திருச்சி, அக்.16- மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 4.10.2026 அன்று திருச்சியில் நடைபெற்ற பெருந்திரள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் (“Mammorun 2026”) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
டாக்டர் கே. சாந்தா மார்பக புற்று நோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனைகள் இணைந்து நடத்திய இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வில், பல்வேறு பள்ளி களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வை பரப்பினர்.
இந்நிகழ்வில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் எம்.மகிழினி, எம்.ஜெகப்பிரியன், ஆர். சிபிக்சன் மற்றும் எம்.முகமது ஹைருதீன் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக, மழலையர் பிரிவின், யூ.கே.ஜி. (U.K.G) வகுப்பைச் சேர்ந்த மாணவன் எம்.முகமது ஹைருதீன், தனது இளம் வயதிலும் சோர்வின்றி அய்ந்து கிலோ மீட்டர் (5 KM) தூரத்தைக் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது இந்த அசாத்திய சாதனையைப் பாராட்டும் விதமாக, இவருக்கு அய்ந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்று விழிப்புணர்வைப் ஏற்படுத்திய மாணவர்களுக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோரால் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
இளம் தலைமுறையினரிடம் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஊட்டும் வகையில் மழலை மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்வு, திருச்சி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
