தலைநகர் டில்லியில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற மாணவர் அமைப்பு போராட்டம் ஒன்றில், அரசு கொள்கைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை காவல்துறை கைதுசெய்து வாகனத்தில் ஏற்றியது. வாகனத்தில் அமர்ந்த மாணவி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினார்.
இந்தச் செயலைத் தொடர்ந்து, டில்லி பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கினார். மேலும், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, பெல்ட் மற்றும் கம்பால் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
காவல் நிலையத்திற்குள் மாணவி வலியால் அலறிய சத்தமும் நிலையத்தின் வெளியே வரை கேட்டதாக அங்கிருந்த சாட்சிகள் வேதனைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது பாதிக்கப்பட்ட தரப்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, துறை ரீதியான விசாரணைக்காக ஆஜராகிவிட்டு வெளியே வந்த அந்தப் பெண் காவலரை அழைத்துச் செல்வதற்காக ஒரு விலை உயர்ந்த சொகுசு கார் வந்து நின்றது. அதில் அவர் ஏறிச் சென்ற காட்சி பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
பொதுவாக டில்லி காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளே பயணிக்காத விலை உயர்ந்த வாகனத்தில் சாதாரண பெண் காவலரை அழைத்துச் செல்ல இவ்வளவு விலை உயர்ந்த கார் வந்தது எப்படி என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவியை அடித்துத் துன்புறுத்தியதற்காகவே அந்தப் பெண் காவலருக்கு இத்தகைய சொகுசுப் பரிசுகளும் சிறப்பு கவனிப்புகளும் வழங்கப்பட்டுள்ளதா என்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
“அப்படியென்றால், ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கி அடக்கு முறையை ஏவுபவர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏதேனும் சிறப்புப் பரிசுகளை அறிவித்துள்ளாரா?” என்று சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். மாணவர்களின் ஜனநாயக உரிமைக் குரலை ஒடுக்க முயலும் இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
