புதுடில்லி, அக்.19 எஸ்அய்ஆர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டில்லி யில் நடைபெற்ற ஜனநாயகப் போராட் டத்தின் போது, பெண் ஆர்ப்பாட்டக் காரர்கள் மற்றும் பெண் பத்திரிகை யாளர்கள் மீது டில்லி காவல்துறை அதிகாரிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் கடுமையான அத்துமீறல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அறவழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய இந்த அடக்குமுறைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பெண்கள் மற்றும்
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
போராட் டத்தின் போது பெண் ஆர்ப்பாட்டக் காரர்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதுடன், தடுப்புக் காவல் பேருந்துகள் மற்றும் காவல் நிலையங்களுக்குள்ளும் பாலியல் வன்முறை மற்றும் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இக்கொடூரச் செயலைக் கண்டித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மகளிர் அமைப்புகள் இணைந்து டில்லியில் மாபெரும் பேரணியை நடத்தின.
காவல்துறை தலைமையகம் முற்றுகை
குருத்வாரா பங்களா சாஹிப் அருகே தொடங்கிய பேரணி, டில்லி காவல்துறை தலைமையகத்தை நோக்கிச் சென்றது. “நீங்கள் எங்களை அச்சுறுத்தலாம், ஆனால் அமைதியாக்க முடியாது” என்ற முழக்கங்களுடன் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண் காவல்துறை அதிகாரிகள் பெண்களைத் தாக்கும் காட்சிப் பதிவு ஆதாரங்களை டில்லி கூடுதல் துணை ஆணையர் ஜக்தேவ் சிங்கிடம் காண்பித்து மகளிர் அமைப்பினர் அதிகாரப்பூர்வ மனு அளித்தனர்.
தவறு இழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், எஸ்அய்ஆர் (SIR) விவகாரத்தில் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஜனநாயக முறையில் உரிமைக்காகக் குரல் கொடுத்த பெண்கள் மீது காவல்துறையே பாய்ந்த இந்த நிகழ்வு தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கருத்துரிமை கேள்விக்குறியாகியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மகளிர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையே, தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் அத்துமீறல்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுவது ஒட்டுமொத்த ஜனநாயக முறைக்கும் விடப்பட்டிருக்கும் நேரடிச் சவாலாகும்.
இத்தகைய மனித உரிமை மீறல்கள்மீது அரசு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறுவது சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்குகிறது.
