போதையின் பாதையை அடைப்போம்!

3 Min Read
- Advertisement -

நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக, பன்னாட்டுப் போதைப் பொருளான மெத்தபெட்டமைன், இலங்கைக்கு கடத்தப்படுவதாக, ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையொட்டி, திருச்சி மண்டலத்தில் இருந்து, 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், கடந்த 16ஆம் தேதி அதிகாலை, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்தி வரும், பிரதாபராமபுரத்தை சேர்ந்த சுகநாதன், 27, என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 140 கோடி ரூபாய் மதிப்புடைய, 137 கிலோ மெத்தபெட்டமைன் இருப்பதைக் கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர். விசாரணையில், திருப்பூண்டியை சேர்ந்த வழக்குரைஞர் பூபாலன் என்பவர் தலைமையில், இலங்கைக்கு கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இவர் ஆளுங்கட்சியான த.வெ.க.வின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

நாகையில் இருந்து கடல் மூலமாக இலங்கைக்கு மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடந்த சில காலமாகத் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்துள்ளது. இதுபோன்ற புகார்கள் கிளம்பியும் கூட கடத்தல் சம்பவங்கள் குறையவில்லை எனவும் பேசப்பட்டு வந்ததாம். நாகை கடற்பகுதியில் இருந்து போதைப்பொருளைக் கடத்திச் சென்று நடுக்கடலில் இலங்கையில் இருந்து வரும் படகில் மாற்றி விடுவதாக புகார் எழுந்தது.

நேபாளத்திலிருந்து வட இந்தியா, பெங்களூரு வழியாகத் தமிழ்நாட்டுக்குள்  மூலப் பொருள்கள் வந்ததாக அண்மையில் கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாட்டிலேயே இராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள இளையான்குடியில், ஒரு லேத் பட்டறையில் கடந்த இரு மாதங்களுக்கும் முன்னர், மெத்தபெட்டமைன் தயாரிக்கப்பட்டதாக கைது நடந்திருக்கிறது. இதன் மூலாதாரத்தைத் தேடியிருக்க வேண்டாமா? போதைப் பொருள்கள் கடத்தல் பகுதியாக மட்டும் இது இருக்கும் என்று கருதிவிடக் கூடாது. உள்நாட்டுக்குள் ஊடுருவ இதுவே வழியாக அமையும். தமிழ்நாட்டைப் போதைப் பொருள் சந்தையாக்கும் ஆபத்து இதன் பின்னால் உள்ளது.

தமிழ்நாட்டில் 65 போதைப் பொருள் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது என்று, தாம் பொறுப்பேற்ற போது முதல் கையெழுத்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பாட்டை வேகப்படுத்தியிருக்க வேண்டாமா? தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்புப் படையைத் தாண்டி, ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை வந்து கண்டுபிடிக்க வேண்டிய அளவு, நமது உளவு அமைப்புகள் கோட்டைவிட்டுள்ளனவா? இது தொடர்பாகச் செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சி மாறிவிட்டது என்பதை அடிக்கடி மறந்து போகும் நமது அமைச்சர்கள், கடந்த ஆட்சியில்… கடந்த ஆட்சியில்… என்று இன்னமும் பழைய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் திருச்சியில் ரவுடிகளை ஒடுக்கிய அரசு என்றும், ஒரே நாளில் சட்டம் ஒழுங்கைச் சீராக்கிய அரசு என்றும் விடலைகளைக் கொண்டு காணொலிகள் வெளியிடுவதால், மயக்கத்தில் இருப்பவர்களை மீண்டும் மயக்கத்தில் ஆழ்த்தலாம். அது உண்மையை ஒருபோதும் பிரதிபலிக்காது.

திருவாரூர் மாவட்ட மன்னார்குடியில், ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்ற கல்லூரி மாணவர்கள் அய்ந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியும் இன்று வெளியாகியுள்ளது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் இந்த விற்பனை இருப்பது கவனமாகக் கையாளப்பட வேண்டிய தாகும். கடந்த சில நாட்களுக்கு முன்னால், சென்னையை யடுத்த புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இதே போல மாணவர்கள் மத்தியில் இருந்த போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ள செய்தி வந்துள்ளது.

இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். குறிப்பாக அரசுகளின் கடமையாகும். இது அரசியல் பிரச்சினையல்ல. போதைப் பொருள் கடத்தலில் இருக்கும் பன்னாட்டு வலையமைப்பு, அதன் கண்ணிகளாக நம் நாட்டிலிருந்து செயல்படும் நபர்கள், அதன் பின்னணியில் இருந்து மறைமுக ஆதரவு அளிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அனைவர் மீதும் உரிய பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இத்தகைய கொடுமையிலிருந்தும் நம் சமூகத்தைக் காக்க முடியும். எளிய வகை போதைப் பொருள்களில் தொடங்குவதுதான், மெத்தபெட்டமைன் போன்ற பன்னாட்டுப் போதைப் பொருள்கள் வரை படிப்படியாகக் கொண்டு செல்கிறது.

போதைப் பொருள் பயன்பாடு தொடக்கம் முதலே தடுக்கப்பட வேண்டும். எந்த வகையிலும் அரசு ஊழியர்களோ, காவல்துறையோ இத்தகைய பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமை, நடவடிக்கை எடுக்காமை போன்ற சமூக விரோத, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும். மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *