உலகச் செய்திகள்

3 Min Read
- Advertisement -

24 நாட்டு விமானிகள், பணிப்பெண்கள்
இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழையத் தடை

ஜெருசலேம் அக். 16- பன்னாட்டு வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அரங்கேறும் கடத்தல் நிகழ்வுகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தை இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது மோதச் செய்ய ஓமன் நாட்டு துணை விமானி முயன்றார்.

அப்போது இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி அந்த சதியை முறியடித்தார். இந்த வான்வழிப் போராட்டத்தில் படுகாயமடைந்த இந்திய விமானி ‘ஹீரோ’ என உலக தலைவர்களால் பாராட்டப்பட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இஸ்ரேல் அரசு தற்போது புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத பாகிஸ்தான், ஈரான், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைய அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பன்னாட்டு விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மாற்றிய மைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்தில்
33 குழந்தைகள் உயிரிழப்பு!

இசுலாமாபாத். அக். 16- பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாபூரில் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியான திர் காலனி உள்ளது. அங்கு பள்ளி ஒன்றின் மேற்கூரை நேற்று (15.10.2026) திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள், ஒரு பெண் ஆசிரியர் என 34 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளின் நிலையை அறிய பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் குவிந்தனர். பள்ளியின் உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளது. பல குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அவசர உதவிப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்தார். பள்ளி கட்டடம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காஸாவுக்குள் வணிகப் பொருள்கள்
நுழையத் தடை – இஸ்ரேல் அறிவிப்பு

ஜெருசேலம், அக். 16- போரினால் உருக்குலைந்துள்ள காஸா முனைக்குள் வணிகப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எல்லைச் சாவடிகள் வழியாக இஸ்ரேல் அனுமதிக்கும் பொருள்களை மட்டுமே காஸா மக்கள் முழுமையாகச் சார்ந்துள்ள நிலையில், குளிர்காலமும் நெருங்கி வரும் சூழலில் இந்தத் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக லாரிகள் மீது ஹமாஸ் அமைப்பினர் வரி விதித்து அச்சுறுத்துவதால், காஸா வர்த்தகர்களே சரக்குப் போக்குவரத்தை நிறுத்துவதாகத் தங்களுக்குத் தெரிவித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

எனினும், இஸ்ரேலின் இக்கூற்றை காஸா லாரி உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளனர். வர்த்தகர்கள் போக்குவரத்தை நிறுத்தவில்லை என்றும், இஸ்ரேலே இந்தத் தடையை நேரடியாக விதித்துவிட்டு பழியை வர்த்தகர்கள் மீது போடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இதனிடையே, காஸா பொருளாதார அமைச்சகம் ஒவ்வொரு லாரிக்கும் கோரும் 10,000 ஷெக்கல் தொகையை காரணம் காட்டியே இஸ்ரேல் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளதாக உள்ளூர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 லட்சம் மக்கள் வாழும் காஸாவுக்கு நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 600 லாரிகள் அளவுக்குப் பொருள்கள் தேவைப்படும் சூழலில், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அங்கு உணவுப் பஞ்சத்தையும், அத்தியாவசியப் பொருள் விலையையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *