சென்னை, அக்.21- சென்னையில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை பதுக்கி வைத்து விற்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.
சென்னை பாரிமுனை, எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சந்திப்பில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல் துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசுராம் (வயது 46) என்பதும், மாதவரரம் பொன்னியம்மன்மேடு வ.உ.சி. தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், மாதவரத்தில் உள்ள தனது வீட்டில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் அவரது வீட்டில் இருந்து சுமார் 23 கிலோ எடையுள்ள ஒபியம் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அசுராமை எஸ்பிளனேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஒபியம் போதைப்பொருளின் பன்னாட்டு சந்தை மதிப்பு சுமார் ரூ.23 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அசுராமைக் கைது செய்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ.65 ஆயிரத்துக்கு வாங்கி வந்து, சென்னையில் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
