ஜாதி ஆதிக்கவாதிகளின் வன்கொடுமைகளும், ஒடுக்கப்பட்டோரின் சகிப்புத்தன்மைகளும் – நான் கண்ட சில நிகழ்வுகள்!

பேராசிரியர் (முனைவர்) எஸ்.லாசரஸ்
நேசமணி நகர், நாகர்கோவில்.

நான் 1964ஆம் ஆண்டு, தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில், பி.எஸ்சி. உயிரியல் துறையில் படிப்பு நிறைவு செய்த நாளில், எங்கள் துறைத் தலைவர் எங்களை நாகர்கோவிலில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக எங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டு, வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் சொன்னதற்கு இணங்க, நாங்கள் எல்லோரும் பெயர்களைப் பதிவு செய்துவிட்டுச் சென்றோம்.

இது நடந்து முடிந்த, எட்டாவது நாளில், எனக்கு இரண்டு துறைகளிலிருந்து வேலைக்கான அழைப்புக் கடிதம் வந்தது. ஒன்று, வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள துகீமா மாண்டூர் என்னும் இந்த ஊரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் வேலை, இன்னொன்று, வடஇந்தியாவில், புனே என்னும் ஊரில், பாதுகாப்பு துறையில் எழுத்தாளர் வேலை. ஆசிரியர் வேலையில் எனக்கு விருப்பம் இருந்ததால், அதைத் தேர்வு செய்து, உடனே அங்கு சென்று வேலையில் சேர்ந்தேன்.  அங்கு சென்றபோதுதான் அந்தப் பள்ளியில் உயிரியல் துறையில் முதல் ஆசிரியர் நான்தான் என்பது எனக்குத் தெரிந்தது. அதனால் பள்ளித் தலைமை ஆசிரியரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் என்னை நன்கு பாராட்டி, நான் தங்குவதற்குப் பள்ளியில் ஓர் அறையையும் ஒதுக்கி, எனக்கு உதவுவதற்காக ஓர் உதவியாளரையும் நியமித்துத் தந்தார்கள்.

என்றாலும் நான் அவர்களிடம் எனக்கு ஒரு தனி வீடு எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் இங்கு தங்குவதற்கு தனி வீடு இல்லை என்று கூறினார்கள். சில நாட்கள் கழித்து, பள்ளியின் அலுவலக ஊழியர் ஒருவர் என் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழின் நகல் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது என்னுடைய ஜாதிப் பெயர் கிறிஸ்துவ நாடார் என்பதைப் பார்த்தவுடன் ஊரில் சென்று என் ஜாதிப் பெயரை காலியாக இருந்த வீட்டு உடைமையாளர் சிலரிடம் சொன்னபோது எல்லாரும் சம்மதித்து எனக்கு விருப்பமான வீட்டைத் தேர்வு செய்யச் சொன்னார்கள்.

நான் அங்கு சென்றபோது அவர்கள் என்னிடம் நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதால், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்து வீடு தர முடியாது என்று கூறினார். இப்போழுதுதான் தெரிந்தது, நீங்கள் நாடார் இனத்தைச் சேர்ந்தவர் என்று. எனவே நீங்கள் உங்களுக்குத் தேவையான வீடொன்று எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு வாடகை தர வேண்டாம், மின் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமென்று கூறினார்கள். உடனே நான் அங்கு சென்று பார்த்து ஒரு வீட்டைத் தேர்வு செய்து அங்கு சென்று தங்கத் தொடங்கினேன். அங்கு சென்ற பின்புதான் அங்குள்ள உண்மை நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு ஓர் இந்துக் கோயில் இருந்தது. கோயிலின் மேற்குப் பக்கம் காஞ்சிபுரம் செல்லும் ஒரு பெரிய சாலையும், கிழக்கு பக்கம் பார்ப்பனர்கள் தங்கும் இரண்டு தெருக்களும் இருந்தன.

ஒன்றிற்கு “ஒற்றைத்தெரு” என்றும், இன்னொன்றிற்கு “இரட்டைத்தெரு” என்றும் பெயர். ஒற்றைத்தெருவில் ஒரு பக்கம் வீடுகளும், இரட்டைத்தெருவில் இரு பக்கமும் வீடுகளும் இருந்தன. இந்த இரண்டு தெருக்களிலும் பார்ப்பனர்கள் தங்கியிருந்தனர். கோயிலின் மேற்குப் பக்கமுள்ள சாலையோரத்தில் வன்னியர் இன மக்களும், தெருவின் கிழக்குப் பக்கத்தில் ஒரு வயல் பண்ணையையும், அதைச் சுற்றியுள்ள வயல்களில் வேலை செய்யும் பறையர் எனப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் காலையில் சென்று பேருந்துகளில் ஏற வேண்டும் என்றால் இந்தத் தெருக்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்போது அவர்கள் காலணிகளைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு செல்வார்கள். தெருவைத் தாண்டிய பிறகு மீண்டும் அவைகளைக் காலில் அணிந்துகொள்ளவார்கள். இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடந்து செல்லும்போது, வீட்டுத் திண்ணையில் இருக்கும் பெண்கள் ஓடி வீட்டுக்குள் சென்று விடுவார்கள். அவர்கள் சென்ற பிறகு மீண்டும் திண்ணைக்கு வந்து நண்பர்களுடன் உரையாடுவார்கள். இதை நம் மாவட்டத்திலும், நாயர் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளிலும் நான் கண்டுள்ளேன்.

இப்படிப்பட்ட ஜாதிய வன்கொடுமைகளைப் போக்கத்தான் பெரியார் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இதைச் சகித்துக் கொள்ளாத பார்ப்பனர்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவிற்குக் செல்லத் தொடங்கினார்கள். இதனால்தான் அங்கு பல பார்ப்பனர்களின் வீடுகள் காலியாக இருந்தன. அதேபோல், அங்கிருந்து சென்று அமெரிக்காவில் வாழத் தொடங்கிய ஒரு பார்ப்பனர் என்னிடம் கூறியதோடு, அவர் வீட்டில் என்னை வாழவும் சொன்னார். இது 1964 முதல் 1966 வரையிலான காலக்கட்டத்தில் நடந்தது. இதன் பின், 1967ஆம் ஆண்டு சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் எம்.எஸ்சி. முதுநிலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அங்கு ஒரு கூட்டத்தில் பேசினார். அங்கிருந்த மக்கள் கைதட்டி அவரைப் பாராட்டினார்கள். சிதம்பரம் பார்ப்பனர்கள் அதிகமாக வாழ்ந்த ஓர் இடமாக இருந்தது.

கடந்த காலங்களில் நம் நாட்டில் நடந்து வந்த பார்ப்பனர் ஆதிக்கம் இப்போதும் டில்லி போன்ற வட மாநிலங்களிலும் நடந்துவருகின்றது. ஒன்றிய அரசு அலுவலகங்களில் பெரும்பாலான இடங்களில் பார்ப்பனர்களே வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். திறமை அடிப்படையில் வேறு ஜாதியினர் அமர்த்தப்பட்டாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்ப தில்லை. என்னுடன் படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் அங்கு ஒரு உயர்பதவியில் இருந்தார்.

ஒருநாள் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, வரவேற்பாளரிடம் “டேவிட் சந்திரபால்” என்ற அவரது பெயரைச் சொல்லி அனுமதி கேட்டேன். அதற்கு அவர், “அப்படி ஒருவர் இங்கே இல்லை” என்றார். உடனே நான் என் நண்பரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தைக் கூறினேன். அதற்கு அவர், “என்னுடைய பெயரை டேவிட் என்று கூற வேண்டாம்; ஜி.டி. சந்திரபால் என்று கூறுங்கள்” என்றார். உடனே நான் வரவேற்பாளரிடம் “ஜி.டி. சந்திரபால்” என்றேன். அதைக் கேட்ட அவர், “அவர் ஒரு கிறிஸ்தவரா? இது எனக்கு இதுவரை தெரியாது” என்று கூறி எனக்கு அனுமதி அளித்தார்.

நான் உள்ளே சென்றதும் என் நண்பர், “இங்குள்ளவர்கள் கிறிஸ்தவர்களை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் என்று நினைத்து முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதனால்தான் என் பெயரில் உள்ள ‘டேவிட்’ என்பதை எப்போதும் மறைத்தே வைத்திருப்பேன்” என்றார்.

இது போன்ற அநீதிகள் நம் மாவட்டத்திலும் நடந்ததை நாம் அறிவோம். குறிப்பாக பெண்கள் மேலாடை அணியக்கூடாது, நல்ல விளைநிலங்கள் மேல் ஜாதியினருக்குத்தான் சொந்தம் என்ற செயல்பாடுகள் மன்னர் ஆட்சி காலத்தில் நடந்ததே நாம் அறிவோம். இப்போது இவையெல்லாம் மாறுவதற்கு காரணம் கிறிஸ்தவ மதப் போதகர்களின் வருகையும், நாம் பெற்ற நாட்டுச் சுதந்திரமும், கல்வி வளர்ச்சியுமும்தான் முக்கிய காரணங்களாகும்.

கருஞ்சட்டைப் படை அஞ்சாது!

தந்தை பெரியார் காலத்தில் இருந்து எத்தனையோ தடைகளைக் கண்டுள்ளது திராவிடர் கழகம். அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து வெற்றி வாகை சூடிய இயக்கம் திராவிடர் கழகம். கருஞ்சட்டைப் படை இதற்கெல்லாம் அஞ்சாது.

இந்தக் கூட்டத்தை கண்டு அஞ்சுமா பெரியாரின் கருஞ்சிறுத்தை பட்டாளம். அதிர்ச்சி, அச்சம், தோல்வி இவை எல்லாம் திராவிடர் கழகத்தின் அகராதியில் இல்லை. இல்லவே இல்லை.

– இரா.புகழேந்தி

பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், சிவகங்கை.

 

நீதிக்கான போர்க்களத்தில் என்றும் நாங்களே வெல்வோம்!

சக்கரங்கள் சுழன்றுவிடின் சதிவிளங்கும் என்றோ

ஒப்பற்ற பேரணிக்கு உத்தரவு மறுத்தீரோ?

அநீதி ‘நீட்’டை எதிர்த்து நின்றால்

அரசதிகாரம் அஞ்சி நடுங்குவதேனோ?

ஏழைவயிற்றெரிச்சலை ஏற்க மறுக்கும் சட்டம்

நாளை விடியலை நசுக்கவா இந்தத் திட்டம்?

வீதிக்கு வரத்துடித்த இளையோர் கூட்டம்

நீதிக்குக் குரல்கொடுத்தால் உன் நெஞ்சில் ஏன் நடுக்கம்?

 

இருசக்கர ஊர்திகளின் வேகத்தைத் தடுக்கலாம்

இதயத்தில் எரியும் நெருப்பை அணைக்கத்தான்
இயலுமோ?

அனுமதி மறுத்ததால் அடங்கிடுமோ எங்கள் குரல்

ஆதிக்கத் தேர்வை விரட்டும் வரை ஓயுமோ
எங்கள் புரட்சி!

 

தடைபோடும் கைகளே பின்னோக்கி கவனித்துப் பார்

உடைபடும் ஒருநாளில் உங்கள் அதிகாரச் சுவர்

போராடும் உரிமையைப் பறிக்கும் அரசே கேள்

நீதிக்கான போர்க்களத்தில் என்றும் நாங்களே வெல்வோம்!

– தேன்மொழி, குடியேற்றம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *