சென்னை, அக். 13- பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க இரு வேளைகளுக்கும் ஒரே ஆசிரியரை நியமிக்கும் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
தற்போது காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்கச் சுழற்சி முறையில் ஓர் ஆசிரியர் காலை 8:30 மணிக்குள்ளாகப் பள்ளிக்கு வந்து, உணவைச் சாப்பிட்டுச் சரிபார்த்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரே ஆசிரியர் காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டால், அவர் எப்போது மாணவர்களுக்குப் பாடம் போதிக்க முடியும்? தொடர்ந்து பணியாற்றும்போது ஆசிரியர்களுக்குச் சாப்பிடக்கூட நேரம் கிடைக்காத சூழல் உருவாகும்.
பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் மாற்றுப் பரிந்துரை
இத்திட்டம் முழுக்க முழுக்கச் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருவதால், அத்துறை சார்ந்தவர்களையே முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.
அவர்களுக்குத் துணையாகவும், மாணவர்களை ஒழுங்குபடுத்தவும் சுழற்சி முறையில் காலையில் ஓர் ஆசிரியரும், மதிய உணவுக்கு மற்றொரு ஆசிரியரும் எனப் பிரித்து நியமிப்பதே சரியான நடைமுறையாக இருக்கும்.
எனவே, இரு வேளைக்கும் ஒரே ஆசிரியரை நியமிக்கும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
