அறிவையும், பொருளையும் வீணடிக்கும் பண்டிகைகள்!

4 Min Read
- Advertisement -

அறிவையும், பணத்தையும், பொருளையும் வீணடிக்கும் மூடப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகளும், திருவிழாக்களும் இல்லையென்றால், இந்து மதம் மட்டுமல்ல, எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது என்பதால் தான், மீண்டும் மீண்டும் இவை நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை அறிவை வீணடிப்பதுடன் மட்டும் நில்லாமல், பொது ஒழுக்கத்தையும் சிதைக்கக் கூடியவையாக இருக்கின்றன என்பதே உண்மை நடப்பாகும்.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி, திருவிழா என்றால், அவரவருக்கு நன்கொடைச் சீட்டைத் தூக்கிக் கொண்டு, கடைகளில், வணிக நிறுவனங்களில், வீடுகளில் கூட நுழைந்து பணம் பறிக்கும் கயமைத் தனம் அதிகரித்துவருகிறது. இவற்றைத் தடுக்க வேண்டிய அரசு அலுவலகங்களோ, ‘துரைத்தனத்துடன்’, தாங்களும் ஆயுதபூஜை வசூல், தீபாவளி வசூலில் துணிந்து இறங்குகின்றனர். பல லட்சக் கணக்கான ரூபாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் லஞ்சப் பணமாக இந்தப் பெயரில் கை மாறுகிறது. இவற்றையும் தடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. கடந்த காலத்திலும், ஆயுத பூஜை, தீபாவளி வசூலில் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன.

கடந்த திராவிட மாடல் ஆட்சியில், ‘ஆயுத பூஜையில் கடவுள் படங்களைப் பயன்படுத்தக் கூடாது’ என்று அறிவிப்பு வந்தது. அதுவே போதுமானது அல்ல என்பதே நமது கருத்து. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எவர் ஒருவரும் தமது வீட்டில், சொந்த நிறுவனத்தில் எந்த மதத்தின் விழாவையும் கொண்டாடுவதில் யாருக்கும் தடையில்லை; அது அவரவர் உரிமை. ஆனால், அரசு அலுவலகங்கள் என்பவை அனைவருக்கும் பொதுவானவை. எல்லா மதத்தவரும், கடவுள் – மத நம்பிக்கையில்லாதோரும் புழங்கும் இடம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதைத்தான், அதன் அடிக்கட்டுமானமான முகப்புரையிலேயே தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் அமைபவை தான் எந்த அரசானாலும்!

ஆனால், தமிழ்நாடு த.வெ.க. அரசு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை, துறைச் செயலாளர்கள் மூலம் அனுப்பப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

அரசு அலுவலகங்களில் இப்படி  வசூல் வேட்டை நடப்பதை ஒப்புக் கொண்டு தான், அப்படி நடக்கக் கூடாது என்று கட்டாயமாக வலியுறுத்துகிறது. அரசு அலுவலகங்களில் நடக்கும் இத்தகைய கொண்டாட்டங்களுக்காக நடத்தப்படும் வசூல்களில், படாடோபமாக தோரணம், பூஜை எல்லாம் செய்துவிட்டு, அதை விட மிஞ்சும் பெரும் தொகையை அவர்களே பிரித்துக் கொள்ளும் போக்கு பெருத்துள்ளது.  மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், லஞ்சப் பணம் கைமாறுவதற்கான மிகப் பெரிய வழியே இது! தங்கள் அரசு, லஞ்சம், ஊழலுக்கு எதிரான அரசு என்று கூறிக் கொள்ளும் த.வெ.க. அரசு, இன்றே எல்லா அரசு அலுவலகங்களிலும் ‘ரெய்டு’ நடத்தினால், வசூலாகி பங்கு போடப்படும் தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும். யார், யார் கூட்டாளிகள், பங்காளிகள் என்பதும் வெளிப்பட்டுவிடும்? அப்படி லஞ்சப் பணம் கொடுத்தோருக்கு என்னென்ன விதமான வசதிகள் முறைகேடாகச் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதனூடாகக் கண்டுபிடிக்க முடியும்? செய்யுமா த.வெ.க. அரசு? வெற்றுச் சுற்றறிக்கைகளால் பலன் என்ன?

இதையொட்டி சமூக ஊடகங்களில் சில படங்கள் வெளிவந்துள்ளன. ஊடகங்களில், பத்திரிகைகளில் செய்திகளும் வெளிவந்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சி தரத் தக்க ஒரு பகுதி, மதச்சார்பின்மை குறித்த கேள்வியை எழுப்புகிறது. “அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை எளிமையாகக் கொண்டாடப்பட வேண்டும். பூசணிக்காய் தேங்காய் உடைத்து சாமிப் படங்களுக்கு பூ வைத்து அலுவலக வளாகத்தை அலங்கரித்து எளிமையாக நடத்தலாம்” என்று அரசு தெரிவித்துள்ளதாக கடந்த 13-ஆம் தேதியே வெளிவந்துள்ள அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம் என்ற செய்தி பரவலாகப் பகிரப்பட்டு, அனைவருக்கும் போய்ச் சேர்ந்தபின், பொறுமையாக இன்று காலை 11 மணியளவில்,  அப்படி ஓர் அரசாணை வெளியிடப்படவில்லை என்றும், இது தொடர்பான படங்கள் போலியானவை என்றும் தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுத்துள்ளது.

ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் வருவதால், அன்று விடுமுறை என்பதாலும், வெள்ளிக்கிழமையான இன்றே எல்லா இடங்களிலும் வசூல் கொடிகட்டிப் பறந்து, அதனுடன் மதச்சார்பின்மையும் காற்றில் பறந்திருக்கிறது.

அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் இடம்பெறக் கூடாது; கோயில்கள் கட்டப்படக் கூடாது என்பது அறிஞர் அண்ணா காலத்திலேயே (29.4.1968) அரசின் அறிவிப்பாகும். மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்களில் மதம் தொடர்பான கட்டுமானங்களைத் தடை செய்து, 1993-ஆம் ஆண்டு (13.12.1993) தலைமைச் செயலாளர் மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒன்றிய அரசே 18.8.1994 அன்று அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. 1997-இல் அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படக் கூடாது என்று தமிழ்நாடு அரசு பொதுத் துறை செயலாளர் மூலம் உத்தவிட்டது. காவல்துறையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது என்று 2005-இல் அன்றைய காவல்துறைத் தலைவர் ஆணையிட்டார். இத்தனைக்குப் பிறகும், இன்னும் அரசு அலுவலகங்களில் இக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது எப்படி? அரசாணைகள், சுற்றறிக்கைகள், தலைமைச் செயலாளரின் உத்தரவுகள் எல்லாம் கோப்புகளில் மட்டும் உறங்கவா?

இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இதில் வழுவுதற்கு முயற்சி செய்யும் எந்தவொரு அரசு நடவடிக்கையும், அரசியலமைப்புச் சட்ட விரோதமே ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *