சென்னை, செப்.30- “தமிழ் நாட்டில் கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ‘ரீல்ஸ்’ ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் நடந்துள்ளது. என்ன செய்கிறார் டம்மி முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, சென்னை அய்ஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை – திருவண்ணாமலை – சேலம் – கன்னியாகுமரி – தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ‘ரீல்ஸ்’ ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.
இதனிடையே, கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை அய்ஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண் முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
திமுகவை விமர்சிக்க ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை முதலமைச்சர் விஜய், தன்வசமுள்ள காவல் துறையைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?” என தெரிவித்துள்ளார்.
