சென்னை, அக்.15 – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், டில்லியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (14.10.2026) மாநிலம் முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி சென்னையில், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, ஆர். கே.நகர் அரசுக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியல்அமைப்பு சட்டத்தைக் கைகளில் ஏந்தி தங்களது எதிர்ப்பை முழக்கங்களாக பதிவு செய்தனர்.
சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, “தமிழ்நாடு அரசு எஸ்.அய்.ஆர்.ஆருக்கு எதிராக உள்ளதாக கூறுகிறது. ஆனால் எஸ்.அய்.ஆருக்கு எதிராக டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் காவல் துறை, துணை ராணுவம் நடத்தும் தாக்குதலை கண்டிக்க மறுக் கிறது. முதல்-அமைச்சர் விஜய், நியாயத்துக்காக போராடுகிறவர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என்றார்.
அய்யனார் கோயில் உண்டியல் அபேஷ்
பாவம் அய்யனார்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே நடியப்பட்டு கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே பொதுமக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 உண்டியல்களை காணவில்லை. காணிக்கை பணத்துடன் உண்டியல்களை அடையாள தெரியாத கும்பல் தூக்கிச் சென்றது தெரிந்தது. கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் மொத்தம் சுமார் ரூ.2 லட்சம் வரை இருந்திருக்கும் எனக்கப்படுகிறது. ஆலடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தருமபுரி அரசு விழாவில் திடீர் மின்தடை
‘‘யார் செய்கிறார்களென்று தெரியவில்லையாம்’’
அமைச்சர் ராஜ்குமார் பேச்சு!
தருமபுரி, அக்.15 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார்தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், முடிவுற்ற ரூ.10.04 கோடி மதிப்பிலான 17 புதிய பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனே ஒலி பெருக்கியின்றி சற்று உரத்த குரலில் பேசிய அமைச்சர் ராஜ்குமார், ஜெனரேட்டர் இயக்கி மின்சாரம் வந்ததும் நிகழ்ந்த நிகழ்வு குறித்துக் கூறியதாவது:
“இப்போது புதுசா இருக்குது. என்னான்னு தெரியல. எல்லா இடத்திலேயும் மின்சாரம் கட் பண்றது ஒரு வேலையா இருக்குது. அது யார் பண்றாங்கன்னு தெரியவில்லை. எல்லா அரசு நிகழ்ச்சியிலும் கரெக்டா பாத்தீங்கன்னா பவர்கட் பண்ணிடறாங்க. கூடிய விரைவில் கண்டுபிடிக்கப் பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் திடீர் மின்தடை ஏற்படுவது தற்போது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
