மதுரை, அக். 20- வெற்றிப் பயணத் திட்டத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்து, அவை அதலபாதாளத்தில் வீழும் நிலை உருவாகியுள்ளதாகப் போக்குவரத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை உள்ளிட்ட மாவட்டங் களில் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட பெண் களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின்கீழ், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதந்தோறும் மானியத் தொகை முறையாக வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது, இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகள் அதிகரித்துள்ள தாகவும், அதற்கேற்ப மானியத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், நடத்துநர்களுக்கான பயணப்படி கூட சரிவரக் கிடைப்பதில்லை என்றும் பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நட்டத்தில் இயங்கும் போக்குவரத்து நிறுவனங்கள் அதல பாதாளத்தில் வீழும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் டீசலுக்கான பணம், டயர், பிரேக்சூ கிளச் பிளேட் என செலவுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடைசியாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வந்த நிலை தான் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும் வரப் போகிறது.
இந்தப் பேருந்துகள் எல்லாம் ஒரு காலத்தில் டிவிஎஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நாட்டுடமையாக்கப் பட்டு மக்களின் சேவை அமைப்பாக இயங்கியது. ஆனால், தற்போது, நடத்துநர்கள் நாள்தோறும் பயணப் படியாக கணிசமான தொகை கிடைப்பது கூட கேள்விக் குறியாக மாறி வருகிறது.
மாதம்தோறும் அரசுப் போக்கு வரத்துக் கழகங்களுக்கு மானியத் தொகையை விடுவித்தால் மட்டுமே நட்டத்தை ஈடு செய்து பேருந்துகளை இயக்க முடியும். தற்போது பல பேருந்துகள் இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதில் தற்போது, தவெக கட்சிக் கொடி வண்ணத்தில் மாவட்டத்திற்கு பல பேருந்துகள் கொடுத்துள்ளனர். அந்தப் பேருந்துகள் ஒரே மாதத்தில் சாலைகளில் பழுதாகி நின்று விடுகின்றன. பொதுமக்களை வைத்து தள்ளிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன என்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண்களுக்கு கடந்த ஆட்சியிலேயே இலவசப் பேருந்துப் பயணம் என்பது கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அதனை விரிவாக்கம் செய்வதாக அதன், நிதிச்சுமையை போக்கு வரத்து கழகத்தின் மீது சுமத்தியிருப்பது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில், அந்தத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, போதிய எண்ணிக்கை யில் இயக்கப்பட வேண்டும்.
பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதும், ஊழியர்களுக்குச் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதும் பொதுமக்களைத்தான் நேரடியாகப் பாதிக்கும். எனவே, இலவசப் பயணத் திட்டத்துக்கான மானியத்தை உரிய காலத்தில் வழங்கி, பொதுப் போக்கு வரத்துச் சேவையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்துள்ளனர்.
