மருத்துவத் துறையில், தொண்டறச் செம்மலாகத் திகழ்பவர்!
பெரியார் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் வீழ்ந்ததில்லை!
மருத்துவர் கவுதமன் குடும்பம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
சென்னை, அக்.16 மருத்துவத் துறையில், தொண்டறச் செம்மலாகத் திகழ்பவர்! பெரியார் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் வீழ்ந்ததில்லை! மருத்துவர் கவுதமன் குடும்பம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
டாக்டர் இரா.கவுதமன் எழுதிய
மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா!
கடந்த 8.10.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், டாக்டர் இரா.கவுதமன் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிட்டு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்நிகழ் விற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய வெங்கடேசன் அவர்களே, ஜனார்த்தனன் அவர்களே, தென்மாறன் அவர்களே, வழக்குரைஞர் மணியம்மை அவர்களே,
எழுத்து, சேவை செய்யக்கூடிய நிபுணராகவும் இருக்கக் கூடியவர் டாக்டர் கவுதமன்!
‘‘உடன்கட்டை ஏ(ற்)றுதல் –பார்ப்பனியத்தின் சதி வரலாறு’’, ‘‘திருவாங்கூர் சமஸ்தானம்: மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்’’, ‘‘ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்’’ ஆகிய மூன்று புத்தகங்கள் இன்றைய தினம் வெளியிடப்படுகின்றன. நம்முடைய பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்கு நராகிய டாக்டர் கவுதமன் அவர்கள், தலைசிறந்த பல் நிபுணர். வெறும் ‘பல்’லோடு நிற்கவில்லை. எழுத்து, சேவை செய்யக்கூடிய நிபுணராகவும் இருக்கக் கூடிய வர். இதை நகைச்சுவைக்காக மட்டும் நான் சொல்ல வில்லை, அதற்கு இந்த மூன்று புத்தகங்களும் சாட்சி!
மூன்று புத்தகங்களும்– மூன்று விதமானவையாகும்.
ஒன்று, மருத்துவத் துறையான அவருடைய துறை யில் இது ஓர் அற்புதமான சாதனையாகும்.
இன்னொன்று, அவர் தொடர்ச்சியாக ‘உண்மை’ இதழில் எழுதியது, புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
மூன்றாவது, அவர் இயற்கை விதிகளை மாற்றிக் கொண்டு, இந்தக் கட்டுரைகளை, புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார்.
மருத்துவருக்கே, மருத்துவத்தைப்பற்றி சொல்லவேண்டிய நிலை!
என்ன அந்த இயற்கை விதி என்றால், பொதுவாக இரவில் 8 மணிநேரம் தூங்கவேண்டும் என்று சொல் வார்கள். மருத்துவருக்கே, மருத்துவத்தைப்பற்றி சொல்லவேண்டிய நிலை.
நேற்றுகூட, ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுதியில் ‘விடுதலை’யில் எழுதியிருக்கின்றேன். டாக்டர் கவுதமன் அவர்கள், தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்து, எல்லோருடனும் உரையாடிவிட்டு, சந்திக்க வேண்டியவர்களை எல்லாம் சந்தித்துவிட்டு, எப்பொழுது படிக்கிறார்? எப்பொழுது எழுதுகிறார்? என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
அவருடைய மருத்துவத் தொழிலைப் பொறுத்த வரையில், சிறப்பாகச் செய்யக்கூடியவர்.
அவருடைய வீட்டிலேயே
ஒரு பல், பல்கலைக் கழகம் இருக்கிறது!
அப்படிப்பட்ட டாக்டர் கவுதமன் அவர்களுடைய மூன்று புத்தகங்கள் இங்கே வெளியிடப்படுகின்றன. இந்நிகழ்விற்கு நன்றியுரை கூறவிருக்கக் கூடியவர், டாக்டர் இனியன், அவருடைய அன்பு மகன் இனியன். புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவர், அவருடைய பெயரன் நித்திலன். அவரும், பல் டாக்டர். ஆகவே, அவர்களுடைய வீட்டிலேயே ஒரு பல், பல்கலைக் கழகம் இருக்கிறது.
டாக்டர் கவுதமன் அவர்களுக்கு
இன்றைக்கு 76 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
இது ஒரு குடும்ப விழா. டாக்டர் கவுதமன் அவர்க ளுக்கு இன்றைக்கு 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. நாம் எல்லோரும் எழுந்து நின்று, கைதட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்வோம்.
இது ஓர் அதிசயமான குடும்பம். அந்தக் குடும்பத்தில், அவருடைய தந்தையார் இராமமூர்த்தி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் பிறந்த ஒருவர் அவர். தலைமுறை இடைவெளி இல்லாதது நம்முடைய இயக்கம்.
அதற்கு அடையாளம் என்னவென்றால், இப்பொழுது ஜென் சி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். W சியும் சரி, ஓல்டு சியும் சரி, எல்லா சியும் ஒன்றாக இருக்கக்கூடிய வாய்ப்பு.
ஒரு வேடிக்கை என்னவென்றால், மருத்துவராக இருந்து கொண்டு, அவர் எழுதிய புத்தகங்களை, இன்றைக்குப் பெருமிதத்தோடு வெளியிடுகிறார். பொது வாக மருத்துவர்கள் யாரும் இவர் போன்று புத்தகங்களை எழுதி வெளியிடுவதில்லை.
டாக்டர் கவுதமன் மருத்துவத் துறையில், தொண்டறச் செம்மலாகத் திகழ்கிறார்!
நம் குடும்பத்தவர் என்கிற முறையிலும், கொள்கை வீரர் என்பதற்காகவும், தன்னுடைய பணியைத் தாண்டி, தொண்டறச் செம்மலாக இருக்கிறார், மருத்துவத் துறையில்.
அண்மைக் காலமாக, ஒரு கால் திடலிலும், இன்னொரு காலை மருத்துவமனையிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்நிகழ்ச்சி முடிந்ததும், மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.
டாக்டர் கவுதமன் அவர்கள் 76 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். முக்கால் நூற்றாண்டு, வாழ்த்துகளை எல்லோரும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், அவருடைய ஊரில், 1945 ஆம் ஆண்டு கூட்டம் போட்டோம். சேலம் மாவட்டத்தில், பிரிக்கப்படாத சேலம் மாவட்டம் அது. அந்த மாவட்டத்திற்கு, மாணவர் சுற்றுபயணத்தின்போது, அய்யா அவர்கள் எங்களை அனுப்பினார்.
எம்.என்.நஞ்சய்யா
சேலம் மாவட்டத்தின் திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர் எம்.என்.நஞ்சய்யா அவர்கள். மிக அற்புத மான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர். ஒகேனக்கல்லில், அவருடைய பெயரில்தான் மன்றம் இருக்கின்றது.
அவரும், மற்ற தோழர்களும், நாங்கள் தருமபுரி, பென்னாகரம் பகுதிகளுக்கு, மாணவர் சுற்றுப் பய ணத்திற்காகச் சென்றோம்.
அப்பொழுது, இவர் கருவில்கூட உருவாகவில்லை. அவருக்கு இன்றைக்கு நாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறோம் என்றால், இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு இதுதான் அடையாளம்.
இந்த இயக்கத்தை அவர் அழித்துவிடுவார்; இவர்கள் அழித்துவிடுவார்கள் என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
1945 ஆம் ஆண்டு அங்கே சென்று பிரச்சாரம் செய்கிறோம். இவருடைய தந்தையார் அதிகமாகப் பழக்கம் இல்லை என்றாலும், அன்றிலிருந்து பழக்க மானார். கடைசிவரை எங்கள் குடும்பத்தினரோடு ஒன்றிப் போய் இருந்தவர்.
தாயார் சாந்தா அம்மையார்!
டாக்டர் கவுதமன் அவர்கள், 1949 ஆம் ஆண்டு பிறக்கிறார். ஓர் இளைஞர், படிப்படியாகப் படித்தார். அவரோடு ஒவ்வொரு படி நிலையிலும், கழகம், பெரியார்தான் உடன் இருந்திருக்கிறது. பெரியாருடைய கொள்கையும் இருக்கிறது; பெரியாருடைய குடும்பங்களும் இருக்கின்றன. அவருடைய தந்தையார் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமானவரோ, அதைவிட அவருடைய தாயார் சாந்தா அம்மையார், எங்கள் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்தவர்.
‘விடுதலை’ நாளிதழின் மேலாளர் சம்பந்தம்!
அவரைக் கேலி செய்வது என்னுடைய நண்பர் சம்பந்தம். ‘விடுதலை’ நாளிதழின் மேலாளராக இருந்த வர். இவர்கள் எல்லோரும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், ஒருமையில் அழைத்துக் கொள்வார்கள்.
அவர் நகைச்சுவையாகச் சொல்வார், ‘‘ஆசிரியர், நீங்கள் சந்தா, சந்தா என்று கேட்கிறீர்கள்; நான், அவனிடம் போய் கேட்டால், அவன், ‘சாந்தா, சாந்தா’’ என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான்’’ என்று.
அந்தக் குடும்பத்து உறவினர்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் அத்துணை பேரும் எங்கள் குடும்பத்தோடு உறவுள்ளவர்கள், நெருக்கமானவர்கள்.
பெரியார் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் கெட்டுப் போகமாட்டார்கள்!
நான் பார்த்து, வளர்ந்தவர்கள், இந்தக் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் கெட்டுப் போகமாட்டார்கள் என்பதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
தருமபுரியில் சிலை திறப்பு விழாவின்போது உரை யாற்றிய கலைஞர் அவர்கள், ‘‘நான் பெரியாரிடம் வந்தபோது, என் குடும்பத்தார், ‘‘நீ, உருப்படுவியா?’’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நான் உருப்பட்டேனா, இல்லையா? என்று ஊர் அறியும், உலகு அறியும்’’ என்று சொன்னார்.
டாக்டர் கவுதமன் அவர்கள், வெளிநாடுகள் பல வற்றிற்குச் சென்று வந்திருக்கிறார். அனுபவங்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு பயிற்சி முகாமிலும், அவர் மூடநம்பிக்கைப்பற்றி வகுப்பெடுத்தார் என்றால், மாணவர்கள், அசைய மாட்டார்கள். பாட்டு, கூத்து, வித்தை என்று எல்லாவற்றையும் கலந்து கொடுப்பவர். அப்படிப்பட்ட அற்புதமான, சிறப்பானவர் அவர்.
இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களை மிக அழகாக எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிகுந்த ஒரு வாய்ப்பு, சாதாரணமாக இருப்பவர்களுக்குக் கிடைப்பது என்பது அரிது.
நம்முடைய இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒவ்வொரு வகையில் சிறப்பானவர்கள்.
இது சாதாரண மன்றமல்ல; மாமன்றமாகும். இங்கே உள்ள ஒவ்வொருவரும் மிகச் சிறப்பானவர்கள். இந்நிக ழ்விற்கு வந்துள்ள பல் மருத்துவர் அய்யா ஜெயக்குமார் அவர்களும், டாக்டர் கவுதமனும் நெருக்கமான குடும்பத்தவர்கள், படிக்கும் காலம் முதலே!
கொள்கை நட்பாக, என்றைக்கும் இருக்கக்கூடியவர்கள் நாங்கள்!
ஆகவே, நட்பு வேறு; உறவு வேறு என்று பிரித்துப் பார்ப்பதே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நட்பு. அதுவும் எங்களைப் பொறுத்தவரையில், கொள்கை நட்பாக, என்றைக்கும் இருக்கக்கூடிய ஓர் வாய்ப்பைப் பெற்று, அற்புதமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து, அவர் பலருக்கும் தொண்டு செய்யவேண்டும்.
இதுவரையில் அவரைப்பற்றி நாம் என்ன தெரிந்து கொண்டிருக்கின்றோம் என்றால், இயக்கத்துக்காரர், கொள்கைக்காரர், பல் மருத்துவர் என்றுதான், பழகுவ தற்கு இனியவர் என்று மட்டும்தான் நாம் நினைக்கிறோம்.
மூன்று புத்தகங்களையும்,
மூன்று பேருக்கு அர்ப்பணித்திருக்கிறார்!
இரண்டு விஷயங்களை மிக முக்கியமாகச் சொல்ல வேண்டும். வாழ்க்கை முறை என்பது மிக முக்கியமாகும். அந்த வகையில், இங்கே வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களையும், மூன்று பேருக்கு அர்ப்பணித்தி ருக்கிறார். அதுதான், அவருடைய நன்றி உணர்ச்சி!
தமிழ்நாட்டின் முதல் முகவை அறுவை மருத்துவர் சி.கே.டி. எனக்கும் அவர்தான் மருத்துவராக இருந்தவர். இவர் யாரென்றால், டாக்டர் நடேசனாரின் கொள்ளுப் பெயரன் அவர்.
அப்பேர்ப்பட்டவர்தான், டாக்டர் கவுதமனுக்கு ஆசிரியராக இருந்தவர். எல்லா வகையிலும் ‘மென்டார்’ என்று சொல்லக்கூடிய வழிகாட்டியாக இருந்தவர். அவருக்கு இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார்.
டாக்டர் பிறைநுதல் செல்வி!
அதேபோல, இன்னொருவர் யார் என்று சொன்னால், டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள். நம்முடைய இயக்கத்திற்குப் பொருளாளராக இருந்தவர். அவர், பதவி யில் இவரைவிட மூத்தவராக இருந்தார். மருத்துவ நிர்வா கத் துறையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஜாதி மறுப்புத் திருமணம். இவர்களு டைய திருமணத்தை நடத்தி வைத்தவன் நான்தான்.
பிறைநுதல் செல்வி அவர்கள், பல சங்கடங்களைத் தாண்டி, பதவியில் உயர்ந்து, பெரிய நிலைக்கு, இணை இயக்குநராகப் பதவி வகித்த நிலையில், அவரிடம் நான், ‘‘இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களுக்கு சர்வீஸ் இருக்கிறது?’’ என்று கேட்டேன்.
‘‘ஏழு ஆண்டுகள் இருக்கிறது’’ என்று அவர் சொன்னார்.
‘‘செல்வி, இன்னும் இத்தனை ஆண்டுகள் நீங்கள் அந்தப் பதவியில் இருக்கவேண்டுமா?’’ என்று கேட்டேன்.
‘‘என்னங்க அய்யா, சொல்லுங்கள்!’’ என்று கேட்டார் பிறைநுதல் செல்வி.
‘‘இயக்கத்திற்கு, உங்களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறோம்’’ என்று சொன்னேன்.
‘‘அப்படியா, அய்யா?’’ என்றார்.
அடுத்தமுறை என்னை வந்து பார்க்கும்போது, ‘‘அய்யா, நான் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டேன்’’ என்று சொன்னார்.
இயற்கையின் கோணல்புத்தியால்…
திராவிடர் கழகத்திற்கு துணைப் பொதுச்செயலாள ராக்கி, பிறகு கழகப் பொருளாளராக்கி, முழுத் தயாராகி வந்த நிலையில், இயற்கையின் கோணல்புத்தி அவரை எங்களிடமிருந்து பிரித்தது. இன்றைக்கும் அவரை நினைத்துப் பார்க்கின்றோம். இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்போ, அதைவிடப் பன்மடங்கு இழப்பாக, கொள்கைக் குடும்பத்தவராகிய நாங்கள் நினைக்கிறோம்.
அவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அர்ப்பணித்தி ருக்கிறார் டாக்டர் கவுதமன் அவர்கள்.
இன்னொரு விசித்திரமான செய்தி என்னவென்றால், இறையன் குடும்பத்தவர்கள் அண்மையில், குன்னூ ருக்குச் சென்றுவந்திருக்கிறார்கள். இவருடைய வீடு, ஒரு கெஸ்ட் அவுஸ். நிறைய பேர், தங்கி விட்டு வருவார்கள்.
செங்கோட்டைக்குப் போகக் கூடிய அளவிற்கு…
அவருடைய பணி எவ்வளவு சிறப்பானது என்றால், அய்யா காலத்தில், செங்கோட்டையைத் தாண்டியது இல்லை இயக்கம். ஆனால், குற்றாலம் பயிற்சி முகாம் நடத்தி, செங்கோட்டைக்குப் போகக் கூடிய அளவிற்கு, இவர்கள் அங்கே பணி செய்தார்கள். அந்த வட்டாரத்தில், இயக்க வளர்ச்சிக்காக செல்வியும், டாக்டர் கவுதமனும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள் ஒவ்வொரு ஆண்டும். அவர்களுடைய வீட்டிற்குச் செல்லும்போது, எல்லோரும் பார்ப்பார்கள். அந்த வாய்ப்பு, இப்பொழுது உள்ளவர்களுக்குக் கிடையாது.
மல்லி என்கிற ஓர் அம்மையார்!
இந்த இல்லத்துப் பிள்ளைகளான இனியன், பாவனா ஆகியோரை எல்லாம் வளர்த்தெடுத்தவர்கள் யார் என்று சொன்னால், ஏனென்றால், இவர்கள் இரண்டு பேரும் அரசுப் பணிக்குச் சென்றுவிடுவார்கள். விருந்தினர்கள் வந்து கொண்டிருப்பார்கள்; உறவினர்கள் மாறி, மாறி வந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் அத்துணைப் பேரும் வருகின்ற சூழ்நிலையில், மல்லி என்கிற ஓர் அம்மையார், அவர் இஸ்லாமியர் என்பதுதான் வேடிக்கை. ‘மல்லி, மல்லி’ என்றுதான் நாங்கள் அழைப்போம். என்னை ‘அண்ணே’ என்றுதான் அழைப்பார்.
கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்தவர். உப சரிப்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர். இந்தப் பிள்ளை களையெல்லாம் வளர்ப்பதிலும், கண்காணிப்புள்ள ஒரு பாதுகாவலர்.
நானே ஆலோசனை சொன்னேன் இவரிடம், ‘டெலிகேட்’ செய்யுங்கள் என்றேன்.
ஆகவேதான், நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம். இது ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகம். அதனுடைய வெளியீடாக இப்புத்தகங்கள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஜாதி மறுப்பு – மத மறுப்பு!
இந்தக் குடும்பம் மட்டுமல்ல, இப்படி ஒவ்வொ ருவருடைய குடும்பம் அவ்வாறு இருக்கவேண்டும். டாக்டர் கவுதமன் – பிறைநுதல் செல்வி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அதேமாதிரி இனியனும், ஜாதியைத் தாண்டி, மாநில மறுப்புத் திருமணமே செய்துகொண்டவர் அவர்.
நாம் எல்லோரும் உறவினர், மனித ரத்தம். இந்த ஜாதி ரத்தம், அந்த ஜாதி ரத்தம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே, என்னுடைய ஜாதி என்னாயிற்று? என்னுடைய மதம் என்னாயிற்று? என்பதெல்லாம் ஒன்றுமே கிடையாது.
இது ஓர் அற்புதமான எடுத்துக்காட்டான குடும்ப மாகும். இந்தக் குடும்பம், இன்னும் மிகச் சிறப்பாக இருக்கவேண்டும்.
அவருடைய பெயரப் பிள்ளையும் டாக்டராக இருக்கிறார்.
எல்லோருக்கும் நன்றி!
அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
ஜப்பானில் நடைபெறும் மாநாட்டிற்காக டாக்டர் கவுதமன் அவர்கள் செல்லவிருக்கிறார். அம்மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் இங்கே இருக்கிறீர்கள், உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும், ஜப்பானுக்கு வருவேன். நேரி்ல் வர மாட்டேன், காணொலிமூலமாக உரையாற்றுவேன்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை
யாற்றினார்.
