நாட்டின் முன்னணி அரசியல் கேலிச்சித்திரக் கலைஞரான சதீஷ் ஆச்சாரியாவின் சமூகவலைதளக் கணக்கு மற்றும் அவரது சில அரசியல் கேலிச்சித்திரங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
நாட்டின் நடப்பு அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு நிர்வாகம் குறித்த விமர்சனக் கேலிச்சித்திரங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருபவர் சதீஷ் ஆச்சாரியா.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் சட்டப்பூர்வக் கோரிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள பயனர்கள் பார்க்க முடியாதவாறு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒன்றிய பிஜேபி அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தொடர்பான அவரது அண்மைக்கால கேலிச்சித்திரங்கள் மற்றும் சில விமர்சனப் பதிவுகள் குறித்து இந்திய அரசு அல்லது சட்ட அமலாக்க முகமைகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ‘மெட்டா’ தெரிவித்துள்ளது.
தற்போதைய படங்கள் மட்டுமன்றி, கடந்த 2023-ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட சில பழைய கேலிச்சித்திரங்களுக்கும் தற்போது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சதீஷ் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை இந்தியாவிற்குள் மட்டுமே அமலில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள பயனர்கள் வழக்கம்போல இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடிகிறது.
இந்த நடவடிக்கைக்குத் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சதீஷ் ஆச்சாரியா, “கேலிச்சித்திரங்களைக் கண்டு இவ்வளவு பயப்படும் ஒரு அரசை நான் பார்த்ததே இல்லை!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “பயத்திற்கு அப்பால் வெற்றி இல்லை, சாஹேப்!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பிரபல கார்ட்டூனிஸ்டான ‘மஞ்சுள்’ வரைந்த தேர்தல் ஆணையம் குறித்த கேலிச்சித்திரமும் சமூகவலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இந்தியாவில் முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்பாட்டிற்குத் தீவிர கண்டனம் தெரிவித்துள்ள கேரளா கார்ட்டூன் அகாடமி, கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சாரியா மற்றும் மஞ்சுள் ஆகியோருக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அகாடமி வலியுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் அரசியல் சாடல்கள், நகைச்சுவை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடாக விளங்கும் கேலிச்சித்திரங்கள் மீது அரசுகள் எடுக்கும் இத்தகைய தடைகள், ஜனநாயகத்தின் முக்கியமான தூணான “பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு” விடப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்றும் இரண்டாவது அவசரநிலைப் பிரகடனமா? எனவும் பல்வேறு ஊடகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனத்தைக் கண்டு ஓர் அரசு நடுங்குகிறது என்றால் அது, அதன் ஆளுமைத் தன்மையின் பலகீனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது என்று பொருள்.
நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அம்மையார் அறிவித்த கால கட்டத்தில் (1975–1976) பத்திரிகைகளுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தார். அதன் பலனை 1977 மார்ச்சில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அனுபவித்தது – மக்கள் சரியான பாடத்தைப் பதிலடியாகக் கொடுத்தனர்.
பிஜேபிக்கும் அதேநிலைதான் ஏற்படப் போகிறது என்பதற்கு அடையாளம்தான் – ஊடகவியலாளர் களின் படைப்புகளுக்குத் தடை விதிப்பதும்!
