BRIDGE – Building Rational Inclusive Democratic Global Equalty என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.
ஜப்பானில் வாழுந்தமிழ் உணர்வா ளர்கள் ஆசிரியர் அவர்களின் ஜப்பானியப் பயணத்திற்குப் பின் இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு உழைத்தனர். சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா மெல்பேர்ன் மாநாட்டைச் சிறப்பாக நடத்திய தோழர்கள் உற்சாகப்படுத்திப் பங்கேற்றனர்.
மாநாடு சிறப்பாக மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, டான்சேனியா, தமிழ்நாட்டுப் பல் வேறு இடங்கள், மும்பைத் தோழர்கள் மற்றும் ஜப்பானி யர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராசாத்தி கருணாநிதி, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஜெயரஞ்சன், கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மற்றும் அமெரிக்கப் பேராசிரியர் ராம் மகாலிங்கம், இலண்டன் முனைவர் விக்னேசு ராசாமணி, மும்பை குமணராசன், மலேசியா கோவிந்தசாமி, டான்சேனியா பாலசுப்பிரமணியன், மராத்திய ரேகா தாக்கூர், மருத்துவர் சரோ இளங்கோவன், விஜய பாசுகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஜப்பானில் ஏன், எதற்காக, இந்த மாநாடு பெரியாரின் மனிதநேயம் உலகளாவியது என்பதையெல்லாம் சிறப்பாகப் பலரும் எடுத்துரைத்தனர்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று தமிழ் வாழ்விணையருடன் வாழும் புகாவோ சுனிச்சி சான், ஜப் பானிய உழைப்பாளிகள் தலைவர், ஜப் பான் மனித நேய அமைப்பின் தலைவர் கோரோ ஒசிடொ உரையாற்றினர்.

கர்நாடக ரேமன் மகாசேசே விருது பெற்ற பெசவாடா வில்சன் உரைக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலியுடன் பாராட்டினர்!
சிறப்பாக இளையோர் பங்களிப்பு பாராட்டத்தக்கது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் ஜப்பானில் வாழும் இளைய தலைமுறை! அழகு தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் அறிமுகம் செய்தனர். அமெரிக்க இளையோர் செல்வி நிவிதா, செல்வன் அமரன் திருக்குறளை மேற்கோள் காட்டி எதிர்காலத்தை நம் கண் முன் படைத்தனர்!
மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் வரவேற்பு வாழ்த் துரை, இறுதிச் சிறப்புரை ஒளிப்பதிவாக ஒலித்துச் சிறப்பித்தது. வரலாற்றையும் நமது உழைப்பின் பெருமைகளையும் நமது கடமைகளையும் எடுத்துரைத்தார்.

பேராசிரியர் நொபோரோ காரசிமா அவர்களின் நூலில் இருந்து நமது வரலாற்றைச் சொன்னப பதிவு ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது.
மாநாட்டிற்காகச் சிறப்பாக உழைத்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் குறிப்பாக கமலக்கண்ணன், செந்தில், குன்றாளன், கோவிந்து, வி.சி.வில்வம், பிரின்சு என்னாரெசு பெரியார் இவர்களை வாழ்த்தி மகிழ்கின்றோம். அருமையான ஜப்பானியத் திருமண விருந்து போல் ஜப்பானிய உணவுடனும் தமிழ் இசையுடனும் விழா நிறைவு பெற்றது!
– தொகுப்பு:
மருத்துவர் சோம. இளங்கோவன்
