வாசிங்டன், அக். 19- இரவு நேரத்திலும் பூமியில் குறிப்பிட்ட இடங்களில் சூரிய ஒளியைப் பாய்ச்சும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த அமெரிக்காவின் ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எப்படி ஒளி கிடைக்கும்? பூமியின் இரவுப் பகுதியில் நேரடியாகச் சூரிய ஒளி படாது. ஆனால், விண்வெளியில் கண்ணாடி பொருத்திய செயற்கைக்கோளை நிலைநிறுத்தி, சூரிய ஒளியைப் பூமியில் குறிப்பிட்ட இடத்துக்குத் திருப்ப முடியும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை.
செயற்கைக்கோளின் நிலை, கண்ணாடியின் கோணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, தேவையான இடத்தில் ஒளியைப் பாய்ச்சத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் அய்ந்து கி.மீ. அகலமுள்ள பகுதிக்கு ஒளி அளிக்கவும், அதன் பிரகாசத்தைக் கூட்டிக் குறைக்கவும், தேவை முடிந்ததும் நிறுத்தவும் முடியும் என நிறுவனம் கூறுகிறது. எனினும், இந்தத் தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது.
இரவு நேரத்தில் பேரிடர் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், தொலைதூரத் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகளுக்கு வெளிச்சம் அளிக்கவும் இத்தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய மின்நிலையங்களில் மின் உற்பத்தியை நீட்டிப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்று. ஆனால், இதன் நடைமுறைச் சாத்தியமும் செலவுப் பயனும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இத்திட்டத்துக்காக இந்தியாவின் ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் மூலம் முதல் செயற்கைக்கோளையும், மேம்படுத்தப்பட்ட விக்ரம்-1யு ராக்கெட் மூலம் இரண்டாவது செயற்கைக்கோளையும் ஏவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1993-ஆம் ஆண்டு ரஷ்ய அறிவியலாளார்கள் ‘ஸ்னாம்யா’ திட்டத்தின் கீழ் விண்வெளியில் கண்ணாடியை நிலைநிறுத்தி சூரிய ஒளியைப் பூமிக்குத் திருப்பினர். நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. தற்போதைய திட்டத்துக்கு எதிராகச் சுற்றுச்சூழல் அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. இரவில் பாய்ச்சப்படும் பிரகாசமான ஒளி வனவிலங்குகளைப் பாதிக்கலாம்; வானியல் ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம்; மனிதர்களின் உடல் நேரச் சுழற்சியையும் பாதிக்கலாம் என அவை எச்சரித்துள்ளன.
இரவில் சூரிய ஒளியைப் பெறும் நோக்கில் கண்ணாடி பொருத்திய செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பத் திட்டம்
Leave a Comment
