.2026). போர்ச்சுகல் நாட்டின் தலைநகரில் மய்யப் பகுதியில் உள்ளது ரோமியோ சதுக்கம். இங்கு இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கானப் போராட்டக்காரர்கள் திரண்டனர். பெரும்பாலோனோர் இளைஞர்கள் ஆவர். நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடியவாறு அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தனர்.
மாட்ரிட் – ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டிலும் எங்கும் கிளர்ச்சி மயம்தான். வன்முறைகளுக்கும் பஞ்சமில்லை. ஆக்ரோஷமான குரலெழுப்பிக் கொண்டு இளைஞர்களும், மக்களும் போராட்டக் களத்திற்கு அணி அணியாகப் புறப்பட்டு வருவது எதற்காகத் தெரியுமா? விலைவாசிப் பிரச்சினைதான். குறிப்பாக அந்நாட்டில் வீட்டு வாடகைத் தொகை உயர்ந்து மக்களை வாட்டி வதைப்பதுதான் முக்கியக் காரணமாகும். எவ்வளவுதான் பாடுபட்டும்,என்னதான் முயற்சிகள் செய்தாலும் சொந்த வீடென்று ஒன்றை வாங்கி வசிக்க முடியவில்லையே என்கின்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் அங்கு நடக்கின்ற கிளர்ச்சிகளுக்கு அடிப்படையான காரணமாகும். ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மாட்ரிட் போராட்டக்காரர்களின் மய்யப் புள்ளியாகத் திகழ்ந்து வருகின்றது.
மிலின் – ரோம்: இந்நகரில் போர் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பேரணி என்று தொடக்கம் அமைதியாகத்தான் இருந்தது. ஆனால், இதிலேயே இருந்த முகமூடி அணிந்தப் போராட்டக்காரர்கள் கற்கள், நடைபாதைக் கற்கள், பிற பொருள்களையும் கையகப்படுத்திக் கொண்டு அவற்றைக் காவல் துறையினர் மீது வீசினர். உணவக மேஜைகளைக் கொண்டு அடைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்குத் தீ வைத்தனர்.
17.10.2026 அன்று மத்திய மிலன் பகுதியில் கலவரக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டன. பலரது சொத்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. வழக்கமாக வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும் பியாஸ்ஸா டெல் டுவோ மோ சொகுசு வணிக வளாகப் பகுதியில் இருந்தவர்களைப் போராட்டக்காரர்கள் காலி செய்ய வைத்தனர்.
கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப்புகை, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தினர். போராட்டக்காரர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு காவல் அதிகாரிகள் காயமடைந்தனர்.
தொடரும் இப்பிரச்சினைகள் முடிந்து அய்ரோப்பிய நாடுகளில் அமைதி தவழுவது எப்போது? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது.
