ஆணவப் படுகொலைகளை ஒழிக்க வேண்டும்; ஒளிக்கக் கூடாது!

4 Min Read

கல்வி அறிவும், எல்லோரும் சமம் என்ற சட்டமும் வந்த பின்னும் ஜாதி உணர்வும், ஆணவமும், வெறியும் குறைந்தபாடில்லை. நூறு ஆண்டுகாலம் தொடர்ந்து பரப்புரைகளால் பண்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாட்டை மீண்டும் ஜாதி, மத வெறி மண்ணாக மாற்றத் தொடர்ந்து தூபம் போடப்படுகிறது. ஜாதி, மத வெறிச் சக்திகளுக்கு ஏராளமான நிதியும், விளம்பரமும், அரசியல் அனுசரணையும் கிடைக்கிறது. இவையெல்லாம் ஜாதிச் சங்கங்களில் போட்டிக் கம்பெனிகளைப் போல, புதிய புதிய சங்கங்கள் தோன்றவும், அதில் செயல்படுவோர் இன்னும் தங்களை வேகமாகக் காட்டிக் கொள்ள வன்முறைகளுக்கு உடன்நிற்கவும் காரணங்களாகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிர்ச்சியூட்டக்கூடிய அளவில் தமிழ்நாட்டின்  தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடியில்   நிகழ்ந்திருக்கக்கூடிய ஜாதி ஆணவப்படுகொலைகள் கடும் கண்டனத்திற்குரியன.

கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் – கண்ணகி ஆகியோரின் மகள் ராமலட்சுமி என்பவர், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகத் தன் உடன் பிறந்த சகோதரர் முத்துக்கிருஷ்ணன் என்பவராலேயே, கடந்த 8ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், சில ஊடகங்களில் அவர் அதிகம் செல்பேசி பயன்படுத்தினார் என்பதால் தகராறு ஏற்பட்டு கொல்லப்பட்டதாக உண்மையைப் பூசி மெழுகி செய்தி வெளியிடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் அபிசெல்வியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இதனை அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் கண்டித்துள்ளார். இருந்தும் தன் காதலில் உறுதியாக இருந்த அபிசெல்வியை  கடந்த 9ஆம் தேதி மாலை  சிவஞானம் பலமாகத் தாக்கி இருக்கிறார். இதனால் அபிசெல்வி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலையை சிவஞானமும், அவரது தாய் எஸ்தர் பாலினும் சேர்ந்து தற்கொலையாக மாற்ற, அபிசெல்வியின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர். உடற்கூராய்வின் மூலம் இது கொலைதான் என்று தெரியவந்து, தற்போது இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 18 வயது நிரம்பிய சஞ்சய் என்ற இளைஞர், பேருந்துநிலையத்தில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  கோவில்பட்டி அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமியைச் சஞ்சய் கடந்த சில காலமாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சஞ்சய், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் (ஒரே ஜாதியினர்) என்றும் சொல்லப்படுகிறது. ஆயினும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சஞ்சய்யை நேரில் வரவழைத்து, கனகலெட்சுமியின் கண் முன்னேயே குத்திப் படுகொலை செய்துள்ளனர் அப் பெண்ணின் தந்தையும் அவரது உறவினர்களும்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால், சிவமதி என்ற பெண் திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், தான் காதலித்த பெண்ணின் சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு அப் பெண்ணின் தந்தையும், தாயும் உடந்தை என்பது வெளியானது. அவ் வழக்கும் விசாரணையில் உள்ளது.

தொடர்ந்து தென் தமிழ்நாட்டில் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நிலவி வருவதும், ஆணவக்கொலைகள் நடப்பதும் மிகுந்த கவலையோடும், அக்கறையோடும் அணுக வேண்டிய பிரச்சினைகளாகும். இத்தகைய கொலைகளைச் செய்யக் கூடிய மனநிலை எப்படி வருகிறது? அவர்களுக்கு வழக்கு ரீதியாக ஆதரவு அளிப்போர் யார்? சில கொலைகளைத் தற்கொலைகள் என்று அறிவிக்கவும், அல்லது ஆணவப் படுகொலைகள் என்ற அடையாளப்படுத்துவதைத் தடுக்கவும் காவல்துறை தீவிரமாகச் செயலாற்றுவது ஏன்? அண்மையில் அபிசெல்வி கொலையில் கூட காவல்துறையால் ஊடகங்களுக்கு முதலில் அப்படியான நெருக்கடி ஏன் தரப்பட்டது?

ஆணவப் படுகொலை என்பதற்குப் பதில் குடும்பத் தகராறில் என்று செய்தி வெளியிடப்படுவது ஏன்? காவல்துறையிலேயே ஜாதி ஆணவத்துக்குத் துணை போகும் போக்கு இருப்பதாக இது காட்டவில்லையா? தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தென்மண்டல அய்ஜி குறிப்பிட்டுள்ளார். சட்டப்படியான நடவடிக்கை என்பது, கொலையோ, வன்முறையோ நடந்தபிறகு கைது செய்வதும், வழக்குத் தொடுப்பதும் மட்டுமல்ல, இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் எச்சரிக்கையுடன் தடுப்பதும், புகார்கள் வரும்போது அவற்றைத் தொடக்கத்திலேயே சரியாக அணுகுவதும், இதற்கு உடன் நிற்போரைக் கட்டுப்படுத்துவதும், உரிய எச்சரிக்கைகளை, விழிப்புணர்வை அந்தப் பகுதியில் அதிகப்படுத்துவதும் கூட சட்டப்படியான அமைப்புகளால் செய்யப்பட வேண்டியவை தான். மேலும், ஜாதி ஒழிப்பு, சமூகநீதி அமைப்புகளின் பிரச்சாரங்கள், பள்ளிகள் தொடங்கி, கிராமங்கள் வரை எல்லா வயதினரிடமும், எல்லா தரப்பினரிடமும் செய்யப்பட வேண்டும். ஆணவப் படுகொலையின் மூலம் ஜாதி! ஜாதிக்கு மூலம் மதம், கடவுள், சாஸ்திரம், பார்ப்பனியம் எல்லாம் தான்! இவை இல்லாமல் ஜாதி தனியாக வரவும் இல்லை; பாதுகாக்கப்படுவதும் இல்லை. இவற்றை ஒழிக்காமல் ஜாதி ஒழிப்பும் இல்லை. ‘இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீது இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.’ என்கிறார் தந்தை பெரியார். ஆணவப் படுகொலைகளுக்கும், ஜாதிக்கும் எதிராகப் பேசினால், ஏதோ ஒரு தரப்பின் ஆதரவு கிடைக்காமல் போகுமே என்று அரசியல் உணர்வோடு இதனை அணுகக் கூடாது ஆட்சியில் இருப்போர்!

மூடி மறைப்பது இவற்றை ஒழித்ததாக ஆகாது. இது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. அதற்குச் சட்டமும் தேவை, பிரச்சாரமும் தேவை. ஒன்றை அரசு செய்ய வேண்டும், மற்றொன்றை இயக்கங்கள் செய்யும்போது அதனை ஆதரிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *