‘‘பெரியார் உழவனாக’’, டாக்டர் சோம.இளங்கோவன் என்றைக்கும் திகழ்கிறார்!
பெரியார் வெல்வார்! அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!
‘‘பெரியார் உழவனாக’’, டாக்டர் சோம.இளங்கோவன் என்றைக்கும் திகழ்கிறார்! பெரியார் வெல்வார்! அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்! ‘‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்!’’ ஜப்பான் மாநாட்டிற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அய்ந்தாவது பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு கடந்த இரண்டு நாள்களாக (11, 12.10.2026) சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பானிய தோழர்களும், பெரியாரிய திராவிட பண்பாட்டுப் பாதுகாப்பு உணர்வாளராக இருக்கக்கூடிய புலம்பெயர்ந்த அமைப்புகள் இணைந்த NRTIA என்ற அந்த அமைப்பும் சேர்ந்து, சிறப்பாக இரண்டு நாட்கள் மாநாட்டினை, அளப்பரிய வகையில் பாராட்டும் வண்ணம் நடத்தி, சாதனை படைத்திருக்கிறார்கள்.
வரலாற்றில் என்றைக்கும்
நிலைத்து நிற்கும்!
இது திராவிட இயக்க வரலாற்றிலும், தந்தை பெரியார் தொடங்கிய பயணத்திலும் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
கடந்த பல ஆண்டுகளாக, அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன் மற்றும் நம்முடைய அருமை நண்பர்கள் எல்லாம் இணைந்து சிகாகோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பை உருவாக்கினார்கள்.
அதை ஏதோ ஒரு ‘லெட்டர் பேட்’ அமைப்பாக ஆக்காமல், அதற்கு மிகப்பெரிய அளவுக்குச் செயலியைத் தந்தார்கள். செயல் வடிவம் தந்து, அதற்காகவே அவர்கள் இருவரும் தங்களுடைய பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்கள்.
மனிதர்கள், மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்; மக்கள் மாக்களாகக் கருதப்படக்கூடாது!
அந்த விருப்ப ஓய்வு பெற்று, முழு நேரமும் பெரியார் பணி என்று ஆக்கிக் கொண்டார்கள். பெரியார் பணி என்பது உலகத்திற்கு, மனிதநேயத்தைச் சொல்லிக் கொடுப்பது. பெரியார் பணி என்பது, சுயநலமற்றது. பெரியார் பணி என்பது, முழுக்க முழுக்க மனிதத்தைப் போற்றுவது. மாமனிதம் உலகெங்கும் தழைக்க வேண்டும். உலகம் ஓர் குலம். மக்கள் அனைவரும் சமவாய்ப்புப் பெற வேண்டும். மனிதர்கள், மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். மக்கள் மாக்களாகக் கருதப்படக்கூடாது என்ற பொதுத் தத்துவத்தை வைத்துத்தான், அறிவு ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டில், ‘குடிஅரசு’ மூலமாகத் தொடங்கினார்கள்.
இது வெறும் சாதாரணமாக உள்ளூரிலேயே முடிந்துவிடக்கூடிய ஓர் இயக்கம் அல்ல. இது உலகளாவிய இயக்கமாக இருக்கும் என்பதையே அவர்கள் தங்களுடைய எல்லையாக நிர்ணயித்துக் கொண்டார்கள்.
அப்படி நிர்ணயித்துக் கொண்டது மட்டுமல்லாமல், ‘குடிஅரசு’ முன்னே, பெரியார் பின்னே! என்று சொல்லக்கூடிய வகையிலே, 1929 ஆம் ஆண்டில், மலேசியாவிற்கு அவர்கள் சிறப்பான வகையிலே அன்னை நாகம்மையாரோடு சென்றார்கள்.
பகுத்தறிவுள்ளவர்களாக
உயர்த்தப்பட வேண்டும்!
அப்படிச் சென்றவர்கள், படோடாபமாகப் பெரிய நகரங்களுக்குப் போகவில்லை. தோட்டப்புறத் தொழிலாளர்களாக, வதிந்திக் கொண்டிருந்தவர்களை, இங்கிருந்து கண்காணிகளால் அழைக்கப்பட்டுப் போனவர்களை எல்லாம் பார்த்து, தமிழர்கள் ஜாதியைக் கொண்டு போய் விடக்கூடாது. தமிழர்கள் உழைக்கின்ற உழைப்பாளிகள், அந்த உழைப்பாளிகள் தங்கள் உழைப்பினுடைய பெருமையை உணர்ந்திருந்தாலும் கூட, அதன் மூலம் பாரம்பரியமாக வெறும் உடல் உழைப்பாளர்களாகவே இருக்கக்கூடாது. அறிவுஜீவிகளாகவும் மாற்றப்பட வேண்டும். படிப்பாளிகளாக மாற்றப்பட வேண்டும். பகுத்தறிவுள்ளவர்களாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் அங்கே பிரச்சாரம் செய்தார்கள்.
அதன் பிறகு, அன்னை மணியம்மையாரோடு 1954 ஆம் ஆண்டில் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று, முதல் வருகையில் அவர் வழிகாட்டியதால், படித்து, பணிகளுக்குச் சென்ற தலைமுறையினர், நன்றிப் பெருக்கோடு அய்யாவை வரவேற்றனர்! அந்த சமூக மாற்றத்தைக் கண்டு, பெரியார் பூரித்துப் போனார்.
பெரியார் பயணங்கள் விதை தூவிடும் பயணங்கள். முதல் பயணத்தின் பழத்தைச் சுவைத்த பெருமை அய்யாவிற்குக் கிடைத்தது.
1954 ஆம் ஆண்டு, மீண்டும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு பர்மாவிலிருந்து அவர்கள் சென்றபோது, அவர்களை வரவேற்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளும், மற்றவர்களும் படித்தவர்களாகி!
அவர்களுக்கு அறிவுரை சொன்னார்கள், ‘‘சிறப்பாக வந்திருக்கிறீர்கள், படித்திருக்கிறீர்கள். மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும், இந்தியாவுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட, கடுமையாக இந்த நாட்டை உழைத்து உருவாக்கியிருக்கிற உங்களுக்கு, இந்த நாட்டில் பங்கு உண்டு. ஆகவேதான் நீங்கள் இந்நாட்டுக் குடிமக்களாகுங்கள்’’ என்ற ஓர் அற்புதமான கருத்தை சொன்னார்; அதை ஏற்றவர்கள் சிறப்பாக இருந்தார்கள். புலம்பெயர்ந்தவர்கள், வீடு திரும்பியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஊர் திரும்பியவர்களை விட வேரூன்றியவர்கள் அங்கு மிக அதிக சிறப்பாக இருக்கிறார்கள்.
அய்ந்து கண்டங்களிலே பன்னாட்டு மாநாடுகளை நடத்தியது சிறப்பானது!
இப்படி அவர் தொடங்கிய பணி, அவருடைய காலத்திலே பல நாடுகளுக்கு தத்துவ ரீதியாகச் சென்றடைந்தது. இன்றைக்கு அய்யா அவர்கள் உடலால் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவருடைய கருத்துகள், அவர் பயணத்தை விட, வேகமான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றன. அதற்கு அடையாளங்கள்தான், பெரியார் பன்னாட்டு அமைப்பும், அது ஏற்படுத்திய அய்ந்து கண்டங்களிலே பன்னாட்டு மாநாடுகளை நடத்தியது சிறப்பானது.
அய்ரோப்பா கண்டத்திலே முதலில் அவர்கள் ஜெர்மனியில் ஆரம்பித்தார்கள். அதற்கடுத்து அமெரிக்கா, கனடா, நான்காவதாக ஆஸ்திரேலியா, இப்போது அய்ந்தாவதாக ஜப்பானில் ஒரு வரலாறு படைத்திருக்கிறார்கள். ஜப்பான் எல்லா வகையிலும் எடுத்துக்காட்டானதாகும். பழைமைக்கும் எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் எத்தகைய பெரிய புயலும், பூகம்பமும், சுனாமியும் வந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, அதைப் பற்றி கவலைப்படாமல், அதை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தையும், துணிவையும் கொண்ட ஒரு நாடு என்பது எப்படியோ, அதே போலத்தான் இந்த இயக்கமும், எத்தனை பூகம்பங்களும், எத்தனை சுனாமிகளும் வந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்று என்பதை நிரூபிக்கக்கூடிய வகையிலே, நேற்றைய மாநாட்டிலே சிறப்பான தத்துவங்களை எல்லாம் பல அறிஞர்கள் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
பாராட்டுகள் – நன்றிகள்!
குறிப்பாக கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, ஜெயரஞ்சன், டி.ஆர்.பி.ராஜா போன்றவர்கள், வெளிநாட்டிலே இருந்திருந்த ஆய்வாளர்களான பெருமக்கள், நம்முடைய இயக்கப் பிரச்சாரகர்கள் குறிப்பாக வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் நம்முடைய தோழர்கள் அத்துணைப் பேரும் சிறப்பான வகையிலே பேசியிருக்கிறார்கள். ஏராளமான தமிழ்நாட்டு பேராளர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்று இருக்கிறார்கள். அதோடு அதனுடைய தாக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு வெற்றிகரமாக நடத்திய பெருமை நம்முடைய ஜப்பானிய தோழர்கள், குறிப்பாக நம்முடைய செந்தில், அதேபோல கமலக்கண்ணன், குன்றாளன், கோவிந்தபாசம், ஏழுமலை, சீனிவாசன் போன்றவர்கள் மற்றும் அயராது உழைத்த பலருக்கும் எங்களுடைய பாராட்டுகளையும், ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுயமரியாதையும், பெரியார் தத்துவமும் முக்கியம்!
அதிலும் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள், சலிப்படையாத ஒரு வீரர், களத்தில் இருக்கக்கூடிய ஒரு கொள்கைப் போர்வீரர். அவருக்கு மிகப்பெரிய துணை, அவருடைய வாழ்விணையர் டாக்டர் சரோஜா அவர்கள். அவர்களோடு சேர்ந்து அமெரிக்காவிலே ஓர் அமைதிப் புரட்சியை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பெரியார் பன்னாட்டு அமைப்பு மூலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். சிறப்பான வகையிலே ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் என்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். என்னுடைய உடல் இங்கே இருந்தாலும், உள்ளமெல்லாம், சிந்தனையெல்லாம் ஜப்பானின் மாநாட்டைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அங்கிருந்து வந்த தகவல்கள், மகிழ்ச்சி ஊற்றை மேலும் மேலும் பீறிடச் செய்தது. அந்த வகையிலே தான், மிகப்பெரிய அளவிற்கு என்னுடைய நலம் சார்ந்த வாழ்வுக்குக் கூட இது ஒரு ‘நல்ல மருந்தாக’ ஆகக்கூடிய வாய்ப்பாக, ஜப்பான் தோழர்கள் மருந்து தந்திருக்கிறார்கள் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், ‘திராவிடம்’ என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எங்கும் பரவ வேண்டிய ஒன்றாகும். எப்படி மனிதனுக்கு மூச்சு காற்று மிக முக்கியமோ, எப்படி விஞ்ஞானம் மிக முக்கியமோ, அதுபோலத்தான் சுயமரியாதையும், பெரியார் தத்துவமும் முக்கியம்!
ஆகவே, நம்முடைய டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களும், ஜப்பான் தோழர்களும் இணைந்து, கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேலாக, இத்தனைக்கும் உழைக்கின்ற தோழர்கள் எல்லோரும் பணிபுரிகின்றவர்கள். அவர்களுக்கும் அலுவலகப் பணிகள் எல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதோடு குடும்பம் குடும்பமாக, அந்தக் குடும்பங்களாக இருக்கிறார்கள். நல்ல குடும்பம், ஒரு நல்ல சுயமரியாதைப் பல்கலைக்கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பல பல்கலைக்கழகங்களை இணைத்த குடும்பங்கள். அவர்களுக்கு எங்களுடைய கனிந்த பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்!
பெரியார் உழவனாக, டாக்டர் சோம.இளங்கோவன் என்றைக்கும் திகழ்கிறார்!
அதுபோலவே அயராது களங்காணுவது, அடுத்தது எங்கே? என்ற கேள்வி கேட்கிற நேரத்தில், அந்த அளவுக்கு சலிப்படையாமல் பணி செய்து கொண்டிருக்கக்கூடியவரான நம்முடைய பெரியார் பன்னாட்டு அமைப்பினுடைய சோர்விலா தலைவர், செயல் வடிவமாக இருக்கக்கூடிய எனது அருமைச் சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுடைய பணி, மேலும் சிறப்புடன் ஓங்க வேண்டும். அவருடைய கண்கள் உலகத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய கால்கள் அடுத்து எங்கே பெரியாரை அழைத்துப் போகலாம்? என்பதற்காக இருக்கிறது. பெரியார் உழவனாக, அவர் என்றைக்கும் திகழ்கிறார்.
எனவேதான் அடுத்த மாநாட்டைச் சிறப்பாக எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேராளர்களும், பிற பகுதிகள், குறிப்பாக ஆஸ்திரேலியாவிலே இருக்கக்கூடிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தினர், அதுபோலவே கனடாவிலே இருக்கக்கூடிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தினர், அமெரிக்காவிலே இருக்கக்கூடிய பகுத்தறிவாளர்கள் அமைப்புகள், மலேசியா, டான்சானியா இவை எல்லாவற்றையும் இணைத்து, சிறப்பாக மேலும் மேலும் இது விரிவடையும்.
எப்படி ஆம்ஸ்ட்ராங் நிலவிலே கால் வைத்தபோது ஒன்றைச் சொன்னார், அது என்னவென்றால், ‘‘This is one small step for man, one giant leap for mankind.’’ – ‘‘இது மனிதனுக்கு ஒரு சிறிய அடி, ஆனால் மனித குலத்திற்கோ ஒரு பெரிய பாய்ச்சல்’’ என்று சொன்னார்.
பெரியார் பன்னாட்டமைப்பின்
அடுத்த மாநாடு!
ஆகவே, இது பெரியாரின் பாய்ச்சல், பெரியாரின் விளைச்சல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். அநேகமாக அடுத்து எப்போது அவர் காலத்தை நிர்ணைக்கிறார் என்று சொல்ல முடியாது. அடுத்த மாநாடு லண்டனிலோ அல்லது நார்வே ஆஸ்லோவிலோ மற்ற இடங்களிலோ அய்ரோப்பா கண்டத்திலோ இருக்கக் கூடும் என்பதை எதிர்பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியை, நன்றியைப் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா கூறியதுபோல், ‘‘பெரியார் அவர்கள் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை; அது போக வேண்டிய தூரத்துக்குப் போய் அடைய வேண்டிய சக்தியை இலக்கைத் தொட்டுத்தான் தீரும்.
‘‘எப்படி வில்லை விட்டு கிளம்பிய கணை, அடைய வேண்டிய இடத்தில், பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல, பெரியார் அவர்களிடத்திலே இருந்து பிறந்த அறிவுக் கணை, எந்த லட்சியத்தை அடைய வேண்டுமோ, அதை அடைந்தே தீரும். அதில் அய்யம் யாருக்கும் இல்லை.’’
அதில் கால அட்டவணையைக்கூட நாம் கருதத் தேவையில்லை என்பதை மனதில் நிறுத்தி, களப் பணி – உலகப் பணியாக தொடரட்டும் – தொய்வின்றி!
நன்றி! நன்றி!! நன்றி!!
பெரியார் வெல்வார்!
அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!
‘‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்!’’
சென்னை
13.10.2026
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
