திருச்சி, ஜூலை 10- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வித் துறையில் தனது சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் தேர்வுகளில் மாணவர்கள் காட்டிய அபாரத் திறமையால், பள்ளிக்கு இந்த ஆண்டு ‘கோல்டன் ஸ்கூல்’ (Golden School) விருது வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய உயரிய விருதை இப்பள்ளி தொடர்ச்சியாக ஏழாவது முறையாகப் பெற்று, தனது கல்வித் தரத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.
இப்போட்டிகளில் கணினி பாடப் பிரிவில் இரண்டாம் வகுப்பு பயிலும் எஸ். ஆதித்யா மாநில அளவில் 4ஆவது இடம் பிடித்து 1,000 ரூபாய் ரொக்கப் பரிசும், கணிதப் பாடப்பிரிவில் இரண்டாம் வகுப்பு பயிலும் எஸ். முகமது அனூப் மாநில அளவில் 7ஆவது இடம் பிடித்து 700 ரூபாய் ரொக்கப் பரிசும் வென்றுள்ளனர்.
மேலும், அறிவியல் பாடப்பிரிவில் வி.தர்மிகா சிறீ (முதல் வகுப்பு) மற்றும் எம். ஆயிஷா சித்திகா (மூன்றாம் வகுப்பு) ஆகியோர் மாநில அளவில் முறையே 16 மற்றும் 20ஆவது இடங்களைப் பிடித்து சிறப்பு வெற்றியாளருக்கான பதக்கங்கள் வென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி, ஓவியம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பல மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்:
ஓவியம்: எஸ். யாழினி, எம்.துவாரகா, பி.ஆர்.மோகிதா, எஸ்.சம்ரின், ஏ.சிறீ ஹரிஷ், ஏ.சந்தோஷ்.
ஆங்கிலம்: டி.சோனல் ஸ்டெபினா.
பொது அறிவு: எஸ்.தனுசிறீ.
கணிதம்: எம்.பரமேஷ் ஹரி பிரியன், எஸ்.முத்துகுமார், எம்.அனுக்ரஹா.
ஒட்டுமொத்தமாக இப்போட்டிகளில், முதல் சுற்றில் 126 மாணவர்களும், இரண்டாம் சுற்றில் 35 மாணவர்களும் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பெருமளவில் சாதனை படைக்கக் காரணமாக விளங்கிய போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியருமான எஸ்.காட்வின் உள்ளிட்டோரைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் மனதாரப் பாராட்டி மகிழ்ந்தனர்.
