தமிழ் மொழியின் செழுமையும், சிறப்பும், மேன்மை யின் அடங்கலும் ஏனைய அனைத்துப் பிற மொழிகளின் காலத்தாலும் முற்பட்ட ஒன்றாகும். இக் கருத்து பிற மொழி அறிஞர்கள், ஆய்வாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டதுமாகும்.
தமிழ்மொழியோடு இணைந்த தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியும் பெருமைமிக்கது. 3,200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழர்களின் எழுத்து முறையுள்ள பாண்டம் ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. தமிழ் பிராமி எழுத்து வகைக்கு முன்னோடியானது இவ்வெழுத்து முறை என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் பிராமி எழுத்து என்பது என்ன?
தமிழ் பிராமி எழுத்து முறை என்பது என்ன? ‘தமிழி’ என்று அழைக்கப்படுகின்றது. இது, தமிழ் மொழியை எழுதுவதற்கென்று பயன்படுத்தப்பட்ட மிகப் பழைமையான வரிவடிவம் கொண்ட எழுத்து வடிவமாகும். தற்காலத் தமிழ் எழுத்துகளின் தாய், மூல வடிவம் எனலாம். இதன் தோற்றக் காலம் 2,500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனவும், அதற்கும் 3 நூற்றாண்டுகளுக்கு முன்பும் கூட எழுத்து வடிவங்கள் இருந்தன எனவும் ஆய்வு முடிவுகளில் தெரிய வருகின்றது. அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது இவற்றுக்கும் முற்பட்ட எழுத்து முறையாகும்.
சேலம் அருகே உள்ள மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியான தெலங்கானூர் தொன்மைக் குடிகள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாடு தொல்லியல் துறைக் குழுவினர் இங்கு அகழ்வாராய்ச்சி செய்தனர். இதில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாது, அனைவரது கவனத்தையும் கொள்ளத்தக்கப் கலைப் பொருள்கள் பலவும் கிடைத்தன.
1.9 மீட்டர் நீளத்தில் ஈட்டி
“கத்திகள், இரும்பு ஆணிகள், வாள்கள், கோடாரிகள், அம்பு முனைகள், பாக்கிகள் (Dagger) ஆகியன கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதில் கிடைத்துள்ள மற்றொரு பொருளான எஃகு வாள் கி.மு.1,200ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனக் காலக்கணிப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உறுதியானது. இது உலகின் மிகப் பழைமையானவற்றில் ஒன்றாகும். 1.9 மீட்டர் நீளமுள்ள பண்டையக் காலத்திய இரும்பு ஈட்டி அழகும், அமைப்பும் ஒருங்கே அமைய கிடைத்துள்ளது சிறப்பானதாகும்” என்று அகழ்வாராய்ச்சி இயக்குநர் எஸ்.பரந்தாமன் கூறுகின்றார்.
அகழ்வாராய்ச்சியாளர்கள் இரண்டு நபர்களின் முழுமையான எலும்புக் கூடுகளையும் இங்கு ஆய்வில் ஈடுபட்டபோது மீட்டெடுத்துள்ளனர். சிதைவற்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவை இரும்புக் காலத்திற்குரியவை என்று கூறுகின்றனர்.
இரும்புக் காலம்
மனிதர்கள் தங்களின் பயன்பாட்டுக் கருவிகள், ஆயுதங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுக் கருவிகள் ஆகியனவற்றைச் செய்வதற்கு செம்பு, வெண்கல உலோகங்களுக்குப் பதிலாக இரும்பு உலோகத்தை முதன் முதலாகப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தை இரும்புக் காலம் என்கின்றனர். தமிழ்நாட்டின் இரும்புக் காலம் கி.மு.2,000 என்ற கூறப்பட்டு வந்த நிலையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் காலம் தமிழ்நாட்டைப் பொறுத்துத் தொடங்கி விட்டதாகவும் ஆய்வின் வகையில் கூறப்படுவது தற்போது பெருகியுள்ளது. இதற்குரிய ஆய்வுத் தரவுகளையும் சான்றாகத் தருவதும் குறிப்பிடத்தக்கது.
இரும்புக் காலம் (Iron Age), இரட்டை இரும்புக் காலம் (Double Iron Age) எனப்படுபவை மனித நாகரிகத்தின் வளர்ச்சி, அதன் தொன்மைக் காலத்தின் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்ட காலப் பிரிவுகள் ஆகும்.
உடல் அடக்கக் குழிகளின் வகை
“குழிப் புதைப்பிடம் (Pit burial), கற்படுகைப் புதைப்பிடம் (Cist), ஈமத்தாழி (Urn) மற்றும் சுடுமண் கலசப் புதைப்பிடம் (Sarcophagus) என நான்கு வகையான உடல் அடக்க முறைகளை ஒரே இடத்தில் நாங்கள் கண்டறிந்தோம். இவை அச்சமூகத்தின் வளர்ச்சியின் கலப்புத் தன்மையின் வேறுபாடுகளையும், வளர்ச்சியையும் பிரதிபலிப்பனவாக உள்ளன. இந்த இடம் ஆரம்ப இரும்புக் காலத்தில் இருந்து (இரட்டை இரும்புக் காலம்) பிந்தைய இரும்புக் காலம் வரை பல நிலைகளாக வளர்ச்சியடைந்துள்ளதை இவை காட்டுகின்றன” என்கிறார் அகழ்வாராய்ச்சி இயக்குநர்
எஸ்.பரந்தாமன்.
கருப்புச் சிவப்புக் கிண்ணம்
இவற்றுக்கெல்லாம் மேலாக தெலங்கானூரில் மண்ணைத் தோண்டி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது, கிடைத்துள்ள கருப்புச் சிவப்புக் கிண்ணம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. 3,200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்துகள் இந்தக் கிண்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளதும் சிறப்பானதாகும்.
தமிழ்நாடு தொல்லியல் துறைக் குழுவினர் தெலங்கானூரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிண்ணத்தில் இடமிருந்து வலமாக அமையப்பட்ட 5 குறியீடுகள் (Graffiti Signs) காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இக் குறியீடுகள் போன்று பதிவுள்ள பொருள்கள் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இக்குறியீடுகள் 5 எண்ணிக்கையில் நீண்ட வரிசையைப் பெற்றுள்ளன என்பது தனித்துவம் மிக்கதாகும். மாறுபட்ட வரிசை முறையில் இதே அய்ந்து குறியீடுகளுடன் மற்றொரு கிண்ணமும் இங்கு கிடைத்தது. இக் குறியீடுகள் தமிழ்மொழி எழுத்துகளின் ஆரம்ப வடிவமாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிந்து வெளிக் காலத்தோடு சமமானவை
அண்மையில் கண்டறியப்பட்ட இக்குறியீடுகள் சிந்துவெளி நாகரிகத்தின் இறுதிக் கட்டமான கி.மு.1,600 முதல் கி.மு.1,200 வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாகும். சேலம் அருகிலுள்ள தெலங்கானூர், மாங்காட்டூர் ஆகிய இரட்டை இரும்புக் கால வாழ்விடங்களின் காலமும் இதற்குச் சமமானதாகும். இந்த இரட்டை இரும்புக் கால அளவை இதற்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளை உள்ளடக்கியதெனவும் கருதலாம்.
அண்மைக் காலத்திய எழுத்து வடிவமைப்பு / வடிவியல் ஆய்வுகள் கூறுவதென்ன? தமிழ்நாட்டின் கொடுமணல், கீழடி, துலுக்கப்பட்டி, கீழ்நமண்டி ஆகிய இடங்களிலும், சிந்து வெளிப் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் 90 விழுக்காடு அளவிற்கு ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.
தமிழ் பிராமி கல்வெட்டுகளிலும், மண்பாண்ட ஓடுகளிலும் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் முனைகளில் சில குறியீடுகளைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை தகவல் தொடர்பின் முந்தைய பழைமை வடிவத்தைக் குறிப்பன எனலாம்.
மதுராந்தகம் வட்டம் – சானூரில் அகழாய்வு
செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகம் வட்டம் சானூரில் தொல்லியல் களத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) அகழ்வாராய்ச்சி மேற்கொண்டது. இதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஈமச் சின்னங்களும், தொல் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
18 அடி முதல் 50 அடி வரை வட்டம் உள்ள பெரிய கருங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் சூழப்பட்ட கற்குவியல்கள், கல்திட்டைகள் என இரண்டு வகையான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டறியப்பட்டன. கற்படுகைகள், புதை குழிகளுக்குள் மனிதர்களின் எலும்பு எச்சங்களுடன் கூடிய ஈமப் பேழைகள் (சுடு மண்ணால் ஆன சவப் பெட்டிகள்) கண்டெடுக்கப்பட்டன.
இரும்பு உலோகப் பயன்பாடு
இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பு உலோகத்தை எல்லா வகையிலும் பயன்படுத்தியுள்ளனர். இதற்குச் சான்றாக ஈட்டிகள், கத்திகள், அம்புகள், கோடாரிகள் போன்ற இரும்பாலான ஆயுதங்களும், கருவிகளும் கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு நிறங்களில் மட்பாண்டங்கள் போன் பல்வேறு வகையான பானை ஓடுகளும், பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டன. சுடுமண் மற்றும் சங்கு வளையல்களின் துண்டுகளும், கண்ணாடி மணிகள், அரிய கல் மணிகள் (Beads) கண்டெடுக்கப்பட்டன.
சானூரில் வாழ்ந்த பழங்கால மக்கள் விவசாயம் செய்தவர்களாகவும், குதிரைகளைப் பயன்படுத்தியவர் களாகவும் இருந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சானூரில் 1951, 1952ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்யப் பட்டதென்றாலும், ஒவ்வொன்றையும் பற்றித் துல்லியமாக மேல் ஆராய்ச்சி செய்து, காலத்தைத் தக்க முறைகளைக் கொண்டு உறுதி செய்வதற்கு ஆண்டுகள் பல ஆயின. உறுதி செய்யப்பட்ட தகவல்கள் 1960ஆம் ஆண்டில்தான் வெளியாக்கப்பட்டன.
16,000 மட்பாண்ட ஓடுகள்
“தெலங்கானூரில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தது போன்று அய்ந்து குறியீடுகள் அல்லது மூன்று குறியீடுகள் வெவ்வேறு வரிசையில் பொறிக்கப்பட்டிருந்த பொருளை ஆய்வாளர்கள் சானூரிலும் கண்டுபிடித்தனர். இந்தக் குறியீடுகளுக்கான உட்பொருளை (Decipher) நாம் கண்டறிய வேண்டும்” என்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகரும், தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட சிந்து வெளிக் குறியீடுகள் பற்றிய ஆய்வின் இணை ஆசிரியருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்துள்ள அகழாய்வினர் இதுவரை சுமார் 16,000 குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளைக் கண்டெடுத்துள்ளனர் என்பது வியப்புக்குரியதல்லவா?
