மூடத்தனத்தின் முழு வெளிச்சம் இதோ! வெட்கம்! மகாவெட்கம்!!

- Advertisement -

நாளை (19.10.2026) சரஸ்வதி பூஜையாம்!

இதுபற்றி இன்றைய (18.10.2026) ‘இனமலர்’ வார மலரில்’ ஒரு கட்டுரையில் ‘‘தேடித்தேடி படியுங்கள்’’ என்று ஒருவர் புராணப் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்!

எப்படிச் சிரிப்பதென்றே தெரியவில்லை!

ஏஅய் என்ற செயற்கை நுண்ணறிவு ஓங்கி வளர்ந்து, அதன் பலன்களில் தீய விளைவுகளை ஒதுக்கி, நல்ல வளர்ச்சி, முன்னேற்றத்தைப் பெறுவதற்கு அறிவுரை கூறும் அறிவியல் அறிஞர்கள், மற்ற நாடுகளில் உச்சக்கட்ட ஆராய்ச்சியில் இருக்கின்றனர். இப்போது  இந்த ‘சரஸ்வதி’ பூஜை – புராணக் கதைகளை, சாதாரண அறிவு படைத்தவன்கூட, உரிய முறையில், சிந்தித்தால் ஏற்பானா?

அதுவும், அறிவியல் வளர்ந்தோடிய எலான் மஸ்கின் மின்சாரக் கார், சாலைகளில் ஓடி, தேவையானால் பறக்கவும் தொடங்கிவிட்ட செய்தி ஒருபுறம்.

மற்றொரு புறம், காணாமல் போன சரஸ்வதி நதிக்குக் கப்சா புராணங்களின் கற்பனைக் கட்டுக்கதைகள் – பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றிவிட்டால், எப்படியெல்லாம் உளறுவான் என்பதற்கு நல்ல நல்ல ‘சாம்பிள்கள்’ இவை!

‘இனமலர்’ எழுத்தாளரின் கப்சா புராணம் இதோ:

‘‘உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு காலத்தில், இமயமலையிலுள்ள, கார்வால் பந்தர்பஞ்ச் சிகரத்தில் இந்த நதி உற்பத்தியாகி, குஜராத் வரை பாய்ந்து கடலில் கலந்ததாம். பந்தர்பஞ்ச் என்றால், குரங்கின் வால் என்று அர்த்தம்.

இலங்கையில், அனுமனின் வாலில் அசுரர்கள் தீ வைக்க, அதை அணைக்க, சரஸ்வதி நதி நீரில், தன் வாலை மூழ்க வைத்து, தீயை அணைத்தாராம், அனுமன். இதனால்தான், இந்த இடத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது. பிறகு, பூமியில் ஏற்பட்ட பல மாற்றங்களால் இந்த நதி மறைந்து விட்டது என, அறிவியல் கூறுகிறது.

ஆனால், வியாசர், பாரதத்தை இயற்றும்போது, இது எழுப்பிய சத்தம் அதிகமாக இருந்ததால், ‘பூமிக்குள் போ…’ என, சொல்லிவிட்டாராம். பிரம்மா, யாகம் செய்யும்போது, தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில், சரஸ்வதி தேவி நதியாக மாறி, பூமியில் மறைந்ததாகவும் ஒரு கதை உண்டு.

தற்போது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில், இந்த நதி, கங்கை மற்றும் யமுனையுடன் மறைமுகமாக கலந்திருப்பதாக சொல்கின்றனர். எனவே, இந்த இடம் புகழ்பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராடுகின்றனர்.’’

இதில் ஏதாவது பகுத்தறிவுக்குப் பொருத்த மானதாக உள்ளதா?

  1. இலங்கை எங்கே? உத்தரகாண்ட் எங்கே?

தீ வைக்கப்பட்ட தனது வாலை, சரஸ்வதி நதியில் வைத்தானாம் – அனுமார் வால் இலங்கை யிலிருந்து உத்தரகாண்ட் வரை நீளமானதா?

இராமாயணக் கதைப்படி அனுமன் விஸ்வரூபம் எடுத்து, இராவணனுக்கு ஒரு படி மேலே அமர்ந்து, இராவண சபையில் விவாததித்தானாம். ‘‘குரங்கே, யார் நீ?’’ என்று இராவணன் கேட்டபோது, ‘‘அந்த இராமனுக்குத் தூதன் நானடா?’’ என்று அனுமன் பாடியதை நாடகக் காட்சி (கற்பனை)களில் பலமுறை நடத்தியுள்ளார்கள்.

இரண்டும் முரண்பாடு அல்லவா?

  1. எப்படி சரஸ்வதி நதி மறைந்தது என்று மூன்று செய்திகளைச் சொல்கிறார் அவர்!

‘‘பிறகு பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் சரஸ்வதி நதி மறைந்துவிட்டது’’ என அறிவியல் கூறுகிறதாம்!

‘‘வியாசர் பாரதத்தை எழுதும்போது இது எழுப்பிய சத்தம், அதிகமாக இருந்ததால், ‘பூமிக்குப் போ’ எனச் சொல்லிவிட்டாராம்!’’

பிரம்மா யாகம் செய்யும்போது தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில், சரஸ்வதி நதியாக மாறி, பூமியில் மறைந்ததாகவும் ஒரு கதை உண்டாம்!

எப்படி ‘ரீல்’ பார்த்தீர்களா?

இதை எழுதியவரும் (கட்டு) கதை என்று தன்னை அறியாமல் எழுதிவிட்டார்.

அதன் பிறகு, ஏதேதோ உளறல்கள்! அவ்வையாரும் ‘கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்றதற்கு இதுவே உதாரணமாம்.

சரஸ்வதி மறைவின் தத்துவம் போதிக்கிறதாம்!

அட, புளுகுணிப் பண்டாரங்களா!

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு இப்படி எழுதுகிறீர்களே, மற்றவர்களின் அறிவையும் அடகு வைக்கச் சொல்கிறீர்களே, இதுதான் உங்கள் ஆன்மிகமா?

நம்பு, நம்பு என்று சொல்லி, நாட்டை, மூடநம்பிக்கை வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்களே, நியாயமா?

தீபாவளிப் பண்டிகை விழாவுக்கு இது – ‘உருட்டைக்கு நீளம் – புளிப்பில் அதற்கு அப்பன்’ என மூடநம்பிக்கை. அவ்வளவுதான்! ‘இனமலர் கூட்டமே, நீங்கள் எல்லாம் சமூக அறிவு வளர்ச்சியைத் தடுத்து, மூடநம்பிக்கையைப் பரப்பும் ‘வைரஸ்’ கிருமிகள்’ அல்லவா?

இந்த நோயைத் தீர்க்கும்  ஒரே மருந்து, பெரியார், பெரியார்தானே!

ஒரே நிகழ்வு, அதற்குப் பல கதைகள்! அது கட்டுக்கதைப் புராணம்தான் என்பது எளிதாக யோசிக்கும் எவருக்கும் தெரியுமே!

அட, மூடர் கூட்டமே, எப்போது நீங்கள் திருந்தப் போகிறீர்கள்?

இந்தப் பத்திரிகை இம்மாதிரி வேலைகளை 75 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இதற்குச் ‘சலாம்’ போடும் – விளம்பர வியாபாரிகளை என்ன சொல்வது?

வெட்கம்! மகாவெட்கம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *