‘பணி நீக்கம் என்பது ஒருவரை தூக்கிலிடுவதற்கு சமம்’ பெரியார் பல்கலை. துணைப் பதிவாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

- Advertisement -

சேலம், அக். 21- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்த ஆர்.சரவணன் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப் படையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தனது பணிநீக்கத்தை எதிர்த்து சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, இந்தப் பணி நீக்கத்தை ரத்து செய்து சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழக நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஆர்.சரவணனை பணிநீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சரவணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சிறீசந்திரசேகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த பணிநீக்க உத்தரவை ரத்து செய்து, சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசு ஊழியர் ஒருவரை பணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான தண்டனையில் ஒன்றாகும். அது மரண தண்டனைக்கு நிகரானது. ஒரு அரசு ஊழியரை பணிநீக்கம் செய்தால், அவரது குடும்பம் பாதிப்புக்குள்ளாகி, தொடர்ச் சியாக பல்வேறு பாதிப்புகள் வரும்.

பல்கலைக்கழகம் அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம், எந்த ஆதாரமும் இல்லாமல், மனுதாரரை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. வதந்திகளின் அடிப்படையில் ஒருவரைத் தூக்கி லிடுவதைவிட மோசமான அநீதி வேறு என்ன இருக்க முடியும்?

மனுதாரர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை எந்த அடிப்படையில் சிண்டிகேட் குழு ஏற்றுக் கொண்டது என்பதற்கான காரணம், பணிநீக்க உத்தரவில் பதிவு செய்யப்படவில்லை.

ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரி, வெறும் ஊகங்கள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் அறிக்கை இருப் பதை கவனிக்கத் தவறிவிட்டார்.

சட்டப்பூர்வமான ஆதாரமின்றி பணியில் இருந்து நீக்கும் தண்டனையை விதித்ததன் மூலம் ஒழுங்குமுறை அதிகாரி இயற்கை நீதிக்கு புறம்பாகச் செயல்பட்டுள்ளார். ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையில் உள்ள முடிவுகளை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆராய்ந்து தீர்ப்பளித்தது முற்றிலும் சரியானது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *