சென்னை, அக். 13– தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி விலையே உயர வில்லை என்று உணவுத்துறை அமைச்சர் மறுத்து வருவது கண்டனத்திற்குரியது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் குரல்கள் எழுந்துள்ளன.
அரிசி விலை கடந்த ஜூலை மாதம் முதல் கடந்த மூன்று மாத காலத்திற்குள் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.700 வரையிலும் அதிகரித்துள்ளது.
சாதாரண ரக புழுங்கல் அரிசி
கடந்த ஜூலை மாதம் ரூ.1,100 ஆக இருந்த 26 கிலோ மூட்டை விலை தற்போது ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இதன் கிலோ விலை ரூ.42-லிருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது.
பொன்னி புழுங்கல் அரிசி
பொன்னி புழுங்கல் அரிசி ரூ.1,400-லிருந்து ரூ.1,900 ஆக உயர்ந்துள்ளது.
சோனா மசூரி அரிசி (ஆந்திரா மற்றும் கருநாடகா): ரூ.1,400-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.
அரிசியைத் தொடர்ந்து, பருப்பு வகைகளின் விலையும் தாறுமாறாக அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
துவரம் பருப்பு: விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200-லிருந்து ரூ.13,800 ஆக உயர்ந்துள்ளது (ரூ.600 அதிகம்).
நயம் உளுத்தம் பருப்பு: கடந்த வாரம் ரூ.9,100 முதல் ரூ.9,200 வரை விற்ற 100 கிலோ மூட்டை, இந்த வாரம் ரூ.1,100 வரை அதிகரித்து ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கண்டனம்
மக்களின் அன்றாடத் தேவையாக விளங்கும் அரிசி மற்றும் பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ள சூழலில், “அரிசி விலையே உயரவில்லை” என்று உணவுத்துறை அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், இது மக்களின் துயரத்தை மேலும் அதிகரிப்பதாகவும் உள்ளது.
எனவே, அரசின் இத்தகைய அலட்சியப் போக்கை உடனடியாகக் கைவிட்டு, வெளிமாநிலங்களில் இருந்து நெல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் தமிழ்நாட்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது விநியோகத் திட்டம் மற்றும் சந்தை மூலமாக விலையைக் கட்டுப்படுத்த உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
