திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் இளையபட்டக்காரர் அர்ச்சுனன் நினைவுநாள் இன்று (12-10-1946)
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் அழைப்பை ஏற்று இயக்கத் தொண்டாற்றிய இளைஞர்கள் படையில் முன்னணியில் நின்றவர் தான் பழையகோட்டை இளையபட்டக்காரர் ந.அர்ச்சுனன். இவர் 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாளில் பிறந்தார்.
முழுமூச்சாய் இயக்கத்துக்கு உழைத்தவர்
ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் இளையமகனும், ஊத்துக் குளி ஜமீன்தார் அவர்களின் மைத்துனரும், தோழர் வி.சி.வெள்ளியங்கிரி அவர்களின் உடன்பிறந்தாரின் மருமகனுமான பழைய கோட்டை இளையபட்டக்காரர் ந.அர்ச்சுனன் அவர்கள் ஓர் இலட்சம் ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான கால் நடைகளைக் கொண்டு (குறிப்பாக காங்கேயம் இரக மாடுகளாகும்) வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும் இவற்றையெல்லாம் பெருமையாகக் கருதாத தோழர் ந.அர்ச்சுனன் அவர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பரப்பும் தீவிரத் தொண்டராய் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
மின்னல் வெட்டாய் இயக்கத் தொண்டு
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்ப தனது 20 ஆம் அகவையில் இயக்கத்தில் இணைந்து கொண்ட தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள் நீதிக்கட்சியும் – சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமாக உதயமானபோது, கழகத்தின் நிருவாக சபை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது அயராத இயக்கத் தொண்டினால் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் ஆனார். மேலும், கோவை மாவட்ட சாரணர் இயக்க உதவி ஆணையராகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.
கழகத்தின் முதல் பொருளாளர் – கழகக்கொடியை தமிழ்நாடெங்கும் கொண்டு சென்றவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன்
நம்முடைய தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இளம் வயதில் முடிவெடுத்து தந்தை பெரியார் தலைமையில் களப்பணியாற்றியவர்.
தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையிலே நடை போட்டு, மதுரையில் நடைபெற்ற கருப்புச் சட்டை மாநாடு போன்ற இயக்க நிகழ்வுகளுக்கு முழுமூச்சோடு முன்னின்று பாடுபட்டவர்.
1940 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரியார் இந்த இயக்கத்தை வளர்ப்பது சிறு வயது இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டார். பழையகோட்டை, இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் அர்ச்சுனன். தந்தை பெரியாரின் கொள்கைகளால் இருபது வயதிலேயே ஈர்க்கப்பட்டு, அவரது தளபதியாகத் திகழ்ந்தவர். தமிழ்நாடெங்கும் பயணித்து பெரியாரின் பகுத்தறிவு-சுயமரியாதை கருத்துகளை முழங்கியவர். பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அர்ச்சுனன் முன்வைத்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டி, செயலாற்றலுக்குத் துணை நின்றன. திராவிடர் கழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனப் பெரியார் திட்டமிட்டார்.
கொள்கையாளரின் குருதியில் வடிவமைக்கப் பட்டது திராவிடர் கழகக் கொடி, சமுதாய இருளை அகற்றி, புரட்சி வெளிச்சம் பரவவேண்டும் என்ற அடையாளமான அந்தக் கொடியை பல ஊர்களிலும் ஏற்றியவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன்.
தொண்டு வாழ்வில் உச்சம் தொட்டு, இயக்கத்திலும், இயக்கக் குடும்பத்தவர் உள்ளங்களிலும் தனக்கோர் தனித்த இடம் பெற்ற தோழர் ந.அர்ச்சுனன் அவர்கள் மின்னல் தோன்றி மறைவதுபோல 1946 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாளில் தமது 23 ஆம் வயதிலேயே இயற்கை எய்தினார்.
“குடிஅரசு” இதழ் வெளியிட்டிருந்த தலையங்கத்தி லிருந்து சில பகுதிகள்
தந்தை பெரியார் அவர்கள் அர்ச்சுனன் மறைவுக்காக வருந்துவதைப்போல் இதுவரை யாருக்காகவும் வருந்தி இருக்க மாட்டார் என்று கூறலாம். ‘‘அர்ச் சுனனைக் கொண்டு நம் இயக்கம் எவ்வளவோ நலமடையுமென்று கருதியிருந்தேன். அது இல்லாமல் போயிற்று’’ என திராவிட மக்களுக்கு நல்வாய்ப்பு இல்லை என்று சொல்லிச் சொல்லி பெரியார் அவர்கள் வருந்தியிருக்கிறார். அதனால் தமது சுற்றுப் பிரயாணங்களையும் நிறுத்திவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் பெரியார்.
“திராவிடர் கழகம் தனது உண்மையான பணியாளர்கள் பலரை இழந்து வருகிறது என்றாலும், ஏ.டி.பன்னீர்செல்வம், சி.டி.நாயகம் ஆகியவர்களைப் போலவே வேறு ஈடு செய்ய முடியாத ஒப்பற்றவராகிய அர்ச்சுனனை இழந்தது. திராவிட மக்களுக்கு நல்ல வாய்ப்பளிக்க இயற்கையே வஞ்சனை செய்கிறது. துரோகம் செய்கிறது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அர்ச்சுனன் மறைவினால் எதற்கும் கலங்காத தந்தை பெரியார் அவர்களும், திராவிட மக்களும் கண்ணீர் விட்டார்கள். திராவிடர் சமுதாயம் தன்மானத்தையும், தன் இரத்த சுத்தத்தையும் சிறிது நேரமாவது நினை வுறுத்திப் பார்க்குமேயானால் ஒவ்வொருவரும் செல்வம், நாயகம், அர்ச்சுனன் போல் தானேயாகி விளங்கி மனிதத் தன்மை அடைவார்கள் என்பதில் அய்யமில்லை. திராவிட இளைஞர்கள், செல்வர்கள் அர்ச்சுனன் மறைவால் உணர்ச்சி பெற்று, அர்ச்சுனன் இடத்தைப் பூர்த்தி செய்வார்களாக”
–”குடிஅரசு” இதழ் தலையங்கம் -19.10.1946
இவ்வாறாக “குடிஅரசு” இதழ் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
திராவிடர் கழக இளைஞர்களுக்கு தளபதி
ந. அர்ச்சுனன் வழிகாட்டியாவார்.
