திருச்சி, அக். 23- பெரியார் மருந்தியல் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான (DMLT) D. Pharm, B. Pharm & M. Pharm) வழிகாட்டுதல் நிகழ்ச்சி 21.10.2026 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் மூத்த வழக்குரைஞர் டி.பானுமதி மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதலுரை நிகழ்த்தினர்.
முன்னதாக ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவருமான மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் பகுத்தறிவிற்கு அடித்தளமிட்ட தந்தை பெரியார் பெயர் தாங்கிய கல்லூரியினை தெரிவு செய்த மாணவர்களுக்கும் பெற் றோர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கும் இளைஞர்கள் கல்வியை தொடர்வதற்கு முன் அலைபேசி ஆதிக்கத்திற்கும் போதை பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். அறிவியலும் மிகப்பெரிய கண்டுபிடிப்பான அலைபேசி கத்தியைப் போன்றது. கத்தி மருத்துவரின் கையில் கிடைத்தால் அது ஒருவரின் உயிரை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றும். அதுவே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கையில் கிடைத்தால் அது ஒரு உயிரை பறிக்கும். எனவே அலைபேசியை எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்திட வேண்டும். தற்காலத்தில் விடலை பருவத்தினர் அதிக அளவில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இளம் வயதிலேயே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் அதிகமாக இருக்கின்றது. அடுத்ததாக உணவு பழக்கத்திலும் பீட்சா, பர்கர், பரோட்டா, வறுத்த மற்றும் கருகிய துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். இதனால் உணவு குழல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதிகமாக இளைஞர் சமூகத்தை பாதிக்கின்றது. இவற்றையெல்லாம் மாணவர்கள் தவிர்த்து கல்வியில் ஆர்வத்தை செலுத்தி அதன் மூலம் இச்சமுதாயத்திற்கு பயனுள்ள வர்களாக ஒவ்வொருவரும் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் மூத்த வழக்குரைஞர் டி.பானுமதி மாணவர்களுக்கான வழிகாட்டுதலுரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், போதைக்கு எல்லாம் மிகப்பெரிய போதையாக திரையரங்கம், சினிமா போதை அதிகமாக இருக்கின்றது. அதிலிருந்து நம்முடைய நாட்டையும் இளைஞர்களையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அலைபேசி என்ற தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதனை பயன்படுத்துபவர்கள் உயர்வதைவிட முதலாளித்துவ உலகம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகமாகும் போதை கலாச் சாரத்தால் பாலியல் குற்றங்களும் துன்புறுத்தல்களும் அதிகமாகி நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிப்புகள் உயர்ந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகமானாலும் இயற்கையை வென்றவர்களாக பெண்கள் உருவெடுத்தாலும் அவர்களுக்கான பாலின சமத்துவம் இன்றும் மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.
ஆகையால் பெண்கள் கல்வி பெறுவதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் நம்முடைய பங் களிப்பு ஆண்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும். ஏனென்றால் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இன்றும் குறைவாகத்தான் இருக்கின்றது தமிழ்நாட்டில் மட்டும்தான் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், “பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இது அறிவு ஆசான் தந்தை பெரியார் செய்த புரட்சி. அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் பெயர் தாங்கிய கல்லூரியில் இணைந்துள்ள மாணவர்கள் சமூகப் பொறுப்போடு கல்வி முடித்து வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது கருத்து களை பதிவு செய்கையில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களாக, மருந்தியல் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்களாக, பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்ற வர்கள் இருப்பது இக்கல்லூரியின் 45 ஆண்டுகால கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியை நன்கு விளக்குகிறது என்றும் பெரியார் கல்வி நிறுவனத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் எந்த இடத்திலும் சோடை போனவர்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி மற்றும் மருந்தியல் பயிற்சி துறைத் தலைவர் பேராசிரியர் கு.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் சு.கற்பகம் குமர சுந்தரி நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
