இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சர்.ஆர்.கே. சண்முகம் பிறந்தநாள் இன்று (17.10.1892)

- Advertisement -

ஆர்.கே. சண்முகம்   அவர்கள்  இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற அரசியல் பொருளாதார மேதை ஆவார்.

“எனது ஆசான் தந்தை பெரியார்” என்று காந்தியாரிடம் பெருமையுடன் கூறிய சர்.ஆர்.கே சண்முகம் அவர்கள் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாளில் கோவையில் பிறந்தார்.

சர்.ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) நீதிக்கட்சி, சுயராஜ்யக் கட்சி எனப் பல்வேறு காலகட்டங்களில் இயங்கியவர் ஆவார். தந்தை பெரியார் அவர்களுடன் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.

காந்தியார் அவர்கள் ஒரு சமயம் ஆர்.கே.சண்முகம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவர்கள் உரையாடலில் கடவுள், மதம், சாஸ்திரங்கள், பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முதலியவைகள் முக்கிய இடம் பெற்றிருந்தன.

ஆர்.கே.சண்முகம் அவர்களின் அறிவாற்றல் மிக்க வாதத்திறமை கண்டு காந்தியார் அயர்ந்து போனார்.

காந்தியார் அவர்கள் சண்முகம் அவர்களைப் பார்த்து “ஆமாம் இவ்வளவு அழகாகவும், திறமையாகவும் விவாதிக்கின்றீர்களே இத்துறையில் தங்களுக்குக் குருவாக வாய்த்தவர் யார்? என்று கேட்டார்.

அதற்குச் சண்முகம் அவர்கள். இத்துறையில் எனக்குக் குரு தங்களின் மாஜி சீடரான நமது நண்பர் ஈரோட்டு இராமசாமி நாயக்கர் அவர்களேதாம்” என்றும்  “நான் அரசியல் அரிச்சுவடியைத் தந்தை பெரியார் அவர்களிடம் தான் பயின்றேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்ட ஆர்.கே. சண்முகம்  தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்.

இந்தச் செய்தி காந்தியாருக்கு மிக்க ஆச்சரியத்தை அளித்தது. “ஈரோடு இராமசாமி நாயக்கரா தங்கள் குரு? அவர் இப்படிப்பட்ட கொள்கை உடையவர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாதே. இந்தப் பிரச்சினைகளில் எனக்கும் அவருக்கும் இருக்கின்ற கருத்து மாறுபாடுகளைப் பற்றி நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்.

சண்முகம் அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர் களிடம் நடந்த செய்தியைக் கூறலானார்.

1930ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில சுயமரியாதை மாநாட்டிற்கு வரவேற்பு குழுவின் தலைவரும் இவரே.

1931 ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆம் தேதி களில் விருதுநகரில் நடைபெற்ற சுய மரியாதை இயக்க 3ஆவது மாநில மாநாட் டிற்கும் இவர் தலைமை தாங்கினார்.

தந்தை பெரியாரின் மாணக்கராக இருந்த காரணத்தால் காங்கிரஸ்காரராக இல்லாத போதும் காந்தியார் ஆர்.கே சண்முகத்தை இந்திய நிதி அமைச்சராக நியமிக்க பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பரிந்துரை செய்தார். இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமைக்குரிய தமிழர் சர். ஆர்.கே.சண்முகம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குப்பின் 1947 ஆம் ஆண்டு நவம்பர்
26 ஆம் நாளில் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தவர் இவரே ஆவார்.

உலக வங்கி நிறுவப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று உரையாற்றியவர். பிரிட்டனிடம் இருந்து  இந்தியாவிற்கு வர வேண்டிய சுமார் 1,500 கோடி ரூபாய் இழப்பீட்டையும் தங்க இருப்பையம்  ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் பெற்றதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

தகவல் :  பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *