ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு! 2

- Advertisement -

வி.சி.வில்வம்

திராவிடர் கழகம்

தமிழர்களுக்குத் தந்தை பெரியார் வகுத்துத் தந்த வாழ்க்கை நெறியும், ஜப்பானியர்களின் வாழ்வியலும் ஏறத்தாழ ஒன்றே என முந்தைய பகுதியில் குறிப்பிட்டோம்‌. இன்றைக்குத் திராவிடர் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியான ஒரு மேம்பட்ட வாழ்வையே நொடிதோறும், நொடிதோறும் வாழ்ந்து வருபவர். ஜப்பானியர்கள் போலவே எப்போதும் சுறுசுறுப்பாகக் காட்சியளிப்பார்; அதேபோன்று செயல்படுவார்! ஜப்பானின் சாலைகளில் சற்று தூரத்தில் ஒருவர் வருகிறார் என்றால், அவரை 30 அல்லது 40 வயதுடையவர் என நாம் கணிப்போம். நெருங்கியதும் பார்த்தால் 80, 90 வயதினராக  இருப்பார். இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. அந்தளவிற்கு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ஆசிரியரின் ஜப்பானிய வாழ்க்கை!

நம் ஆசிரியருக்கு 93 வயது என்கிறோம். எனினும் அவரளவிற்கு யாராவது காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்ய முடிகிறதா? அவரளவிற்கு  அன்றாடம் செய்தித்தாள்கள் வாசிக்க முடிகிறதா? தொலைக்காட்சியில் செய்திகள் கேட்க முடிகிறதா? நாளொன்றுக்கு நூல்கள் பல படிக்க முடிகிறதா? பக்கம், பக்கமாய் எழுத முடிகிறதா? மனிதர்களைச் சந்தித்து அளவளாவ முடிகிறதா? கூட்டங்களில் மணிக்கணக்கில் அமர்ந்தும், ஓரிரு மணி நேரங்கள் உரையாற்றவும் முடிகிறதா? களைப்பின்றி தொடர்வண்டியில் பயணங்கள் மேற்கொள்ள முடிகிறதா? மாதம் ஒன்றிற்கு வாகனத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர் வலம் வரும் பலம் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஆசிரியர் செய்து வருகிறார்.

இந்த இடத்தில் ஜப்பானியர்களின் வாழ்க்கையை விடவும், கூடுதல் உழைப்பு ஆசிரியருடையது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக அந்தப் பண்பு நலனைப் பின்பற்றுகின்றனர். ஆசிரியர் அவர்களோ பொது வாழ்வில் அப்படி வாழ்ந்து வருகிறார். இதைத் தான் பெரியாரியம் தொடர்ந்து தமிழ்நாட்டில் விதைத்து வருகிறது.

 

திராவிடர் கழகம்

நம்பிக்கை தரும் கொள்கை!

நம்பிக்கை தரும் நாடு!!

பத்து ஆத்திக நண்பர்கள் இருக்கும் இடத்தில் எந்தத் தவறையும் யாரும் செய்யலாம். “ஓர் ஆத்திகராக இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா?”, என யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் 10 நாத்திக நண்பர்கள் இருக்கும் இடத்தில் ஒருவர் தவறு செய்தால், 9 பேரும் கேள்வி கேட்பார்கள், திருத்திக் கொள்ளவில்லை என்றால், அவரைத் தள்ளி வைத்து விடுவார்கள். இவ்வளவு ஏன்… நாத்திகர்கள் யாராவது தவறு செய்தால், “பெரியார் கொள்கையில் இருக்கும் நீங்களே இப்படி பிழை செய்யலாமா?”, என ஆத்திக நண்பர்களே கேட்பார்கள். பெரியார் கொள்கைகளை அவர்கள் பின்பற்றவில்லை என்றாலும், அதில் ஒரு அறம் இருக்கிறது, நேர்மை இருக்கிறது என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.

இதுபோன்ற மனிதத் தன்மைதான் ஜப்பானிய நடைமுறையும்! வெளிநாடுகளில் இருந்து அங்கு சென்று வாழும் ஒருவர், பெரும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் நடந்து செல்லலாம். “நாம் ஜப்பானில் இருக்கிறோம், நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது”, என நூறு விழுக்காடு அவர் நம்புகிறார். தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் வசித்த ஒரு 25 வயது பெண், டோக்கியோவின் மாடி வீட்டில் தனியாகத் தங்குகிறார், தனியாக வேலைக்குப் போகிறார், அறிமுகத்திற்குக் கூட ஒருவரும் இல்லை. எனினும் அந்த நாட்டில் அவரால் நள்ளிரவிலும் பயமில்லாமல் பயணம் செய்ய முடிகிறது. காரணம் “நாம் ஜப்பானில் இருக்கிறோம், நமக்கு எதுவும் ஆகாது”, என்கிற அவரது நம்பிக்கை. “யாமிருக்கப் பயமேன்?” என்றோ, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்கின்ற வாசகங்களோ அங்கு இல்லை.

இப்படியான நாட்டில் எந்தக் கடவுளும் யாருக்கும் நினைவில் வருவதும் கிடையாது.‌ பயம் இருந்தால் தானே பக்தி வரும்?

மனிதப்பற்று மட்டும் போதும்!

மற்றொரு முக்கியமான செய்தி, ஜப்பான் நாட்டில் வசிக்கும் ஒருவரால் மனிதநேயச் செயல்பாடுகளைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், வேறெங்கு சென்றாலும் அது சாத்தியமில்லை. அதேபோன்று பெரும்பாலான நாடுகளில் தவறு செய்தால் கடும் தண்டனை கிடைக்கும். அதற்கு அஞ்சியே பலரும் அமைதியாக இருப்பார்கள். அவர்களிடம் இரண்டு மனநிலை இருக்கும். ஆனால் ஜப்பான் நாட்டில் கண்காணிப்புகள் குறைவு, தண்டனை எனும் அச்சுறுத்தலும் கிடையாது. இயல்பாகவே அவர்கள் உன்னத வாழ்வை வாழ்கிறார்கள். “எனக்கு மதப்பற்று, இனப்பற்று, ஜாதிப்பற்று, மொழிப்பற்று எதுவும் கிடையாது. மனிதப்பற்று மட்டுமே உண்டு”, எனத் தந்தை பெரியார் கூறியதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

அப்படியான ஒரு நாட்டில் தந்தை பெரியாரின் பெயரில் பன்னாட்டு மனிதநேய மாநாடு நடத்துவது என்பது எவ்வளவு பொருத்தமானது! இப்படியான ஒரு சிந்தனை தமிழ்நாட்டில் யாருக்குத் தோன்றும்… திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தவிர! அவர்களின் அந்த ஒற்றைச் சிந்தனை தான், இன்றைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு அடித்தளம் ஆகும்.

திராவிடர் கழகம்

டோக்கியோவில்
அறிவுசார் பணிகள்!

ஜப்பான் நாட்டைப் பொருத்தவரை, ஏனைய நாடுகளை ஒப்பிடும் போது, தமிழர்கள் குறைவாகவே வசிக்கிறார்கள். அதிலும் 25 ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் குறைவு. அதிலும் தமிழர்கள் சார்ந்த நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு நடக்கும். ஆனால் இன்றைக்கு நிகழ்ச்சிகள் அதிகரித்துவிட்டன. பெரும்பாலும் இவை பொழுதுபோக்கு சார்ந்தே உள்ளன. இந்நிலையில் திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட தோழர்கள் ஒன்றிணைந்து ஜப்பான் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்குத் தனித்திறன், பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி எனப் பல வகுப்புகள் நடத்தினர். மட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வந்தனர்.

ஆக பொழுதுபோக்கு என்பதைக் கடந்து, அறிவுசார் பணிகளை இவர்கள் தொடங்கி வைத்தனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்ச்சிகள் மேலும் சிறப்பு பெற்றன. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மருத்துவர்கள் எனச் சமூகம் சார்ந்து இயங்கும் மனிதர்கள் “டோக்கியோ” மண்ணில் கால் பதித்தனர். 2024 ஆம் ஆண்டில் தான் முத்தாய்ப்பாக அந்த நிகழ்ச்சி அரங்கேறியது. ஆம்! தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழாக்கள் டோக்கியோ மாநகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன! திராவிடர் இயக்கத் தலைவர்களின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, எடுக்கப்பட்ட முதல் விழாவாகும்.

இந்த நிகழ்ச்சியில் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்கள். திராவிடர் இயக்கம் என்றாலே கடவுள் மறுப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது ஒரு புள்ளிதான். அதைக் கடந்து கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நலன்கள், சுயமரியாதை, பகுத்தறிவு, தொழில்நுட்பம், அறிவியல் எனத் தமிழர்களை மேம்பட்ட இடத்திற்கு நகர்த்திய பெருமை திராவிடர் இயக்கங் களுக்கு மட்டுமே உண்டு. அவ்வகையில் ஜப்பானில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் அரங்கத்தையே நிறைத்துவிட்டார்கள்; குறிப்பாகக் குடும்பம், குடும்பமாகக் குவிந்துவிட்டார்கள். அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இப்படியான அறிவுசார் தோழர்கள் தான் இந்த மாநாட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்கள்!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *