திராவிட இயக்கம் சட்டம் அமைத்து எழுதிக் கொடுத்ததினால் வந்தது!
‘இட ஒதுக்கீடு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிறார்கள்!
இந்தியாவிலேயே 69% இருக்கிற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு, எப்படி வந்தது?
சிவகங்கை, அக்.12 இந்தியாவிலேயே 69% இருக்கிற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு, எப்படி வந்தது? சரஸ்வதி பூஜையினால் வந்ததா? ஆயுத பூஜை கொண்டாடியதால் வந்ததா? இந்த இயக்கம் அரும்பாடுபட்டு, திராவிட இயக்கம் சட்டம் அமைத்து எழுதிக் கொடுத்ததினால் வந்தது எ ன்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
்சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.8.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி
என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
10.10.2026 அன்று வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
உயர் ஜாதிக்காரர்கள்தான் படிக்க வேண்டும் என்று மனு தர்மத்தில் எழுதியிருக்கிறது!
ஒரு புத்தகம் எழுதினால், அதை மக்கள் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அறிவாளிகள். எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், ‘படிக்காதீங்க’ என்று பிறவி அடிப்படையில் தடுத்தார்கள். அதுமட்டுமல்ல , யார் படிக்கலாம் தெரியுமா? எங்கள் உயர் ஜாதிக்காரர்கள்தான் படிக்க வேண்டும் என்று மனு தர்மத்தில் எழுதியிருக்கிறது.
102 ஆவது ஸ்லோகம் – அந்த பிராமணனுடையவும், மற்றவருடைய கர்மானுஷ்டானங்களை பகுத்தறி வதற்காக இந்த சாஸ்திரத்தை யோனியில்
பிறவாத புத்திசாலியான சுயம்பு மனுவானவர் இயற்றினார்.
அதாவது வழக்கமாக எப்படி குழந்தை பிறக்குமோ, அந்த வழியில் வருகிறவர்கள் அல்ல. இவர்கள் எல்லாம் தானே வந்தவர்கள்; தானே கிளம்புகிறவர்கள், சுயம்பு. இதற்கு என்ன அர்த்தம்? அறிவை எவ்வளவு பாழ்படுத்துகிறார்கள் பாருங்கள். ‘யோனி’ வழியாக அவர்கள் பிறக்கவில்லை. உங்களுக்கு அதை விளக்கிச் சொல்லவில்லை.
நாக்கை அறுக்கவேண்டும்;
காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்!
அடுத்த ஸ்லோகம், ‘‘மனுசாஸ்திரத்தினை அறிந்த பிராமணனாலே முயற்சியுடன் இந்த சாஸ்திரம் ஓதத்தக்கது. அவர்களுக்கு ஓதுவிக்கத்தக்கது. மற்ற வருணத்தானுக்கு இதை ஓதுவிக்கக்கூடாது.’’
மற்றவர் ஓதக்கூடாது. மீறி ஓதினால், அவர்களுக்குத் தண்டனை. நாக்கை அறுக்கவேண்டும். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்.
அன்றைக்கு அப்படிச் செய்திருக்கலாம். இன்றைக்கு அதுபோன்று நாக்கை அறுக்க முடியாது. ஏனென்றால், பெரியார் இருக்கிறார். கருப்புச் சட்டைப் படை இருக்கிறது; திராவிட இயக்கம் இருக்கிறது. அதற்குப் பதிலாக என்ன செய்தார்கள் என்றால், ‘நீட்’ தேர்வைத் திணித்திருக்கிறார்கள். முறை மாறுகிறது, நம்முடைய பிள்ளைகளின் படிப்பில் சுருக்குப் போட்டுவிட்டார்கள்.
‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி?’’
இந்த நீட் தேர்வு எதற்காக? 120 பேருக்கு மேலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை உண்டா? என்றால், இந்த இரண்டு புத்தகத்தில் விளக்கிச் சொல்லியிருக்கின்றோம். ‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி?’’ என்ற தலைப்பில்.
நம்மாட்கள் புரியாமல் தலையாட்டுவார்கள்; ஏனென்றால், தலையாட்டியே பழக்கம். பெருமாள் மாட்டை அழைத்துக் கொண்டு வருவார்கள்; அது தலையை தலையை ஆட்டும். அதுபோல, நம்மாட்கள் தலையாட்டும் போது, பெரியார்தான், ‘‘உன்னை சிந்தித்துப் பார்’’ என்றார்.
‘‘நீட் தேர்வு என்பது நல்லதுதானே! தகுதி, திறமை எல்லாம் நமக்கு வருமே! தனிப்பட்ட முறையில் மருத்துவப் படிப்பிற்குத் தேர்ந்தெடுப்பார்கள். அதனால், ஊழல் நடந்தது’’ என்றெல்லாம் சொன்னார்கள். இப்பொழுது என்ன நடந்தது? ‘‘ஊழலுக்கு அப்பன் ஊழல் நடக்கிறது!’’ உச்சநீதிமன்றத்திேலயே தெளிவாக இதை எடுத்துச் சொன்னார்கள். எல்லா வகையிலும் ஊழல், ஊழல், ஊழல். அதனுடைய விளைவுதானே கரப்பான்பூச்சிக் கட்சி. அதனுடைய விளைவுதானே டில்லியில் மாணவர்களின் கிளர்ச்சி. இன்றைக்கும் நீட் தேர்வை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சரை
மாற்றினால் மட்டும் போதுமா?
காலையில் கூட நான் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டேன். மாணவர்களைக் கூட திசை திருப்பிவிட்டார்கள். வடநாட்டு மாணவர்களுக்குப் புரியாது. தமிழ்நாட்டின் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் உண்மை என்னவென்று தெரியும். நண்பர்களே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தர்மேந்திர பிரதான் என்ற அமைச்சரை மாற்றினால் போதுமா? அமைச்சரை மாற்றுங்கள், மாற்றுங்கள் என்று இவ்வளவு மாணவர்கள், போராட்டம் நடத்தி அடிவாங்கினார்கள்.
அமைச்சரை மாற்றுவதால், எந்தப் பயனும் இல்லை. மோடி ஆட்சியில் அவர் ஓர் அமைச்சர். அங்கே ஆர்எஸ்எஸ் என்ன சொல்லுகின்றதோ, அதை அவர் செய்யப் போகிறார். இப்பொழுது அவருக்குப் பதிலாக இன்னொருத்தர் பிரகலாத் ஜோஷி என்பவர் அமைச்சராகி இருக்கிறார். அவர் உயர்ஜாதிக்காரர். பிரதான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது உயர்ஜாதிக்காரரே வந்ததால், அதே வேலையை, இன்னும் வேகமாகச் செய்யப் போகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. ஆகவே, இதை எதிர்த்து, யார் பேசுவது? நீட் தேர்வின் கொடுமையால், அனிதாவில் ஆரம்பித்து, 120 பிள்ளைகளுக்குமேல் உயிர் பறிபோயிருக்கிறது.
அதேபோலத்தான், EWS என்கிற உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு. நாம் அரும்பாடுபட்டு, நம்முடைய தலைவர்கள் போராடி, பெரியார் பாடுபட்டு, வகுப்புரிமை என்று சொல்லக்கூடிய அந்த உரிமை நம்முடைய இயக்கத்தினால் வந்ததினால்தான், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் டாக்டராகி இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே 69% இருக்கிற
ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு!
நாங்கள் ஊர்வலம் போகும்போது, ‘‘கான்ஸ்டபிள் எல்லாம் நம்ம ஆளு; அய்ஜி எல்லாம் அவாளுன்னு’’ சொன்னோம். இப்பொழுது அய்.ஜி. எல்லாம் மாறியிருக்காங்க. எப்படி? இட ஒதுக்கீடு. இந்தியாவிலேயே 69% இருக்கிற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு. எப்படி வந்தது? சரஸ்வதி பூஜையினால் வந்ததா? ஆயுத பூஜை கொண்டாடியதால் வந்ததா? இந்த இயக்கம் அரும்பாடுபட்டு, திராவிட இயக்கம் சட்டம் அமைத்து எழுதிக் கொடுத்ததினால் வந்தது.
நம்ம பிள்ளைகள், உத்தியோகத்துக்குப் போகிறார்கள்; அந்த உரிமையை அனுபவிக்கிறார்கள். அதற்கு யார் காரணம்? என்று நம்முடைய மக்களுக்குத் தெரியாது. அதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, இன்றைக்கு ஏற்பாடு செய்து, அதில் 10% உயர்ஜாதிக்காரர்களுக்கு, ஏழைகளுக்கு இல்லீங்க. உயர்ஜாதி ஏழைகளுக்கு! நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள், நம்முடைய பங்கை எடுத்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று சொன்னால், நமக்கு வரவேண்டிய பங்கு போய்விடுகிறது. நாம் காலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம்; இப்பொழுதுதான் கொஞ்சம் தலையெடுத்து வருகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது நண்பர்களே!
பொருளாதார அடிப்படையில் 9000 ரூபாய் வருமான வரம்பினை எம்ஜிஆர் கொண்டு வந்ததினால், அவருடைய ஆட்சியே ஆடிப் போயிற்று. அதனால்தான் திராவிடர் கழகம் போராடியது; எம்ஜிஆர் அவர்கள் அதனை உணர்ந்தார், அவரை உணர வைத்தோம். அதனால், எம்ஜிஆருக்கு ஏற்பட்டது தோல்வி மட்டுமல்ல, எங்கே பார்த்தாலும் அந்த 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையைக் கொளுத்தி, கோட்டைக்கே சாம்பல் அனுப்புகிற இயக்கம் நடத்திய இயக்கம், இந்த இயக்கம்.
ஒரு மணி நேரம் விளக்கிச் சொன்னோம்!
அப்படி நடந்த உடனே, முதலமைச்சர் எம்ஜிஆர் யோசனை செய்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஒரு மணி நேரம் விளக்கம் சொன்னோம். அவருக்கு அப்பொழுதுதான் புரிந்தது. நாங்கள் சொன்னோம், ‘‘அய்யா இட ஒதுக்கீட்டில், வருமான வரம்பு என்ற பொருளாதார அளவுகோலை ஏன் வைக்கவில்லை? அரசியலமைப்புச் சட்டத்தில், சமுதாய ரீதியாக, வகுப்புவாரி உரிமை செல்லாது என்றவுடனே, பெரியார் போராடி, 1950 ஆம் ஆண்டு 15 நாள்களில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். ‘‘socially and educationally backward classes of people’’ என்று வந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்றால், socially – சமூக ரீதியாக, educationally – கல்வி ரீதியாக என்று உறுதியானது. அப்பொழுது நேரு பிரதமராக இருந்தார். எல்லோரும் சேர்ந்து, பொருளாதார ரீதியாக (Economically) என்று போட்டுக் கொள்ளலாம் என்றார்கள். அதற்குக் காரணம் சொன்னார்கள். ஆனால், பொருளாதாரம் நிலையானது அல்ல. சமூக இழிவு, ஜாதியை வைத்து வந்ததற்கு, ஜாதி என்பதுதான் சரியான அளவுகோல். அந்த ஜாதியால், கல்வி படிக்க முடியவில்லை என்கிற அளவுகோலை வைத்து, அந்த வாய்ப்பு வருகிறது. ஆனால், பொருளாதார ரீதியாக என்றால், இந்த ஆண்டு வருகின்ற பொருளாதாரம் வேறு; அடுத்த ஆண்டு அதே வருமானம் கிடையாது. ஆண்டுக்காண்டு வருமானம் மாறும். ஆகவேதான், பொருளாதார ரீதியாக என்று சொல்லுவதா? அதன்படி நிரந்தர அளவு கொடுக்கத் தகுதி இல்லை’’ என்று எடுத்துச் சொன்னோம்.
முதலில், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் புரியவில்லை. பார்ப்பனர்கள், பொருளாதார வரம்புப்பற்றிச் சொன்ன உடனே, ‘‘பலே பலே’’ என்றார். இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்சின் கொள்கை, இன்றைக்கு அதுதான்.
இட ஒதுக்கீடு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்கிறார்கள்!
தற்போது ‘‘இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும், ரிசர்வேஷன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், இட ஒதுக்கீடு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’’ என்று ஒரு கட்சியைப் பார்ப்பனர்கள், வடநாட்டில் உருவாக்கி இருக்கிறார்கள்.
(தொடரும்)
