மயிலாடுதுறை, அக். 16– அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மகிழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் (குடும்ப விருந்து) நிகழ்ச்சி 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை கடவாசல் அறிவகம் அரங்கத்தில் எழுச்சியு டன் நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு வருகைப் புரிந்த அனைவரிடமும் முகவரி தொடர் எண் பதிவு செய்து படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.
காலை 10 மணிக்கு தொடங்கிய பெரியார் கொள்கை குடும்பங்களின் குடும்ப விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்விற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன், தலைமை ஏற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, உரையாற்றினார். அதாவது நம் குடும்பத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர், அவர்கள் அடிக்கடி ஒன்றை சொல்வார். இரத்த உறவை விட கொள்கை உறவு கெட்டியானது. அதுபோன்றுதான் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தோல்வி என்பதே கிடையாது வெற்றி தான்.
ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கத் தூண்டும் பகுத்தறிவுடன் பயணிக்கலாம்.
அதிசயமான அற்புதமான இயக்கத்தில் இருக்கின்றோம் – பயணிக்கின்றோம்.
இந்த அரங்கத்தில் பெரியாரைப் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்றால் 6 பேர் தான் கையை உயர்த்தி உள்ளார்கள்.

ஆனால் அரங்கம் நிரம்பி உள்ள இளம் தலைமுறையினர் குறிப்பாக பெரியாரைப் பார்க்காத தலைமுறையினர் அவர் கொள்கையையும். சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். எவ்வளவு அதிசயம்! பார்க்காத ஒருவரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக ஒட்டுமொத்த பெரியாராக நம் தலைவர், தமிழர் தலைவரை பார்க்கின்றோம். என்று பேசி குடும்ப விழா நிகழ்வை தொடங்கி வைத்து நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
நிகழ்விற்கு வருகை புரிந்த அனைத்து;j தோழர்களும். அவரவர் குடும்பத்துடன். மேடைக்கு வருகை புரிந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
பெரியாரை ஏன் பிடிக்கும்?
பெரியார் பிஞ்சுகள்,
மாணவர்கள், பேச்சு-கவிதை
தொடர்ந்து செ.தமிழிசை வெண்பா, செ.செந்தமிழ், நி.ரித்தீஸ்காசிறீ, ஜெ.ஜெசிகா, வி.சிவசிறீ, க.நித்யசிறீஹே, பா.ரே.கேமவர்ஷன், இ.தமிழினி, இ.தமிழவன், கோ.ஆ.அபூர்வன், கோ.ஆ.இன்பா, கார்முகிலன் ஆகியோர் கவிதைகள், திருக்குறள் ஒப்பிவித்தல், பெரியார் பாடல், பெரியாரை ஏன் பிடிக்கும்? மனிதனை மனிதனாக நினைக்க வேண்டும் – மதிக்க வேண்டும். மேல் கீழ் கிடையாது ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு ஆகியவற்றோடு சாஸ்திர சம்பிரதாயம் போன்ற ஆரிய கட்டுக்கதைகளை எதிர்த்து உடைத்தவர்தான் நம் ஈரோடு கிழவன் தந்தை பெரியார். என்று பேசினர்.

பெரியாரை நம்படா…. நம்பு…. அவர் பெயரைக் கேட்டாலே வந்திடும் நெஞ்சினில் தெம்பு…… என்ற பாடல் மற்றும் கருப்பு நிறத்தில் தந்தை பெரியார் என்ற பாடலுக்கும் நடனம் ஆடி அனைவரையும் ரசிக்க வைத்தனர்.
மகளிர்
மனம் விட்டுப் பேசுவோம் வாழ்வியல் உரை:
ச.தமிழ்மணி, கோ.ஆனந்தி, இ.தமிழரசி, ஞா.வ. விஜயலட்சுமி, சீ.கலைமணி, செ.கலைச் செல்வி, அ.அமுதா, பா.ரேவதி, புவனேஸ்வரி, அனைவரும் சிறப்பாக மனம் விட்டுப் பேசினர்
குறிப்பாக கொக்கூர் இ.தமிழரசி, பேசும்போது எனது இணையர் கொக்கூர் இளமாறன் நான் அங்கன்வாடி ஆசிரியர் என் இணையரும் டிகிரி முடித்துள்ளார். எங்களுக்கு திருமணம் செய்து வைத்தது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான். திருமணம் ஆகி 13-ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்று பலரும் பல கோணத்தில் ஏளனமாக பேசுவார்கள்
ஆனால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் தந்தை பெரியார் கொள்கை வழியில் பயணித்தோம். 13-ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியடைந்தோம்
என் மகள் தமிழினி, இப்போது 9-ஆம் வகுப்பு படிக்கிறார். நன்றாக படிக்க வைப்போம். மகள் திருமணத்தையும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர், அவர்கள் தான் நடத்தி வைக்க வேண்டும். அய்யா அவர்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து கோ.ஆனந்தி, மனம் விட்டு பேசுவோம். என்று பேசும் போது நான் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்றுப் பயணிக்கின்றேன்.
பெரியார் கொள்கையை பின்பற்றி செயல்படுத்தும் நேரத்தில் எனது கணவர் வீட்டில் ஏராளமான சின்ன.. சின்ன…. பிரச்சினைகளை சந்தித்தேன்.
என் இணையர் கொள்கையை பின்பற்றுவார். கொள்கையுடன் ஒத்து வருவார் ஆனால் குடும்பத்தில் மாமியார்-மாமனார் பக்தியில் அதிக நாட்டமுடையவர்கள். ஆகையால் குடும்பத்தில் வருத்தம். சின்ன சின்ன சண்டைகள் வரும்.
பிறகு…. யோசித்தேன்…. தனிக் குடும்பம் போனால்தான் தந்தை பெரியார் கொள்கையில் உறுதியாக நூறு சதவீதம் பயணிக்கலாம் என்று முடிவுடன் தனிக் குடும்பம் வந்தேன். இன்று மிக சிறப்பாக வாழ்கின்றோம், பல கூட்டங்களுக்கு என் இணையரையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறேன்.
பெரியார் கொள்கை வழியில் நடந்தால் ஒரு பொழுதும் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை…
லாபம் தான். வெற்றிதான்.
வாழ்க பெரியார்…
வாழ்க ஆசிரியர், அய்யா….
என்று பேசினார்.
மாவட்ட செயலாளர் கொக்கூர் இளமாறன், மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், ஆகியோர் முன்னிலையில் உரையாற்றினர்.
குடும்ப விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காலையில் தேநீர் பிஸ்கட், மதியம் அறுசுவை உணவு, மாலையில் தேநீர் வழங்கப்பட்டது.
பிற்பகல் நிகழ்வுகள்
பாடல்:
மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் சாமிதுரை. அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை….. என்ற பாடலை பாடினார்.
மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், பராசக்தி திரைப்படத்தின் நீதிமன்ற காட்சிகளை பேசினார்.
நீதிமன்றம்…. விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது… முழுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது…. என்ற வசனங்களை பேசி அனைவரையுமே வியக்கின்ற அளவிற்கு அற்புதமாக பேசினார் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.
விளையாட்டுப் போட்டி:
மாணவர்களும், மகளிர் அணியினரும், கழகத் தோழர்களும், வெள்ளை தேநீர் கோப்பையில் முழுவதும் அரிசியும், 5- வெள்ளை பட்டன் (boutton) கலந்துள்ள நிலையில் பட்டனை மட்டும் கண்டுபிடித்து எடுக்க வேண்டும், மற்றும் பலூன் ஊதி உடைத்தல் என்று வயது பாராமல் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநில மாணவர் கழக துணைச் செயலாளர், பொறியாளர் தே.நர்மதா, சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்து ஊக்க உரையாற்றினார். அவரது உரையில், பெரியார் பிறந்த நாளை பெருமகிழ்ச்சியாக கொள்கை விழாவாக உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பெரியார் பிறந்தநாளை முன்னெடுக்கின்றோம்.
அதன் தொடர்ச்சியாக கடவாசலில் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை நிகழ்வில் உங்கள் முன் பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடை கின்றேன். இந்த அரங்கத்தில் உள்ள அனைவருமே படித்தவர் – பட்டம் பெற்றவர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களும் இந்நிகழ்வில் கலந்துள்ளீர்கள். நம் பிள்ளைகள் அனைவரும் தொடக்கத்தில் பெரியாரை ஏன் பிடிக்கும் என்று வெகு சிறப்பாக பேசினார்கள். ஆனால் அப்படியே 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பாருங்கள் – யோசித்து பாருங்கள்! நாம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிமார்கள் ஏன் படிக்கவில்லை, இன்று இவ்வளவு பேர் எப்படிப் படித்தோம் – காரணம் தந்தை பெரியார்.
ஒருவேளை பெரியார் என்ற மனிதர் பிறக்காவிட்டால் நம் நிலைமை எப்படி இருந்திருக்கும்? சற்று யோசியுங்கள்.
இன்றும் நம் குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 93 வயதிலும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் எழுதுகிறார். தந்தை பெரியார் பணிமுடிப்போம்! தமிழர் தலைவர் காட்டும் திசையில் பயணிப்போம்!
பகுத்தறிவு வளர்க! திராவிடர் கழகம் வெல்க! இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பரிசளிப்பு நிகழ்வு
காலை முதல் மாலை வரை நடைபெற்ற குடும்ப விழா நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெரியார் பிஞ்சுகள், மாணவ செல்வங்களுக்கும், கழக புத்தகங்கள், வாட்டர் பாட்டில், மற்றும் தந்தை பெரியார், அன்னை மணியம்மை, ஆசிரியர், படங்கள் பதித்த மெடல்கள். சிறப்பு அழைப்பாளர்கள் – மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தே.நர்மதா, ஆகியோர் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். இருவருக்கும் மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.
அனைவரும் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக பெரியார் பிஞ்சுகள். மாணவர்கள் அனைவரும் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், எழுதி இசையமைத்த பெரியார் உலக மயம்…. உலகம் பெரியார் மயம்…. கொண்டாடு.. கொண்டாடு… குடும்பத்துடன் கொண்டாடு……. என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடினார்கள்.
நிகழ்வில். மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாண்டுரெங்கன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் அரங்க.புத்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மாவட்ட விவசாயச் செயலாளர் கு.இளஞ்செழியன், திமுக பொறுப்பாளர் ஆசிரியர் கமலநாதன், செம்மங்குடி கோபி, குத்தாலம் ஒன்றிய இளைஞரணி தலைவர் வினோத், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சா.கார்த்திகேயன், சபரிவாசன், அன்புமணி, பாலசுந்தரம், பாலபாரதி, பாலா, ரேவதி, அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்வு முடிந்தவுடன் ச.தமிழ்மணி, அவர்கள் அரங்கத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இறுதியாக நன்றி கூறினார்.
