ஆழ்ந்து படியுங்கள்; அரிய தகவல்கள் தேவரடியார் மரபும் தேவதாசி அமைப்பும் ஒன்றல்ல என்பது உண்மையா?

13 Min Read
- Advertisement -

பெண்ணடிமைத்தனத்தின் கோரமுகம்தான் தேவதாசியாக இளம் பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விடும் கொடுமை. நாட்டியம், சதுர்க்கச்சேரி என்று துவங்கி பெண்களைப் பாலினப் பண்டங்களாக்கி, இறுதியில் அவர்கள் வாழ்வைச் சாரற்ற சக்கை வாழ்க்கையாக்கி, மனிதத்தை, வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யும் கொடுமையும் பக்தி, கலைப் போர்வைகளைப் போர்த்தி மற்றவைகளை மூடி மறைக்கும் மனிதநேய விரோதச் செயலுமே தேவதாசி முறை.

அதற்குக் கலை, இலக்கியம் என்ற ‘மாயமான்’ வித்தைகளை மீண்டும் அவிழ்த்து விட்டுள்ளது ஆரியம் – ஆர்.எஸ்.எஸ்.!

அதுபற்றி ‘புதிய புத்தகம் பேசுது’ இதழில் நேர்காணல் தந்துள்ள த.மு.எ.க.ச மாநில துணைத்தலைவர் தோழர் ஆர்.நீலா அம்மையார் அவர்கள் பல அரிய தகவல்களைத் தருகிறார்.

அதை 1930களிலேயே தொடங்கி, ‘பொட்டறுப்பு மாநாடு’ போன்ற பலவற்றை தந்தை பெரியாரும், அவர்தம் இயக்க வீராங்கனைகளும் நடத்தினர். அதற்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர்களின் ஸநாதனத்திற்குச் சவுக்கடிக் கொடுத்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு முழுத் துணையாகவும் இருந்தது தந்தை பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும்! மேலும் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்றவர்களைக் களப் போராளியாக இறக்கி விட்டது சுயமரியாதை இயக்கம். ஆழ்ந்து படியுங்கள்.

– ஆசிரியர்

 

சமூக ஊடகங்களின் பேசு பொருள் இதுதான் இருக்க வேண்டும் என்பது எங்கு முடிவு செய்யப்படுகிறது? இந்த Narrative setting எனும் தந்திரம் குறித்து…?

இன்றைய LPG (தாராளமயம், தனியார்மயம், உலகமயம்) உலகில் அனைத்தும் வியாபாரம் ஆகி விட்டது. எவ்வளவு இழிவான ஒன்றாக இருந்தாலும் பரபரப்பு ஏற்படுத்தும் யுக்தி பிரபலமாகவும் அனைத்தையும் காசாக்கவும் உதவுகிறது. இந்த யுக்தியை படித்தவர் பாமரர் என்ற வேறுபாடு இன்றி எல்லோரும் தயக்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். ஓடும் ரயிலிலிருந்து உயிரைப் பணயம் வைத்துக் குதித்து சாகசம் செய்து ஒரே இரவில் பிரபலமாகும் பையன். ஒரே நேரத்தில் நூறு லட்டுகள் தின்று சாதனைப் பட்டியலில் இடம் பிடிக்கும் வாலிபன். தன் விட்டு அந்தரங்கத்தை கூச்சமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் பெண் என்று பெருகி வருகிறார்கள். இதுபோன்ற மனநோயாளிகள் இலக்கிய உலகிலும் இருக்கிறார்கள், சமூகத்திற்கு இதனால் பயன் ஏதும் இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு அவசியமில்லை. ஜெயமோகன் போன்ற அறிவுஜீவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எல. வளர்ப்புகளும் இந்த உத்திகளை கையில் எடுக்கிறார்கள். இவர் இதற்கு பக்தி முலாம் பூசி சந்தைப்படுத்துகிறார். எதையும் பேசுபொருளாக்கி பற்றி எரிய விட்டு அதில் சுகமாக குளிர் காயும் மனநோயாளிகளின் கைகளில் இன்றைய உலகம் சிக்கித் தவிக்கிறது.

தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் தேவரடியார் அமைப்பைக் குறித்துப் பேசத்தான் வேண்டுமா?

மனிதர்களில் சரிபாதியான பெண்களின் கணிசமான ஒரு பகுதியினர் தேவதாசி முறையால் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து இருக்கிறார்கள். இப்போது அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் அது ஒரு சாக்கடைதான். சாக்கடையில் இறங்காமல் அதைச் சுத்தம் செய்ய முடியாது. பேசுகிறவர்கள் இதன் வரலாறு தெரித்து அதன் அவலத்தைப் போக்கும் விதமாகப் பேச வேண்டும். மறுபடி அந்தச் சாக்கடைக்குள் தள்ளும் விதமாகப் பேசக் கூடாது, பொட்டுக் கட்டும் தடைச் சட்டம் வந்த மத நம்பிக்கை அடிப்படையில் நிறைய பெண்கள் பொட்டுக் கட்டப்பட்டு உள்ளார்கள். இவர்களுக்கு தேவஸ்தான அங்கீகாரம் இருந்தாலும் வருமானம் இல்லை. தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய அவலம். இவர்களை அடையாளம் கண்டு மீட்டு வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும்.

பெயர்களுக்குள் புனிதம் தேடுகிற மரபினை விமர்சனமின்றி ஏற்பவர்கள் தேவதாசி என்பது பரத்தமையோடு தொடர்புடையது இல்லை. இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள். இதற்கு ஏதேனும் வரலாற்று ஆதாரங்கள் உண்டா?

சுதந்திரமான ஆண் பெண் உறவுகளுக்குள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு உருவானதே பரத்தமை நிறுவன அமைப்பு தோன்றுவதற்கு காரணம் என்று ஏங்கெல்ஸ் கூறுகிறார்.

தேவதாசி முறை பரத்தமையோடு தொடர்புடைய தல்லதான். சங்க இலக்கியங்களில் கூத்தியர், விறலியர், பரத்தையர் பற்றிய பாடல்கள் உண்டு. விறலியரும் பரத்தையரும் ஒன்றல்ல. கூத்தியருக்கு கூத்தன்களும் விறலியருக்கு பாணர்களும் உண்டு. பரத்தையர்களுக்கு அவ்வாறு இல்லை.

உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப் பாலைதான் தெய்வீகச் சேவைகளில் ஈடுபட்டிருந்த கொண்டி மகளிர் குறித்த குறிப்புகளைக் கொடுத்த முதல் இலக்கியமாகும். ஆகம மரபுகளும் புராணிகக் கதைகளும் மீட்டுருவாக்கம், செய்யப் படுகிறது. பக்தி மார்க்கத்திற்கேற்றாற் போல்-கலை இலக்கியக் கூறுகள் வரையறை செய்யப்பட்டன. பாணர்கள், கூத்தியர்கள், விறலியர்களின் பாடல்கள் அரசனைப் பாடியவை. பக்தி இயக்கத்திலோ இறைத் துதிகளாக இவை மாற்றம் பெறுகிறது. அதில் ஆதிகால தமிழ் இசை மரபுகள் எடுத்தாளப்படுகிறது. மனுதர்ம வழிவந்த அர்த்த சாஸ்திர நூலின்படி கலை இலக்கியங்களில் அவை இணைக்கப்பட்டன என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். இறை ஊழியர்களாக வந்த பெண்கள் அடிகள்மார் எனப்பட்டார்கள். அதாவது ஆன்மிகத் துறவு பூண்டவர்கள். ஆண்டாள் இந்த வகைப்பாட்டில்தான் வருகிறார்.

கி.பி. அய்ந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இது ஒரு நிறுவனமாக அமைக்கப் படுகிறது. ஸநாதன தர்ம ஆகம விதிகள் உருவாக்கம் செய்யப்படுகிறது. விதிகள் உருவாக்கம் செய்யும்போது பிராமணர்கள் அரசர்களை வழிநடத்துபவர்களாக மாறுகிறார்கள். அரசர்களும் பிராமணர்கள் வகுத்துக் கொடுக்கும் முறைகளையே பின்பற்றுகிறார்கள். நம் தமிழ் தேசத்தைப் பொறுத்தவரையில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என அடுத்தடுத்து வந்த அத்தனை அரசர்களும் இந்த ஆகம விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களே ஆகும். பல்லவ மன்னன் ஒருவனுக்கு ஆகமப் பிரியன் என்று ஒரு பட்டப் பெயரே உண்டு. பிராமணர்கள் அர்த்த சாஸ்திரத்தின்படி விதிகளை உருவாக்கம் செய்கிறார்கள். கோயில்கள் மனுதர்மத் தொடர்பு மய்யங்கள் ஆகின்றன. அரசியல் தொடர்பு மய்யங்களும் கோயிலே ஆகும். அரசு ஆணைகள், நிலவுடைமை பற்றிய பதிவுகள் இங்குதான் கல்லில் செதுக்கப்பட்டன. இதற்குப் பக்கத்திலேயே அக்ரஹாரம் இருக்கும். அங்கேதான் அந்த பிராமண அதிகாரிகளின் வசிப்பிடம். அது சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டது. மொத்தத்தில் கோவில் ஒரு விஏஓ ஆபீஸ் எனலாம்.

அர்த்த சாஸ்திரம் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கிறது. கலை இலக்கியம் யாவும் ஒன்று பெண்ணைப் புனிதப் பொருளாக்கும்; இல்லையென்றால் பரத்தை ஆக்கும். உதாரணமாக, சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். கண்ணகி பத்தினி, மாதவி தேவதாசி. இந்த இரண்டு நிலைகளில் மட்டுமே பெண்கள் அழைக்கப்படுவார்கள். அவ்வப்போது நீலகேசி போன்று வாதத் திறமை கொண்ட பெண்ணை நாயகியாக்கி சில இலக்கியம் எழும். அவளை பேயாக்கி விடுவார்கள். பாண்டியர்களாலும் பல்லவர்களாலும் ஆதரிக்கப்பட்ட இந்த நடைமுறை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்றளவும் நீடிக்கிறது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கம் பெற்ற பெரும்பான்மை கலை இலக்கியங்கள்! தொடர்ந்து இதையே வலியுறுத்தி வந்திருக்கிறது. நம் தமிழின் அழகியலே ஆன்மிக அழகியல் ஆக மாறிப்போனதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

காலத்தின் கதைகளை எழுத்தாக்கும் போது நல்லதற்கும் கெட்டதற்கும் பிரிட்டிஷாரை மட்டுமே பொறுப்பாக்கும் எழுத்தாளரைப் பற்றி நமக்குத் தெரியும்தானே? இந்தியாவைச் சுருட்டி எடுத்த கடும் பஞ்சங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றிய வெள்ளைக் காரர்கள் குறித்து தன்னுடைய ‘வெள்ளை யானை’ நாவலில் பெருமை பொங்கப் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் கலைகளும் மேன்மையும் பொருந்தி இருந்த தேவரடியார்கள் எனும் அமைப்பு முறையைக் குலைத்ததில் பிரிட்டிஷாருக்குத்தான் கூடுதல் பங்கிருக்கிறது என்கிறாரே?

இது மிகப் பெரிய வரலாற்று உருட்டு, விஜய நகர சாம்ராஜ்யத்தில் சரிவை நோக்கி நகரத் தொடங்கிய தேவதாசி முறை நாயக்கர்களின் ஆட்சியில் முழுமையாக நலிந்து கீழ் நிலைக்குச் சென்று விட்டது. தேவதாசிகள் ராஜதாசிகள் ஆக்கப் பட்டு மன்னர்களின் அந்தப் புரப் பாவையாக்கப் பட்டு விட்டார்கள். இதற்கு பிறகுதான் பிரிட்டிஷார் வருகிறார்கள்.

1858இல் விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனம் போட்டிருக்கிறார். இது இந்திய அரசுக் காப்பகங்களில் உள்ளது. நாங்கள் இந்திய மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிட மாட்டோம். எல்லா மதத்தையும் சமமாகப் பாவிப்போம்.

தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய போராட்ட வாதிகளிடம் இதைக் காட்டிக் காட்டியே இந்த முறையை ஒழிக்கவிடாது பாதுகாத்து வைத்தவர்கள் ஸநாதன வாதிகள். அப்படி பாதுகாக்கப்பட்ட வழக்கு விவரங்களைத் தொகுத்து Key K. Jordan என்பவர் ஒரு நூலே எழுதி உள்ளார். அதன் படி பார்க்கப் போனால் விக்டோரியா மகாராணியின் பிரகடனம் அதைப் பாதுகாக்க மறைமுகமாக உதவி அல்லவோ செய்திருக்கிறது?

வெள்ளைக்காரர்கள் 1980களில் உருவாக்கிய லாக் ஹாஸ் பிடலில் பாலியல் தொழிலாளிகளை கணக்கெடுத்து அடைக்கத் துவங்கினர். அவர்களோடு சேர்த்து கோயில்களில் இருந்த தேவரடியார்களையும் சேர்த்து லாக் ஹாஸ்பிடலில் அடைத்து வைத்தனர். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்த லாக் ஹாஸ்பிடல் முறைமை பற்றி?

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு பால்வினை நோய்கள் வந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்த லாக் ஹாஸ்பிடல் தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ரெஜிமெண்டுக்கும் 1000 சிப்பாய்களுக்கு 15 பெண்கள் என தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பச்சைக் குழந்தை கூட இது இயற்கைக்கு முரணானது என்பதைச் சொல்லி விடுமே?

அன்றைய காலகட்டத்தில் தேவதாசிகளின் இறைச் சேவைகள் என்ற புனிதப் போர்வை எல்லாம் கழற்றி வீசப்பட்டு அவர்களை பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்த காலகட்டம், பால்வினை நோய் என்ற உயிர் அபாயம் வரும் போது இதில் ஈடுபடுத்தப் பட்ட பெண்கள் அனைவரும் பரிசோதனை செய்யப் பட்டார்கள். வெள்ளைக்காரர்கள் தங்கள் சிப்பாய்களைக் காப்பாற்ற நம் ஊர் பெண்களை இப்படித் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமையைப் பார்த்து அன்றைய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் கூட அதை இழுத்து மூடச் சொல்லி 1833இல் உத்தரவு போட்டு இருக்கிறார். நோயாளர்களின் எண்ணிக்கை மேன்மேலும் பெருகி 1858இல் (Contagious Diseases Act) சட்டம் போட்டு இன்னும் கொடுமையானதாக அதை மாற்றி இருக்கிறார்கள்

பெண்களை இரண்டாம் பிரஜைகளாகப் பார்ப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை வழக்கம் தானே? வெள்ளைக் காரன் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?

இளம் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி கோவில்களுக்கு தானமாக வழங்கும் தேவரடியார் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்த மனுவை மெட்ராஸ் தேவதாசி அசோசியேஷனில் இருந்து மிகக் கடுமையாக எதிர்த்தார்களே ஏன்?

முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏமிகார் மைக்கேல் என்பவர் தென் மாவட்டங்களில் சிறுமிகளுக்கு பொட்டுக் கட்டும் முறையை எதிர்த்து சுமார் 90 சிறுமிகளை அதிலிருந்து மீட்டெடுத்து இருக்கிறார். இந்த நடைமுறையின் களப் போராளிகளாக மேற்கண்ட மூன்று பெண்மணிகளையும் நாம் சேர்த்தே வைக்க வேண்டும்.

தேவநாசிகளின் வாழ்க்கை முறை ஊருக்கு ஊர் மாறுபடும். நூற்றுக்குப் பத்து பேர் தங்கள் கலை இலக்கியத்தால் செல்வம் கொழிக்கும் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். மீதி தொண்ணூறு சதவீதம் தேவதாசிகளின் அவல வாழ்க்கை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை அல்லது தெரியாது. பெங்களூர் நாகரத்தினம் அம்மா போன்றவர்கள் இந்த உயர் ரகம்தான். இவர்களுக்குள் சில படிநிலைகள் உண்டு. பதினைந்து, இருபது பெண்களை நிர்வகிக்கும் தலைமைத் தேவதாசி ஒருத்தி இருப்பாள். இசை நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றோர் அதிக வாய்ப்பு பெறுவார் என்பது பொதுவாகச் சொல்லப் படும் ஒன்று. இசை ஞானம் இருந்தாலும் அழகில் குறைந்தவள் இங்கு பின்பாட்டுப் பாடுவாள், சமையல் செய்வாள், கோலம் போடுவாள். இந்த வர்க்க பேதம் இங்கே பல கட்டங்களாக உண்டு. இந்த மெட்ராஸ் தேவதாசி அசோசியேஷன் உயர்நிலையில் கோலோச்சிய தேவதாசிப் பெண்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் இதை எதிர்த்துத்தானே நிற்பார்கள்? தற்போது நம்மிடையே வாழ்ந்துவரும் இந்தியாவின் கடைசித் தேவதாசியான முத்துக் கண்ணம்மா கூட இந்த அமைப்பை ஆதரித்தவர்களில் ஒருவர்.

1500 ஆண்டு காலம் செழித்திருந்த தேவரடியார் அமைப்பைச் சிதைத்ததில் வெள்ளைக்காரர்கள்தான் தீவிரமாக இருந்தனர். பத்தி இறைச் சேவை என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த இந்த அமைப்பைக் கேவலப்படுத்தி வீழ்த்தியது அவர்கள்தான். நம்முடைய மதம் பற்றி, நம் கலாச்சாரம் பற்றி குறை புரிதல் இருந்ததால் இந்த புனித முறை ஒழிக்கப்பட்டது என்று சொல்வது பற்றி…

பக்தி இறைச் சேவை என்று தொடக்க காலத்தில் இருந்திருக்கலாம். ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ என்ற நூலை எழுதிய முனைவர் கே.சதாசிவம் அவர்கள் அந்நூலின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘எந்த ஓர் உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகளை அதனுள் சுதத்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் போது உருச்சிதைந்து மோசமான நிறுவனமாகப் போய் விடும்.’ இதுதான் இங்கே நடந்துள்ளது. பெண்களை வெறும் காமப் பண்டமாக மாற்றும் வேலைகளை இவர்கள் செய்து விட்டு பழியைத் தூக்கி வெள்ளைக்காரர்கள் மேல் போடுகிறார்கள்.

அர்த்த சாஸ்திரம் கோயிலில் பணிபுரியும் பெண் களைப் பத்து வகைகளாகப் பிரித்துள்ளது. கணிகா, ப்ரதிகணிகா, கணிகாத்யா, ரூபஜீவா, தேவதாஸி, பவிரிஜிகா, வேஸ்யா, தாஸி. சிவ்பாரிகா, கவுஸ் காஸ்திரி. இதில் அய்ந்து வகைப் பெண்களுக்கு வேலை சம்போகம் செய்தல் மட்டுமே ஆகும். இதை விடவா வெள்ளைக் காரர் மோசமாக நம் பெண்களை நடத்தி விட்டார்கள்?

(Artha Sasthra, III 27 as quoted by Chuder)

கலாச்சாரம், பண்பாடு என்றும் அறம். ஒழுக்கம் என்றும் அரற்றிக் கொண்டிருந்த ஒழுக்கவியலாளர்கள் பெண்களை வஞ்சித்த தேவதாகி கடைமுறையை கொண்டாடத் துவங்கி இருப்பதன் பின் உள்ள அரசியல் குயுக்தி எதுவாக இருக்கும்?

ஸநாதனத்தை எங்கும் நிரப்பத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாஸ்டர் பிளான் இது. தேவதாசி முறையை மறுபடி கொண்டு. வருவதன் மூலம் தங்கள் சுகபோக வாழ்க்கையை மீட்டெடுக்கத் துடிக்கிறார்கள். இன்றைய அறிவுலகம் பரந்துபட்டது என்றாலும் முற்போக்கு அமைப்புகள் தீவிரமாகச் செயலாற்ற வேண்டிய நேரம் இது. பிற்போக்குச் சக்திகள் பல கட்டமாக அமைப்பு கட்டி பள்ளிக் குழந்தைகளை நோக்கிச் சென்று பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது. கோயில்களில் குத்து, விளக்குப் பூஜைகள் இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. விநாயகர் ஊர்வலங்கள் பயங்கரவாதச் செயல்களாக மாற்றம் அடைந்திருக்கிறது. அந்த வரிசையில் தேவதாசிகள் பற்றிய செயல்பாடுகளும் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

கோயில், நிலம், ஜாதி எனும் பிரிக்க முடியாத கண்ணிகள் இதற்குள் பொட்டுக் கட்டி தேவரடியாராக குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் வைத்திருந்த நடைமுறைக்கு எதிரான கலகக் குரல்களின் வரலாறு…

எங்குமே உழைப்பாளி மக்கள்தான் பெரும்பான்மை யாக இருப்பார்கள். அதேநேரம் இவர்களுக்கு கல்வி மறுக்கப் பட்டிருக்கும். இவர்களின் உழைப்பில் ஜீவித்தவர்களைப் பற்றியே வரலாறுகள் இருக்கும். மெய்க்கீர்த்தி என்று சொல்லப் படுபவை அரசனின் புகழ் பாடுபவை. பரிசில் பெறும் நோக்கோடு புலவர்கள் பாடி இருப்பவைதான் அதிகம். அரச வரலாறு தான் வரலாறு என்ற கருத்தைத் தாண்டி மக்கள் வரலாறையும் பார்க்க வேண்டும். தேவரடியாராக குறிப்பிட்ட ஜாதி மட்டும் என்றில்லை. தேவரடியார்கள் ஆக்கப் பட்டவர்களை அந்த ஜாதியாக அடையாளப் படுத்தினார்கள். எளிய மக்களைப் பொறுத்தவரை அதை ஒரு நேர்த்திக்கடனாக தங்கள் மகளை, சகோதரியை அனுப்பி வைத்தவர்களும் உண்டு. வறுமை வாய்ப்பட்ட ஒடுக்கப்பட்ட, ஜாதிப் பெண்கள் இதில் அதிகம் இருந்தார்கள்.

சமீபத்தில் நீங்கள் எழுதியிருக்கும் ‘அழகனும் அழகிகளும்’ நூலின் தரவுகளுக்கான களப் பணியில் கிடைத்த மெய்ம்மைகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தேவதாசிகள் பற்றிய கள ஆய்வுகளின் தொகுப்பே ‘அழகனும் அழகிகளும்’ நூலாகும். இதில் அவர்களின் அவல வாழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலை இலக்கியச் செயல்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தேவதாசிகளின் வாழ்க்கை முறை மற்ற பகுதிகளை விட இங்கு சற்று மேம்பட்டதாக இருந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்களோடு நட்பு பாராட்டி தொடர்ந்து சுயாட்சி முறையைப் பின்பற்றியது. இரண்டாவதாக விராலிமலை கோயிலின் மூலவர் முருகன் தமிழ்க் கடவுள். அருணகிரிநாதர், பாம்பன் அடிகள் போன்றோரின் செழுமையான முருகன் பாடல்கள். மற்ற கோயில்களில் மூலவரை நாயகனாகக் கொண்டு பாடி ஆடும் சிருங்கார பாவம் என்பதே பிரதானமாக இருக்கும். இங்கே சிருங்காரம் என்பதோடு வாத்சல்யம் என்ற பாவங்களும் சரி பங்கு வகித்தது. அதாவது செழிப்புச் சடங்கு என்ற பெயரில் தாயன்பைக் கொண்டாடினார்கள். முருகனைக் குழந்தையாக்கி தன்னைத் தாயாக்கிப் பாடும் பாடல்கள். அதற்கு அபிநயிக்கும் ஆடல்களும் உண்டு. விராலிமலை முருகனைக் குழந்தையாக்கி தன்னைத் தாயாக்கி பாம்பன் அடிகள் சேந்தன் செந்தமிழ் என்றொரு நூலும் எழுதி உள்ளார். விராலிமலை முருகளை நாயகனாகக் கொண்டாடி ஆடிப் பாட விராலிமலைக் குறவஞ்சியும் முருகனைக் குழந்தையாக்கி தாலாட்டுப் பாட சேந்தன் செந்தமிழும் உண்டு. கோலத்தில் புள்ளிகளுக்குப் பதிலாக எழுத்துகள் வைத்து சித்திரக் கவி வரைவார்கள்.

1993இல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் அவர்களின் முயற்சியால் தேவதாசி முறையில் இருந்து முப்பத்து மூன்று பெண்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் பயிற்சி கொடுத்து வங்கிக் கடன் மூலம் வாழ்வாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்பெண்கள் தீவிர வறுமையிலும் பழைய முறைக்குப் போய் விடாமல் கவுரவமாக வாழப் பழகிக் கொண்டார்கள். அவர்களின் மன உறுதியைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் அய்ந்து சென்ட் வீட்டு மனையை கலெக்டர் வழங்கினார். அவர் மாற்றலாகிப் போனபின் ஊராட்சி நிர்வாகம் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

கடந்த முப்பது ஆண்டுகளாக அதற்கு இடைவிடாத முயற்சிகள் எடுக்கப்பட்டு ஒரு ஆண்டிற்கு முன் அந்த இடங்கள் மீட்கப்பட்டன. இப்போது இடத்தோடு அவர்களுக்கு வீடும் கிடைத்தது. சென்ற ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் அதைத் திறந்து வைத்தார்கள். அதைப் பெறுவதற்காக முப்பது ஆண்டுகளாக எடுத்த முயற்சிகள் யாவும் ‘அழகனும் அழகிகளும்’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேர்காணல்: ஆர்.நீலா
த.மு.எ.க.ச. மாநில துணைத்தலைவர்
சந்திப்பு: மணிமாறன்
நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது‘, அக்டோபர் 2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *