முற்றிலும் சீர்குலைந்த சட்டம்– ஒழுங்கு மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 8- ‘தமிழ்நாட்டில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு உள்ளது. சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்ற வாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழல் உருவாகியுள்ளது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மின் வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு தலை தூக்கி யுள்ளது. மாநிலம் முழு வதும் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து ரத்தச் சகதியில் சிக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நடந்துள்ள கொடூரச் சம்பவங்களே இதற் குச் சான்றாகும்.

பல்வேறு குற்ற சம்பவங்கள்

சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருத் தணியில் 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை, வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் என்ற மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்
பட்டுள்ளன.

திண்டுக்கல், சாணார் பட்டியில் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பிய வீரபத்திரன் என்பவர், மனைவி கண்முன்னே வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். மதுரை, சமய நல்லூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் நிர்வாண மாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோழ வந்தானில் டாஸ்மாக் கடை அருகே சியாம் சுந்தர்ராஜன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எண்ணூரில் ரயில் நிலையத்திலேயே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது.

அராஜகத்துக்கு எப்போது முடிவு?

பட்டப்பகல், நள்ளிரவு என்ற பாகு பாடின்றி தமிழ் நாடு ரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் வெளியிலும் மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவு கிறது. காவல் துறையினர் ரோந்துப் பணி யில் ஈடுபடுகிறார்களா? சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ‘ரீல்ஸ்’ போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்கள் பாதுகாப்பில் காட்டுவார்களா? காவல் நிலையத்தில் புகார ளித்தும் நடவடிக்கை எடுக்காத அராஜ கத்துக்கு எப்போது முடிவு வரும்?

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, சாக்குபோக்கு கூறாமல் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *