பெங்களுரு, அக்.08 கருநாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய கருநாடக நீர்வளத்துறை அமைச்சர் என். செலுவராயசுவாமி, மேகதாது விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேகதாது திட்டத்திற்கு வரும் மார்ச் மாதத்திற்குள் உறுதியாக அடிக்கல் நாட்டப்படும் என அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தால் மூழ்கடிக்கப் பட உள்ள வனப்பகுதிக்கு மாற்றாக, 13 மாவட்டங்களில் இதுவரை 2,000 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், 3,000 ஹெக்டேர் உத்தேச வன நிலம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.
மேகதாது திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது பெங்களூருவின் 6-ஆம் கட்ட குடிநீர் திட்டத் தேவை களுக்கும் தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் பகிர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள்: இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், காவிரி நீர் பகிர்வு நெருக்கடிக்கு மேகதாது திட்டம் ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும் எனவும் கூறினார்.
ஒன்றிய அரசின் அனுமதி
இத்திட்டத்திற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதோடு, விரிவான திட்ட அறிக்கை (DPR) 99 சதவீதம் தயாராகிவிட்டது. மேலும், ஒன்றிய ஜல் சக்தி ஆணையத்திடம் மேல் முறையீடு சமர்ப்பிக்கப்பட்டு, டில்லி அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
